நடிகர் மீசை ராஜேந்திரன் தனது 60வது பிறந்த நாளையொட்டி தோல் தானம் செய்துள்ளார். இதன் பின்னணி என்னவென்று பார்க்கலாம்.
நடிகர் மீசை ராஜேந்திரன் மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் போலீஸ் வேடத்தில் அறிமுகமானவர். விஜயகாந்துடன் நெருங்கிய நட்பு கொண்ட இவர், தே.மு.தி.க கட்சியில் மாநில செய்தி தொடர்பாளராக உள்ளார். நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த மீசை ராஜேந்திரன் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என ஐந்து மொழிகளில் 250 படங்களிலும் பல மொழிகளில் 54 சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், மீசை ராஜேந்திரன் தனது 60வது பிறந்த நாளான ஜனவரி 29 ஆம் தேதி தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, மீசை ராஜேந்திரனுக்கு திருநீர் பூசி பிரேமலதா விஜயகாந்த் ஆசி வழங்கினார். மீசை ராஜேந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தும் போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தனது உடல் உறுப்புகளை அவர் தானம் செய்துள்ளார். தோல், எலும்பு, கண் போன்றவற்றை தானம் செய்து அதற்கான, அடையாள அட்டையையும் மீசை ராஜேந்திரன் பெற்று கொண்டார்.
இது குறித்து மீசை ராஜேந்திரன் கூறுகையில், ‘பலருக்கும் தோல் தானம் பற்றி விழிப்புணர்வு இல்லை. எனது மகனும், மகளும் டாக்டர்கள். பிறந்த நாளை முன்னிட்டு, தீக்காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில் தோல் தானம் செய்ய எனது குழந்தைகள் என்னிடத்தில் வலியுறுத்தினர். அதனால், எனது தோல் உள்ளிட்ட சில உடல் உறுப்புகளை தானம் செய்தேன். தோல் தானம் செய்வது மிகவும் நல்ல விஷயம் ‘ என்று தெரிவித்துள்ளார்.
நமது உடலில் தோல் ஒரு பெரிய உறுப்பு. வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் தோலை தொற்று, வெப்பம், குளிர்ச்சி, தீக்காயம் போன்றவற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். மனிதர்களின் உடல் நலனுக்கு தோல் ஒரு பாதுகாப்பு அரண் போன்றது. தோல்தானம் செய்தால் தீக்காயம் அடைபவர்களின் சிகிச்சைக்கு பெரிய உதவிகரமாக இருக்கும்.