முதியோர்களை கொலை செய்வது ஏன்?: தலைக்கூத்தலை பேசும் தமிழ் படம்!

Published On:

| By Kavi

கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களை கடந்த 14 வருடங்களாக ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது.

இந்த வரிசையில் அடுத்த படைப்பாக ‘தலைக்கூத்தல்’ படம் வெளியிட தயாராக உள்ளது. சமுத்திரக்கனி, கதிர், வையாபுரி, முருகதாஸ், வசுந்தரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள தலைக்கூத்தல் படத்திற்கு ‘தமிழ்ப் படம்-1’ மற்றும் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்த கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஜெயப்பிரகாஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிய ஜெயப்பிரகாஷ், அறிமுக இயக்குநர்களுக்கு வழங்கப்படும் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் விருது பெற்ற ‘லென்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். எந்த இயக்குநரிடமும் உதவியாளராக இவர் பணியாற்றியது இல்லை.

‘லென்ஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து ‘தி மஸ்கிடோ பிலாஸபி’ என்ற படத்தை இவர் இயக்கினார். பல்வேறு திரைப்பட விழாக்களில் இது இடம் பெற்றது.

இந்தத் தலைக்கூத்தல்’ படம் பற்றி ஜெயப்பிரகாஷ் கூறுகையில், “2018-ம் ஆண்டில்தான் இந்தப் படத்தின் கதைக் கரு எனக்குள் தோன்றியது.

வயது முதிர்ந்தவர்களை சொந்த குடும்பத்தினரே கொல்லும் இதுபோன்ற ஒரு பழக்கம் தென் தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளில் நடைபெறுவது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

அதைப் பற்றி பல்வேறு தளங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டேன். இது சரியா தவறா என்பதை விவாதிப்பதை விட. எந்த சூழலில் குடும்பத்தினர் இந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதை யோசித்தபோது நிறைய கேள்விகள் தோன்றின.

இந்த கேள்விகளுக்கான விடையை தேடுவதே இந்த படத்தின் நோக்கம். நடுத்தர குடும்பம் ஒன்று இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்கிறது. அப்போது அந்த குடும்பத்தினர் என்ன முடிவு எடுக்கிறார்கள், எவ்வாறு அந்த சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்ப்பவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படம் விவரிக்கும்” என்றார்.

இராமானுஜம்

திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்த இந்திய ஆல்ரவுண்டர்!

எல்.ஜி.எம் : சினிமாவிலும் சிக்ஸர் அடிப்பாரா தோனி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel