வெறுத்து ஒதுக்கிய பெயர்… தவிர்க்க முடியாததாக மாறியது எப்படி? – மம்முட்டிக்கு 73 வயது!

சினிமா

பல மொழி படங்களில் நடித்த மம்முட்டியை கேரள ரசிகர்கள் மெகாஸ்டார் என கொண்டாடுகின்றனர். மம்முட்டி என்ற பெயர் அவருக்கு எப்படி வந்தது தெரியுமா?

மம்முட்டி என்ற பெயரே அவருக்கு பிடிக்காமல் இருந்தது. ஆனால், காலப்போக்கில் அந்த பெயரே அவருக்கு நிரந்தரமாகிப் போன கதையை இங்கு பார்க்கலாம்.

அடிப்படையில் மம்முட்டி குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் சம்பந்தமே கிடையாது. மம்முட்டியின் தந்தை இஸ்மாயில் துணி மற்றும் அரிசி வியாபாரம் செய்து வந்தார்.

இஸ்மாயில் அவரது மனைவி பாத்திமாவுக்கும் பிறந்த 6 குழந்தைகளில் மூத்த மகன்தான் மம்முட்டி. கடந்த 1951ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி பிறந்த மம்முட்டிக்கு பெற்றோர்  வைத்த பெயர் முகம்மது குட்டி.

பள்ளிக் கல்வியை முடித்த முகமது குட்டி எர்ணாகுளத்திலுள்ள மகாராஜாஸ் கல்லூரியில் பி.ஏ படித்தார்.  கல்லூரியில் சேர்ந்த போதுதான் முகம்மது குட்டி என்ற தனது பெயர் பட்டிக்காட்டுத்தனமாக இருப்பதாக தோன்றியது. உடனே முகம்மதுகுட்டி என்ற பெயருக்கு பதிலாக ஓமர் ஷெரிப் என்று மாற்றி வைத்து கொண்டார்.

சிலர் முகம்மது குட்டி என்ற பெயரை சுருக்கி, மம்முட்டி என்றே அழைத்தனர். ஆனால், இந்த பெயர் மம்முட்டிக்கு பிடிக்கவில்லை. சினிமா மீது தீராக்காதல் கொண்டிருந்த மம்முட்டி கல்லூரி படிக்கும் போதே சினிமாவில் நடிக்க தன்னை தயார் செய்து கொண்டார்.

கல்லூரி படித்துக் கொண்டிருந்தப் போது, 1971ஆம் ஆண்டு  வெளியான “அனுபவங்கள் பாலிச்சக்கல்” என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் மம்முட்டி. பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த மம்முட்டி, சினிமாவில் நடிப்பது அவரது குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. ஆரம்ப காலங்களில் சினிமாவில் நடிக்க கூடாது என்றும் தடுத்தனர். இதனால், வக்கீலுக்கு படித்து பயிற்சி எடுத்து கொண்டிருந்தார்.

அட்வகேட் பி.ஏ.முகம்மதுகுட்டி என்ற பெயர் பலகைதான் அவரது அலுவலகத்தில் இருக்கும். ஒரு முறை அவரது அலுவலகத்துக்கு,  போஸ்ட்மேன் ஒருவர் மம்முட்டி யார் என்று விசாரித்தபடியே வந்தார். போஸ்ட்மேன் கையில் அட்வகேட் முகம்மது குட்டிக்கு ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதம் ஜனசக்தி ஃபிலிம்சிலிருந்து எம்.டி.வாசுதேவன் நாயர் சார்பில் அனுப்பப்பட்டிருந்தது.தபாலில், மம்முட்டி என்றே எம்.டி. வாசுதேவன் நாயர் குறிப்பிட்டிருந்தார்.

மம்முட்டி என்ற பெயரை வெறுத்து ஒதுக்க நினைத்த அவருக்கு அந்த பெயரிலேயே கடிதம் வந்தது,அதுவும் எம்.டி. வாசுதேவன் நாயரிடத்தில் வந்தது ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது. தொடர்ந்து, பல மொழி படங்களில் நடித்து பிரமாதமான நடிகராக மாறினார்.  இப்போது, மம்முட்டி என்ற அதே பெயர் மம்முக்கா என்றும் செல்லமாக மாறி விட்டது.

மலையாள மெகா ஸ்டாருக்கு இன்று வயது 73, ஆனாலும் ஸ்டில் யங்மேன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

Paralympics 2024: பாரிஸில் புதிய சாதனை படைத்த இந்தியா!

இறங்கிய தங்கம் விலை… இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *