இயக்குநர் ஆண்டாய்ன் ஃபூகா இயக்கத்தில் உருவாகும் உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞர் மைக்கல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான ‘மைக்கேல்’ படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்.18ஆம் தேதியே வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது படக்குழுவால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் ஜெரமைன் ஜாக்சனின் மகனான ஜாஃபர் ஜாக்சன் இந்தப் படத்தில் மைக்கேல் ஜாக்சனாக நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் கால்மன் டொமிங்கோ, நியா லாங், மைல்ஸ் டெல்லர், லாரா ஹாரியர், டெரெக் லூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் திரைக்கதையை ’கிளேடியேட்டர்’, ‘தி ஏவியேட்டர்’ , ‘ஹுகோ’ போன்ற புகழ்பெற்ற படங்களுக்கு திரைக்கதை எழுதிய ஜான் லோகன் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தில் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், அவரின் உலகப் புகழ்பெற்ற இசை ஆல்பங்கள் உருவான கதைகள், அவர் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சை உட்பட அனைத்தும் இடம்பெறவுள்ளன.
26 வயது நிரம்பிய ஜாஃபர் ஜாக்சனுக்கு இதுவே முதல் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ஆண்டாய்ன் ஃபூகா ஹாலிவுட் புகழ்பெற்ற ‘இக்குவலைசர்’, ‘டிரைனிங் டே’, ‘கிங் அர்தூர்’, ‘புல்லட் டிரைன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆவார்.
மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு என்பதால், அவரின் இசைப் பயணத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில், இந்தப் ‘மைக்கேல்’ படத்தில் 30 பாடல்கள் இடம்பெறவுள்ளது. ‘கிங் ஆஃப் பாப்’ என அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சனுக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பாப் இசையின் நிகரில்லா ஆளுமையாக இருந்த மைக்கேல் ஜாக்சன் 15 கிராமி விருதுகள், 39 கின்னஸ் உலக சாதனை விருதுகள், ஒரு கோல்டன் குளோப் விருது உட்பட பாப் இசையில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….