மாடலும் நடிகருமான மிலிந்த் சோமன் கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இது மிலிந்த் சோமனின் இரண்டாவது திருமணம் ஆகும். தற்போது 59 வயதாகும் மிலிந்த் சோமனுக்கும் அவரின் மனைவி அங்கீதாவுக்கும் 26 வயது வித்தியாசம் இருக்கிறது. எனினும், மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அங்கீதாவுக்கும் பிட்னெஸ் மீது அலாதி பிரியம். அதனால், இந்த வயதிலும் இளைஞர் போல உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் மிலிந்த் சோமனை விரும்பி மணந்து கொண்டார். 33 வயதாகும் அங்கீதா அஸ்ஸாமை சேர்ந்தவர். மிலிந்த் சோமன் மகராஸ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்.

இது குறித்து மிலிந்த் சோமன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறியதாவது,
‘எனது மனைவியின் சிந்தனை, அவர் வளர்ந்த சூழல் ஆகியவற்றில் பெரிய வித்தியாசம் உள்ளது. எனது மனைவியின் கருத்துக்கள் அனைத்தும் வித்தியாசமானவை, நம்பமுடியாதவை. அவர் அசாம் மாநிலத்தையும் நான் மகாராஷ்டிராவையும் சேர்ந்தவன். வெவ்வேறு மொழிகள் மற்றும் வெவ்வேறு உணவுப் பழக்கங்களைக் கொண்டவர்கள். எனினும் கூட நாங்கள் ஒருவரையொருவர் கண்டுபிடித்து, உணர்வுகள் மற்றும் ஆத்மாக்களை ஒன்றிணைந்து கொண்டோம். இதுதான் எங்கள் வாழ்க்கையில் நடந்த சிறப்பான சம்பவம். எனது மனைவியால் என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமைந்தது என்று நிச்சயமாக சொல்ல முடியும் ‘என்கிறார்.
மிலிந்த் சோமனை திருமணம் செய்தது குறித்து அங்கீதா கூறுகையில், ‘நீங்கள் இளமையாக இருக்கும்போது, நிறைய விஷயங்களை உணர மாட்டீர்கள் . எதிர்காலத்திற்கான திட்டங்களையும் தீட்டமாட்டீர்கள். ஆனால் வயது வித்தியாசம் உள்ள ஒருவருடன் வாழும் போது, ஒவ்வொரு விநாடியும் சிறப்பாக உணர முடிகிறது. எனது வாழ்க்கையை நான் நன்றியுடன் பார்க்கிறேன்’ என்கிறார்.