Michael review

விமர்சனம்: சந்தீப்பை ‘ஸ்டார்’ ஆக்குமா மைக்கேல்

சினிமா

படம் பார்க்க உட்கார்ந்தவுடனேயே, ‘இது அந்தப் படம் மாதிரி இருக்கே’ என்று சொல்வது ரசிகர்களின் வழக்கம் தான். ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதே போன்று இன்னொன்றை உருவாக்குவதும் படைப்பாளிகளின் பழக்கம் தான்.

ஏதேனும் ஒரு பாடலைக் குறிப்பிட்டு ‘இதே மாதிரி பாட்டு கொடுங்க, இதே மாதிரி மியூசிக் தாங்க’ என்றால் ‘அதையே தருகிறேன்’ என்று சில இசையமைப்பாளர்கள் கீபோர்டை உருட்டுவார்கள். அப்படித்தான் கேஜிஎஃப் 1 மற்றும் 2ஆம் பாகம் பார்த்துவிட்டு, ‘இதே மாதிரி ஒரு படம் பண்ணனும்’ என்று இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியிடம் நாயகன் சந்தீப் கிஷன் கேட்டிருப்பார் போல.

உடனே, ‘கேஜிஎஃப்’ போலவே அச்சு அசல் ‘மைக்கேல்’ இருக்கிறதா என்று கேட்கக் கூடாது. மீறிக் கேட்டால், ’ஆமாம்’ என்றும் ‘இல்லை’ என்றும் ஒருசேரத் தலையாட்ட வேண்டியிருக்கும்.

தாதா ஆகும் லட்சியம்!

ஒரு ஏழைச் சிறுவன் மும்பைக்குச் செல்கிறான். யாரோ ஒருவரைத் தேடி வந்திருக்கிறான் என்பது தெரிகிறது. வந்த இடத்தில், வேலை செய்த பெண்ணுக்குப் பணம் தராமல் இழுத்தடிக்கும் ஹோட்டல் முதலாளியைத் தாக்கி கல்லாவில் கை வைக்கிறான். இதைச் சொன்னதுமே, அந்த பையன் ஒரு ‘குட்டி ராபின்ஹூட்’ என்று தெரிந்திருக்கும்.

அதே பையன், நீதிமன்ற வாசலில் நிற்கும் தாதா குருநாத்தை (கவுதம் வாசுதேவ் மேனன்) ஒரு மனிதன் தாக்க வருவதைத் தடுக்கிறான். அப்புறமென்ன, ‘இவன் நம்மகிட்டயே வளரட்டும்’ என்று சொல்கிறார் தாதா. அவரது நண்பரும் (அய்யப்பா) சரி என்கிறார். அந்த பையன் பெயர் தான் மைக்கேல். வழக்கம்போல, அச்சிறுவன் வளர்ந்து பெரியவன் ஆகிறான்.

எப்படியாவது நற்பெயர் வாங்கி குருநாத் அருகில் செல்வதே மைக்கேலின் (சந்தீப் கிஷன்) எண்ணம். அதற்கான சந்தர்ப்பமும் அமைகிறது. குருநாத்தைக் கொல்ல வரும் கும்பலிடம் இருந்து மீண்டும் அவரைக் காக்கிறார் மைக்கேல். அவரது நெருக்கமான வட்டத்திற்குள் வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, தன்னைக் கொல்லத் திட்டமிட்டவரையும் அவரது மகளையும் (திவ்யான்ஷா) கொல்ல மைக்கேலை டெல்லிக்கு அனுப்புகிறார் குருநாத். மைக்கேல் அதனைச் செய்யவில்லை. மாறாக, குருநாத்தை கொல்லச் சொன்னது யார் என்று கண்டுபிடிக்கிறார். கூடவே, அந்தப் பெண் மீது காதல்வயப்படுகிறார்.

குருநாத் உண்மையை அறிவதற்கு முன்னதாகவே, அவரது மகன் மைக்கேலையும் அந்தப் பெண்ணையும் கொல்ல முயற்சிக்கிறார். குருநாத்தைக் கொல்ல வந்தது யார்? அதனை மைக்கேல் தடுக்க காரணம் என்ன? அந்தப் பெண் மைக்கேலின் காதலியா? இந்தக் கேள்விகள்தான் மைக்கேல் படத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துகின்றன.

தமிழ் சினிமாவில் ‘கேங்க்ஸ்டர்’ படங்களைத் தேடித் தேடிப் பார்த்தவர்களுக்கு, இதில் அடுத்த காட்சி இப்படித்தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியும். தாதா ஆகும் லட்சியத்தை நாயகன் கொண்டிருப்பதற்கான காரணம் கூட அரதப்பழசுதான்.

Michael movie review

அசத்தும் சாம் சிஎஸ்!

இந்த படத்தை எதற்காகப் பார்க்க வேண்டும் என்று கேட்டால், தைரியமாக இசையமைப்பாளர் சாம் சிஎஸ்ஸை கைகாட்டலாம். அந்த அளவுக்கு, காட்சிக்கு காட்சி பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். அவரது இசை சில இடங்களில் காட்சியை விடவும் முன்னுக்கு நிற்கிறது. ஆனால், அது கொண்டாட வைப்பதாக இருப்பதால் துருத்தலாகத் தெரிவதில்லை.

இசைக்கு அடுத்தபடியாக, கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவு நம் கண்களைக் கவ்வுகிறது. கேஜிஎஃப் பாணியில் இரண்டு மூன்று காட்சிகளை ‘இண்டர்கட்’டில் கோர்த்து விறுவிறுப்பூட்டியிருக்கும் சத்யநாராயணனின் படத்தொகுப்பு இடைவேளைக்குப் பின்னான காட்சிகளின் தொய்வையும் சரி செய்திருக்கலாம்.

தொண்ணூறுகளில் கதை நிகழ்வதாக காட்டப்பட்டாலும், டெல்லியையும் மும்பையையும் காட்ட அந்தக்கால நினைவுச்சின்னங்களையோ புகழ்பெற்ற இடங்களையோ காந்தி கலை வடிவமைப்பு பயன்படுத்தவில்லை.

கிஷனுக்கு இதில் ஆக்‌ஷன் ஹீரோ வேடம். அதனை ரசிகர்கள் உணர்வதற்காகவே, உடலை ‘பிட்’ ஆக்கியிருக்கிறார். ஒருகாலத்தில் கன்னடம், தெலுங்கு, தமிழ் மூன்றிலும் ரசிக்கிற ஹீரோவாக அர்ஜுன் இருந்தார். கிட்டத்தட்ட அதே போன்றதொரு வரவேற்பு சந்தீப்புக்கும் கிடைத்து வருகிறது. அதனைத் தக்கவைக்க, ஒவ்வொரு மொழியிலும் நல்ல படங்களைத் தந்தாக வேண்டும்.

சந்தீப்பின் ஜோடியாக வரும் திவ்யான்ஷாவுக்கு அளவான காட்சிகள். ஆனால், இன்னும் கொஞ்சம் அழகாக காட்டியிருக்கலாமே என்று எண்ண வைத்திருக்கிறார்.

இவர்களைத் தவிர்த்து படம் முழுக்க கவுதமின் ஆட்டம் தான். அதற்கேற்றவாறு காட்பாதர், கிழவனும் கடலும் என்று ஆங்கில நாவல்கள் வாசிக்கிற ‘கிளாசிக்’ டான் ஆக வருகிறார். பார்க்கச் செயற்கையாகத் தெரிந்தாலும், கமர்ஷியல் படத்தில் கேங்ஸ்டர் இப்படித்தான் இருப்பார் என்றே எடுத்துகொள்ள வேண்டியிருக்கிறது. கிளைமேக்ஸில் தன்னைக் கொல்ல உத்தரவிட்டது யார் என்பதையறிந்து சந்தீப்புக்கு பதில் சொல்லுமிடத்தில் மட்டுமே ’தான் ஒரு கிளாசிக் டான் தான்’ என்று உணர வைத்திருக்கிறார் கவுதம்.  

அவரது மனைவியாக வரும் அனுசுயாவும் கூட வெகு எளிதாக கோபத்தையும் சோகத்தையும் பிரதிபலித்திருக்கிறார். கவுதமின் மகனாக வரும் வருண் சந்தேஷ் நம்மூர் பசுபதி, ரகுவரன், பிரகாஷ்ராஜ் உட்படப் பலரும் நடித்த பாத்திரமொன்றை ஏற்றிருக்கிறார். ஒருகாலத்தில் அவர் காதல் நாயகனாக நடித்தார் என்பதை அறிந்தவர்களுக்கு, இவ்வேடம் ஆச்சர்யம் தரும்.

படத்தில் கதைசொல்லியாக வரும் அய்யப்பாவைத் தாண்டி விஜய் சேதுபதியும் வரலட்சுமியும் நம்மை ஈர்க்கின்றனர். கடைக்கோடி ரசிகனை கொஞ்சமாய் ‘கேங்க்ஸ்டர்’ கசடுகளில் இருந்து விடுவிப்பது அக்காட்சிகள் தான்.  

பெண்ணினத்தை ‘உயிர் வாழ எதையும் செய்பவர்கள்’ என்று நினைக்கும் ஒருவருக்கும், பெண்ணைப் போன்ற அற்புதத் திருவுருவம் வேறில்லை என்று நினைக்கும் இன்னொருவருக்குமான மோதல் தான் அடிப்படைக் கதை. அதனைச் சில இடங்களில் சூப்பராகவும் சில இடங்களில் சுமாராகவும் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.

ஒரு பக்கக் கதை!

ஒரு பக்கத்தில் எழுதிவிடக்கூடிய கதையைக் கையில் எடுத்துக்கொண்டு, ரஞ்சித் ஜெயக்கொடி அதற்குத் திரைக்கதையை வரைந்த விதம் அபாரம். ஆனால், அப்பட்டமாக ’கேஜிஎஃப் காப்பி’ என்று சொல்லத்தக்க வகையில் ஏன் இறங்கினார் என்றுதான் தெரியவில்லை. அதற்குப் பதிலாக, மிகச்சாதாரணமாக நாயகனைக் குறிப்பிட்டு காட்சிகளின் வழியே சாகசமாய் அவற்றை மாற்றியிருந்தால் விசில் சத்தம் பெருகியிருக்கும்.

கமர்ஷியல் படம் எதுவென்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். சினிமாத்தனத்தையே யதார்த்தம் போலக் காண்பித்து ஏமாற்றுகிற உத்தி, கேங்க்ஸ்டர் கதைகளை வழக்கமான ‘மசாலா’ படங்களில் இருந்து வேறுபடுத்தும். அதேநேரத்தில் ஆக்‌ஷன் ஹீரோ பிம்பத்தைத் தாங்க நடிகர்களுக்கு உதவிகரமாக இருக்கும். அப்படித்தான் தெலுங்கிலும் தமிழிலும் சந்தீப்பை ‘ஸ்டார்’ ஆக்க முயன்றிருக்கிறது ‘மைக்கேல்’. அதேநேரத்தில், இது பெருவாரியான ரசிகர்களைச் சென்றடைய முடியாது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அனைத்தையும் தாண்டி உற்சாகமூட்டும் இசையுடன் அற்புதமான காட்சியாக்கத்துடன் ஒரு கலர்ஃபுல் படம் பார்க்க வேண்டுமென்பவர்களுக்கு மட்டுமே ‘மைக்கேல்’ இனிக்கும்!

உதய் பாடகலிங்கம்

காந்தாரா 2 கதை என்ன? எப்போது ரிலீஸ்?

பழனிக்கு பாதயாத்திரை: விபத்தில் பெண் பலி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *