மனதை நெகிழ வைக்கும் ‘த்ரில்லர்’!
ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படங்கள் எப்போதுமே இந்தி திரைப்படங்கள் மற்றும் திரையிசைக்கு மரியாதை செலுத்தும் படைப்புகளாகவே விளங்கி வருகின்றன. கூடவே முக்கியக் கலைஞர்களை நினைவூட்டும் விதமான காட்சியமைப்புகளும் அவற்றில் இருக்கும். அவரது முதல் படமான ‘ஏக் ஹசீனா தி’ தொடங்கி ’ஜானி கடர்’, ‘பத்லாபூர்’, ‘அந்தா துன்’ உள்ளிட்டவற்றில் அதற்கான தடங்களைக் காண முடியும். அவரது படங்கள் அனைத்துமே ‘த்ரில்லர்’ வகைமையின் வெவ்வேறு கிளைகளாக அமைந்திருக்கும். 2018இல் வெளியான ‘அந்தா துன்’ 30 கோடியில் தயாரிக்கப்பட்டு 450 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது இவரை மிகச்சிறந்த கமர்ஷியல் இயக்குனராகவும் அடையாளப்படுத்தியிருக்கிறது. அப்படிப்பட்டவர் விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் ஜோடியைக் கொண்டு இந்தி, தமிழ் மொழிகளில் ஒரு படத்தை இயக்குகிறார் என்பது எத்தனை பேரின் ஆச்சர்யங்களைச் சம்பாதித்திருக்கும்?
அந்த எதிர்பார்ப்பினை ‘மெரி கிறிஸ்துமஸ்’ பூர்த்தி செய்திருக்கிறதா? இருமொழிப்படம் என்பதைத் தாண்டி, தமிழில் பார்க்கும்போது ’இது ஒரு டப்பிங் படம்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறதா?
வீடு திரும்பும் மனிதன்!
நெடுங்காலத்திற்குப் பிறகு மும்பையிலுள்ள தனது வீட்டுக்கு வருகிறார் ஆல்பர்ட் ஆரோக்கியசாமி (விஜய் சேதுபதி). தாயின் ஈமச்சடங்குகளில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முந்தைய இரவு, அவர் ஒரு ரெஸ்டாரெண்டுக்கு செல்கிறார். அங்கு, ஒரு மனிதரைத் தற்செயலாகச் சந்திக்கிறார். ’டெடி பியர் வைத்துக்கொண்டு இருக்கும் குழந்தையிடமும் உடன் இருக்கும் பெண்ணிடமும் நான் சென்றுவிட்டேன் என்ற தகவலைச் சொல்லிவிடுங்கள்’ என்று கூறிவிட்டு ஓடிவிடுகிறார் அந்த நபர். ஆல்பர்ட்டும் அதனைச் செய்கிறார்.
அந்த பெண்ணும் குழந்தையும் ஆல்பர்ட்டின் மனதைத் தொடுகின்றனர். ரெஸ்டாரண்டை விட்டு வெளியே வந்தபிறகும் கூட, அவர்கள் இருவரையும் அவர் காண்கிறார். ஒரு தியேட்டருக்கு செல்கிறார். அங்கும் அவர்கள் வருகின்றனர்.
குழந்தை சீட்டிலேயே தூங்கிவிட, அதனைத் தூக்கிக்கொண்டு தியேட்டரை விட்டு வெளியே வருகிறார் அப்பெண். அப்போது, தற்செயலாக வெளியே வருகிறார் ஆல்பர்ட். மீண்டும் அவருக்குள் ஆச்சர்யம்.
அப்பெண்ணுக்கு உதவி செய்யும் நோக்கில், உடன் இணைந்து பயணிக்கிறார். அந்த குழந்தையைத் தூக்கிச் சுமக்கிறார். அப்படியே அப்பெண்ணின் வீட்டுக்குச் செல்கிறார்.
அந்தப் பெண்ணின் பெயர் மரியா (கத்ரினா கைஃப்). அவரது கணவர் ஜெரோம் ஒரு சந்தேகப் பேர்வழி. எப்போதும் அவரையும் குழந்தையையும் அடித்து துன்புறுத்துபவர். அன்றைய தினம், ஜெரோம் வீட்டில் இல்லை என்கிறார் மரியா. இசையை ஒலிக்கச் செய்துவிட்டு, குழந்தையைக் கட்டிலில் படுக்க வைக்கிறார். சில நிமிடங்கள் கழித்து மரியாவும் ஆல்பர்ட்டும் மது அருந்துகின்றனர். பின்னர் ‘காலாற வெளியே சென்று வரலாமா’ என்று மரியா கேட்க, ஆல்பர்ட்டும் சரி என்கிறார்.
சிறிது நேரம் கழித்து இருவரும் வீடு திரும்புகின்றனர். வீட்டுக்குள் நுழைந்தால், சோபாவில் ஜெரோம் பிணமாகக் கிடக்கிறார். அவரது கையில் துப்பாக்கி இருக்கிறது. நெஞ்சில் குண்டு துளைத்திருக்கிறது. அதிர்ச்சியில் உறையும் ஆல்பர்ட், போலீசுக்கு போன் செய்ய முயற்சிக்கிறார். ஆனால், முழுமையாக அதனைச் செய்வதில்லை.
மரியா திகைத்துப் பார்க்க, ‘நான் கொலை வழக்கில் சிறை சென்று இன்று காலையில்தான் விடுதலை ஆனேன்’ என்று சொல்கிறார் ஆல்பர்ட். அது மரியாவை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அதனைக் கேட்டதும், உடனடியாக அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு சொல்கிறார்.
மரியாவுக்கு உதவி ஏதும் செய்ய முடியாத கையறு நிலையில், சாலையில் வந்து நிற்கிறார் ஆல்பர்ட். அந்த வீட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சில நிமிடங்கள் கழித்து, வீட்டை விட்டு வெளியே வருகிறார் மரியா. தொடக்கத்தில் பார்த்ததைப் போலவே தனது குழந்தையுடன் நடந்து செல்கிறார். ரோந்து வரும் போலீசாரிடம், ‘சர்ச்சுக்கு செல்கிறேன்’ என்று கூறுகிறார். உடனே, ஒரு டாக்சியில் அவர்களை அனுப்பி வைக்கின்றனர் போலீசார்.
அதனைக் காணும் ஆல்பர்ட், அவரைப் பின்தொடர்ந்து செல்கிறார். தேவாலயத்தில் பிரார்த்தனையின்போது மயங்கி விழும் மரியாவை ரோனி (கவின் ஜெயபாபு) தாங்கிப் பிடிக்கிறார். ஆல்பர்ட்டிடம் பேசிய அதே வார்த்தைகளை அவரிடமும் உதிர்க்கிறார் மரியா. அதனை அருகில் இருந்து காண்கிறார் ஆல்பர்ட். ரோனியுடன் இணைந்து மரியாவையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
வீட்டுக்குள் நுழைந்தால், சோபாவில் ஜெரோமின் பிணம் இல்லை. அதிர்ச்சியின் உச்சத்தை அடையும் ஆல்பர்ட், அதன்பிறகு என்ன செய்தார்? மரியாவின் வீட்டில் என்ன நடக்கிறது? அக்கேள்விகளுக்கு மனதைத் தொடும் வகையில் பதில் தந்து நம்மை திருப்தியுறச் செய்கிறது ‘மெரி கிறிஸ்துமஸ்’.
நெடுங்காலம் கழித்து வீடு திரும்பும் சாதாரண மனிதன் ஒருவன் சந்திக்கும் அசாதாரணப் பிரச்சனைகளே, ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் அடிப்படை. தான் செய்த குற்றத்தை நினைத்து ஒவ்வொரு கணமும் வருந்தும் அம்மனிதன், எவ்வாறு அந்த குற்றவுணர்ச்சியில் இருந்து வெளியே வருகிறான் என்று சொன்ன வகையில் மனதை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது இந்த த்ரில்லர் திரைப்படம்.
அசத்தும் ‘காஸ்ட்டிங்’!
விஜய் சேதுபதி இதில் ஆல்பர்ட் ஆக நடித்துள்ளார். அவரிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கின்றனரோ, அதற்கு ஏற்ற காட்சிகள் இதில் உள்ளன.
கத்ரினா கைஃப் ஒரு உயர் நடுத்தர வர்க்கப் பெண்மணியாக இதில் தோன்றியுள்ளார். அழகுப் பெண் என்பதைத் தாண்டி, அவரிடம் நாம் ஈர்ப்பு கொள்ள எதுவுமில்லை. அதேநேரத்தில், அவரது இருப்பு ’துருத்தலாக’ தெரியவில்லை.
இதில் சிறப்பு தோற்றத்தில் காயத்ரி, ராதிகா ஆப்தே நடித்துள்ளனர். கிளைமேக்ஸில் வரும் அஸ்வினி கல்சேகரும் கூட கைத்தட்டலை அள்ளும்விதமான நடிப்பைத் தந்துள்ளார். அந்த வரிசையில், நான்கைந்து காட்சிகளில் தலைகாட்டி கான்ஸ்டபிளாக நடித்த ராதிகா சரத்குமாருக்கும் ஒரு இடம் உண்டு.
நெடுங்காலத்திற்குப் பிறகு ராஜேஷ் இதில் தோன்றியிருக்கிறார். ரோனியாக வரும் கவின் ஜெயபாபு மற்றும் இன்ஸ்பெக்டராக வரும் சண்முகராஜனின் நடிப்பும் ரசிகர்களை நிச்சயம் ஈர்க்கும்.
மொத்தம் ஒரு டஜன் பாத்திரங்களே இடம்பெறும் இக்கதையை வைத்துக்கொண்டு, நம்மை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருக்கையோடு கட்டிப் போடுகிறார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். பொருத்தமான ’காஸ்ட்டிங்’ மூலமாக நம்மை அசர வைக்கிறார்.
இரவு நேரம், விழாக்காலம், கூடவே, இருண்மை நிறைந்த இரு வேறு மனிதர்களின் மனநிலை. ஒளியமைப்பின் துணை கொண்டு, அத்தனையையும் நம் மனதுக்குள் இறக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன்.
நம்மூர் ஹாரிஸ் ஜெயராஜ், தேவா போல இந்தித் திரையுலகில் கொண்டாடப்படும் ப்ரீதம் இதில் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். பெரும்பாலான பாடல்கள் பழைய இந்திப்படங்களுக்கு அர்ப்பணம் செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி, காட்சிகளின் தன்மைக்கேற்ற வரிகளைக் கொண்டு நம் கவனத்தைக் கவர்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி.
பின்னணி இசையில் முழுக்கவே மேற்கத்திய திரையிசையின் வாசம். அதிலும், பின்பாதியில் ‘த்ரில்’ கூட்டும் டேனியல் பி ஜார்ஜின் பின்னணி இசையை கூடிய சீக்கிரம் தனியாகக் கேட்டு ரசிப்பார்கள் ரசிகர்கள்.
தொண்ணூறுகளின் இறுதியில் கதை நிகழ்வதாகக் காட்டுவதற்கேற்ப, மயூர் சர்மாவின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் அனைடா ஷெராஃப், சபீனா ஹால்தர் கூட்டணியின் ஆடை வடிவமைப்பு ஆகியன‘ரெட்ரோ பீலிங்’கை ஊட்டுகின்றன.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் படம்பிடிக்கப்பட்ட ஹாலிவுட் மற்றும் மேற்கத்திய படங்களைப் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது பூஜா லதா ஸ்ருதியின் படத்தொகுப்பு.
இவை தவிர ஒலி வடிவமைப்பு, டிஐ நுட்பம், ஒப்பனை, நடனம், சண்டை வடிவமைப்பு உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்கள் நம்மை ஈர்க்கும் வகையில் உள்ளன.
ஆங்காங்கே வரும் திருப்பங்கள் மூலமாக ஆச்சர்யங்களை அள்ளி வழங்கினாலும், இத்திரைக்கதையில் லாஜிக் மீறல்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். அதனைச் சரி செய்யும் நோக்கிலேயே, இக்கதை தொண்ணூறுகளில் நடப்பதாக வடிவமைத்துள்ளார் ஸ்ரீராம் ராகவன்.
ஒரு மேடை நாடகம் போன்றிருப்பதாகவும் இப்படத்தின் மீது முத்திரை குத்தலாம். அதற்கேற்ப, ப்ரெடரிக் டார்ட் எழுதிய ‘லீ மாண்டே ஜார்ஜ்’ எனும் பிரெஞ்ச் நாவலொன்றை அடிப்படையாகக் கொண்டது இக்கதை என்று ‘கிரெடிட்’ தந்துவிடுகிறார் இயக்குனர்.
ஸ்ரீராம் ராகவன் உடன் இணைந்து அர்ஜித் பிஸ்வாஸ், அனுக்ருதி பாண்டே, பூஜா லதா ஸ்ருதி ஆகியோர் இந்தியில் எழுத்தாக்கத்தினைக் கையாண்டுள்ளனர்.
தமிழில் பார்க்கும்போது வசனங்கள் உடனடியாக நம்மை ஈர்த்துவிடுகின்றன. ’இது டப்பிங் படமல்ல’ என்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றன. பிரதீப்குமார், அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலநடராஜன், லதா கார்த்திகேயன் அதற்காகத் திறம்படத் தம் பணியினைச் செய்துள்ளனர்.
கிளைமேக்ஸில் ‘அவரு பொண்ணுங்கன்னா மனம் இளகிடுவாரு’ என்று ரோனியின் மனைவி பாத்திரம் சொல்வதாக அமைந்துள்ள வசனத்திற்கு தியேட்டரில் வெடிச்சிரிப்பு கிளம்புகிறது.
டைட்டில் கார்ட்டில் தியாகராஜன் குமாரராஜா உட்படப் பலருக்கு ‘நன்றி’ சொல்கிறது ‘மெரி கிறிஸ்துமஸ்’ குழு. அவர்களது பங்களிப்பு இதில் எந்த வகையில் அமைந்துள்ளது என்று தெரியவில்லை.
இது ரசனையாளர்களுக்கானது!
படத்தின் தொடக்கத்தில் சில மாத்திரைகளும் மிளகாய் பொடியும் அரைக்கப்படும் சிறு ஷாட்கள் இடம்பெறுகின்றன. ‘அவை எதற்காக இடம்பெற்றன’ என்ற கேள்வியை எழுப்பும் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன், இடைவேளையின்போது அதற்குப் பதிலளிக்கிறார்.
ஆனால், ரசிகர்கள் அறத்தை மட்டுமே கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தோடு, கிளைமேக்ஸில் விஜய் சேதுபதியின் புன்னகை மூலமாகத் தொடக்கத்தில் வரும் ஷாட்களுக்கான பிராயசித்தத்தையும் முன்வைக்கிறார். அது மட்டுமல்லாமல், கேத்ரினா கைஃப் பாத்திரம் சிறு மீன்களைக் கூடக் கொல்வதற்குத் தயங்குவதை விஜய் சேதுபாதி பாத்திரம் உணர்வதாக ஒரு ஷாட் இப்படத்தில் உண்டு. அது போன்ற இடங்களே, ‘த்ரில்லர்’ என்பதையும் தாண்டி இப்படத்தை நம் மனதுக்கு நெருக்கமானதாக மாற்றுகிறது.
ஒரு நேர்த்தியான திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பும் ரசனைமிக்க ரசிகர்களை ‘மெரி கிறிஸ்துமஸ்’ நிச்சயம் ஈர்க்கும். ‘பண்டிகைன்னாலே நமக்கு கொண்டாட்டம்தாங்க வேணும்’ என்பவர்கள் வேறு திரையரங்குகளுக்குச் செல்லலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
கேப்டன் மில்லர்: உதயநிதிக்கு தனுஷ் நன்றி!
பாலஸ்தீனத்தில் நடக்கும் இனக்கொலை: இந்தியா வேடிக்கை மட்டுமா பார்க்கிறது?
கடும் பனி, புகை: சென்னையில் விமான சேவை மீண்டும் தொடங்கியது!
வைரமுத்து வரிகளில் ‘தமிழர் திருநாள் தையே’!