காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் இரண்டாவது மகன் சாய் விஷ்ணுவுக்கும் நடிகை மேகா ஆகாஷுக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மேகா ஆகாஷ். இவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ‘ பேட்ட ‘ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் புகழ்பெற்றார்.
பின், நிறைய தெலுங்கு படங்களில் நடித்தார் மேகா ஆகாஷ். தமிழில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ வடக்குபட்டி ராமசாமி ‘ படத்திலும் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேகா ஆகாஷும், சாய் விஷ்ணுவும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்தநிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் நேற்று (ஆகஸ்ட் 22) நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும், செப்டம்பர் 15-ஆம் தேதி திருமணமும் சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது.
தனது மகன் திருமணத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை திருநாவுக்கரசர் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“எனது மகன் சாய் விஷ்ணு, ஆகாஷ ராஜா அவர்களது மகள் மேஹா ஆகியோருக்கு வரும் 2024, செப்டம்பர் மாதம் 14-ந் தேதி மாலை 6 மணியளவில் திருமண வரவேற்பும், செப்டம்பர் 15-ந் தேதி காலை 10.45 – 11.45 மணிக்கு திருமணமும் சென்னை 41, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மஹாலில் நடைபெற உள்ளது.
இத்திருமண அழைப்பிதழை நானே நேரில் வந்து அழைத்ததாக கருதி திருமண வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சியில் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சாய் விஷ்ணு மேகா ஆகாஷ் நிச்சயதார்த்தத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…