media crossing Border in the house of cinema stars

சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?: தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவு!

சினிமா

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும், நட்சத்திரங்களும் சிவப்பு கம்பள வரவேற்பும், மரியாதையும் கொடுத்துவரும் மூன்று வலைதளங்கள் நடிகர் விஜய்ஆண்டனி மகள் அகால மரணமடைந்ததையும் அதனையொட்டி அவரது வீட்டில் வரம்பு மீறி படம் பிடித்ததும், இறந்த மாணவியின் தோழிகளிடம் பேட்டி எடுத்ததும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

வலுத்த கண்டங்கள்!

இது சம்பந்தமாக தனது ஆதங்கத்தையும், கண்டனத்தையும் அழுத்தமான வார்த்தைகளால் பதிவு செய்திருந்தார் தயாரிப்பாளரும், நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகியுமான எஸ்.ஆர்.பிரபு.

அவரது முகநூல் பக்கத்தில் “பிரபலங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்லவை கெட்டவை எதுவாயினும் ஊடகங்களே அவற்றை முக்கியப்படுத்துகின்றன.

ஆயினும் ஒருவர் வாழ்வில் துக்க விசயங்கள் நடக்கும்பொழுது, அவை எவ்வாறு கையாளப்படவேண்டுமென்ற அடிப்படை அறிவும், கடமையும் ஊடகவியலாளர்களுக்கு மிகமுக்கியமான பொறுப்பாகும்.

சமீபத்திய இரு துயர சம்பவங்களில் சில ஊடகங்கள் நடந்துகொண்டவிதம் முற்றிலும் தவறான, அறமற்ற செயல். அதற்காக எனது வன்மையான கண்டனத்தையும், இவ்வாறான போக்கை இனியாவது தவிர்க்குமாறு எனது வேண்டுகோளையும் இங்கே பதிவு செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து மூத்த இயக்குநரும் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்

“மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடூரமானவை அப்படியொரு நிகழ்வை சந்திக்கும்போது சொந்த பந்தங்கள்..உடன் நட்புகள் கலங்கிப்போகும். செய்வதறியாது திகைத்துப் போகும். அந்நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத காரியம். தேற்றுவதற்கு வார்த்தைகள் இருக்காது.

உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும். அந்நேரத்தைக் கூட நம்மால் தர முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றன சமீபகால காட்சி ஊடகங்களின் செயல். புகழ்பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேர்கிறது.

வந்து உடன் நிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கே வரவிடாமல் செய்துவிடுகிறது. அல்லது வந்ததும் ஓட வைத்துவிடுகிறது.
முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. எந்நிகழ்வை படமாக்க வேண்டும். கூடாதென்று.

இப்போது சமூக வலைதளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலை பிறழ்ந்துவிட்டது ஊடகங்கள் மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சித் திருடுவதை செய்கின்றன. நம் அனுமதி இல்லாமல் இரக்கமற்று நம் கையறு நிலையில் நிற்கும் முகங்களை படம் பிடித்துக் காட்டுகின்றனர். இது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?? அவர்களின் துக்கம் கேலிச் சித்திரமா?

நேற்றும்(20.09.2023)இதற்கு முன் நிகழ்ந்த மரண நிகழ்விலும் மீடியாக்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள் போர்வையில் வருபவர்களையும் அடையாளங்கண்டு களைய வேண்டிய நேரம் இது.

குடும்ப உறவுகளாக மதிக்கும் மீடியாவினரின் இதுபோன்ற நாகரீகமற்ற செயல்கள் வேறுபடுத்திப் பார்க்க வைக்கின்றன. இவர்களுக்கும் நம் இழப்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என எண்ண வைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மனச் சங்கடத்தை உருவாக்கியுள்ளது.

ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால்… காணொளி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதற்கான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தயாரிப்பாளர்கள்… மற்றும் சினிமா சார்ந்த அனைவரின் முக்கிய கடமையாகும்.

அப்போதுதான் நம் வீட்டு நிகழ்வுகளில் அநாகரீகங்கள் தடுக்கப்படும். ஒரு மூத்த கலைஞனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஊடகத்தினரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வருத்தம் தெரிவித்த ஊடகம்

இதுபோன்று கண்டனங்கள் வலுத்த நிலையில், சம்பந்தப்பட்ட ஊடகமான பிகைண்ட் உட்ஸ் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

“இனிமேல், மறைந்த பிரமுகர்களின் வீடுகள் அல்லது இறுதிச் சடங்குகள் அல்லது குடும்பங்களை நாங்கள் செய்தியாக்க மாட்டோம் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். துக்கம் அனுசரிக்கும் குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், அந்த நேரம் அவர்களுக்கான தனிப்பட்ட நேரம் அது என்பதை நாங்கள் மனதார அறிந்து ஒப்புக்கொள்கிறோம்.

பிரபலங்களின் சார்பில் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படும் இரங்கல் கூட்டங்கள், அஞ்சலி நிகழ்ச்சிகளை மட்டுமே இனி எங்கள் நிறுவனம் செய்தியாக வெளியிடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

கடந்த காலத்தில் எங்கள் குழு உறுப்பினர்கள் ஏதேனும் சிரமத்தை அல்லது வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் நாங்கள் மிகவும் வருந்துகிறோம். எந்த உள்நோக்கத்துடனும் அப்படி ஒரு செயலில் ஈடுபடவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

மறைந்தவர்கள் குடும்பங்களின் கண்ணியத்தையும், தனியுரிமையையும் கண்டிப்பாகக் கருத்தில் கொண்டு நாங்கள் மறைந்தவர்களின் வாழ்க்கையைக் கௌரவிப்பதில் இனி கவனம் செலுத்துவோம்” என்று கூறியுள்ளது.

இராமானுஜம்

தயாரிப்பாளருடன் திருமணமா?: த்ரிஷா பதில்!

நாடாளுமன்றத்துக்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது ஏன்?: மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தங்கார்

+1
0
+1
1
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *