ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரைப்பட நடிகர் போண்டா மணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று இன்று (செப்டம்பர் 22) நலம் விசாரித்துள்ளார்.
இலங்கையில் இருந்து அகதியாக வந்து பின்னர் தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அடையாளம் பெற்றவர் போண்டமணி. 1991ம் ஆண்டு வெளிவந்த ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகர்களான விவேக் மற்றும் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்து போண்டா மணி கவனம் பெற்றார்.

சிறுநீரகங்கள் செயலிழப்பு!
இந்நிலையில், இதயக் கோளாறு காரணமாக கடந்த மே மாதம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் போண்டா மணி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
தற்போது அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் போண்டா மணி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து நேற்று அவரது நண்பரும், சக நடிகருமான பெஞ்சமின் கண்ணீருடன் உதவி கேட்டு வெளியிட்ட காணொலி பலரையும் கண்கலங்க வைத்தது.

முதலமைச்சர் மனசு வைச்சா முடியும்!
இதனை தொடர்ந்து தன்னிடம் பேட்டியெடுக்க வந்த செய்தியாளர்களிடம் பேசிய போண்டா மணி, ”சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் போன் செய்து அடிக்கடி உடல்நலம் விசாரிக்கிறார்.
நாளை நேரில் வந்து பார்க்க வருவதாக கூறியுள்ளார். சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்தால் சில காலம் உயிர் வாழ முடியும்னு சொல்லியிருக்காங்க. முதலமைச்சர் மனசு வைச்சா அது முடியும்” என்று பேசியிருந்தார்.
மருத்துவ செலவை அரசே ஏற்கும்!
இந்நிலையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

அப்போது, ”உறவினர்கள் யாராவது கிட்னி கொடுக்க தயாராக இருந்தால் அல்லது உறுப்பு தானம் செய்தால் அரசு காப்பீட்டு திட்டத்தில் உங்களுக்கு அறுவை சிகிச்சை நடக்கும்.
உங்களுக்கு எந்த செலவும் இருக்காது. பயப்படாதீங்க.. நான் இருக்கிறேன் என போண்டா மணிக்கு தைரியம் கூறினார்.
தொடர்ந்து போண்டா மணிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
நேற்று அடக்கம் செய்யப்பட்டவர் இன்று திரும்பி வந்தார்! எப்படி?