மழையில் நனைகிறேன்: விமர்சனம்!

Published On:

| By christopher

‘தமிழ்நாட்டில் பிறந்தவர்களில் பாதிப்பேருக்குக் கவிதை எழுதும் பழக்கம் உண்டு’ எனச் சொல்லப்பட்ட காலம் ஒன்று உண்டு. அப்படி எழுதப்பட்ட கவிதைகள் அதனை எழுதியவருக்கு ’தேவார்மிதமாக’ இனிக்கலாம்.

அவரைச் சுற்றியுள்ள நபர்களுக்கு, அதனைத் தாங்கிய காகிதம் ‘நரகமாக’த் தெரியும். அப்படிப்பட்ட சூழலில், அதே கவிதையைப் படித்துவிட்டு ‘ஆஹா.. ஓஹோ..’ என்று பாராட்டினால், அதனை எழுதியவருக்கு எப்படியிருக்கும்?

’விமர்சனத்தில் படம் பற்றிப் பேசாமல், கவிதையைக் குறித்த கட்டுரை எதற்கு’ என்ற கேள்வி எழலாம்.

மலையாளத் திரைக்கலைஞர்களான அன்சன் பால், ரெபா மோனிகா ஜான் நடிப்பில், டி.சுரேஷ்குமார் இயக்கிய ’மழையில் நனைகிறேன்’ படத்தைப் பார்த்தபோது, மேற்சொன்ன விஷயங்களே மனதில் தோன்றியது. காதலை மையப்படுத்திய கதையைத் திரையில் கவித்துவமாகத் தர முயற்சித்தது அதற்கான காரணமாக இருக்கலாம்.

’அதெல்லாம் சரி, அந்த கவிதை பிடிக்குமா, இல்லையா’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா? அதற்கான பதிலைக் கண்டுவிடுவோம்.

’காதலே’ கதை!

‘மழையில் நனகிறேன்’ படமானது முழுக்க முழுக்க ரொமான்ஸ் ட்ராமா வகைமையில் அமைந்திருக்கிறது.

அலைகள் ஓய்வதில்லை, கிளிஞ்சல்கள், அடுத்தாத்து ஆல்பர்ட், பூவே உனக்காக உட்படப் பல தமிழ் படங்களில் பார்த்த அதே கதைதான். இரு வேறு மதங்களைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலில் விழுவதைச் சொல்கிறது ‘மழையில் நனைகிறேன்’.
கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளையாக, பெற்றோரின் செல்லக் குழந்தையாக வளர்ந்தவர் ஜீவா செபாஸ்டியன் (அன்சன் பால்).

கல்லூரிக் காலம் முடிந்தும், ‘அரியர்’ வைத்துக்கொண்டு ‘ஹாயாக’ ஊர் சுற்றுகிறார். அவருடன் படித்த நண்பர்கள் எல்லாம் வேலையில் சேர்ந்துவிடுகின்றனர். தந்தையோ (மேத்யூ வர்கீஸ்) ‘நம்ம பேக்டரிய பார்த்துக்குற அளவுக்கு எப்போ மாறப் போற’ என்று கேட்பவராக இருக்கிறார். தாயோ (அனுபவமா குமா) இன்னும் ஜீவாவை ஒரு ‘விளையாட்டுக் குழந்தையாகவே’ கருதுகிறார்.

ஆனால், ஜீவாவோ தான் ஒரு இளைஞன் என்று உணர்கிறார். தற்செயலாகச் சந்திக்கும் ஐஸ்வர்யா (ரெபா மோனிகா ஜான்) மீது காதல் கொள்கிறார். அதனை அவரிடம் தெரிவிக்கிறார். ஆனால், ஐஸ்வர்யாவோ அதனை ஏற்க மறுக்கிறார்.
பட்டப்படிப்பை முடித்திருக்கும் ஐஸ்வர்யாவுக்கு, அமெரிக்கா சென்று எம்.எஸ். படிப்பதுதான் ஒரே ஆசை. அதற்காக, அவர் விசா பெறும் முயற்சியில் இருக்கிறார்.
’நோ’ சொன்னபிறகும் ஐஸ்வர்யாவையே சுற்றி வருகிறார் ஜீவா. ஒவ்வொரு முறையும் அவரை அவமானப்படுத்துகிறார் ஐஸ்வர்யா.

நண்பர்கள் அனைவரும் ‘இது உனக்கு தேவையா’ என்கின்றனர். ஆனாலும், ‘என் காதல் என் உரிமை’ என்றிருக்கிறார் ஜீவா.

இந்த நிலையில், திடீரென்று நிகழும் சில சம்பவங்கள் ஐஸ்வர்யாவின் மனதை மாற்றுகின்றன. அந்த காலகட்டத்தில், அவரை விட்டு ஒதுங்கியே இருக்கிறார் ஜீவா.
ஒருநாள் ஜீவாவைச் சந்தித்து தனது காதலைத் தெரிவிக்க எண்ணுகிறார் ஐஸ்வர்யா. அதன்படியே அவரைக் காண்கிறார். இருவரும் சேர்ந்து பைக்கில் பயணிக்கின்றனர். அப்போது, ஒரு விபத்தில் சிக்குகின்றனர்.

அதன்பிறகு என்ன நிகழ்ந்தது?

இந்த கேள்வியோடு இதன் முதல்பாதி முற்றுப் பெறுகிறது. இரண்டாம் பாதியில் அதற்கான பதிலைச் சின்ன திருப்பத்தோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் டி.சுரேஷ்குமார்.

ஏற்கனவே சொன்னது போல, இதில் காதலைத் தவிர வேறெதுவுமில்லை. முடிந்தவரை, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பாணியில் அதனைச் சொல்ல முயன்றிருக்கிறார்.
இடையிடையே கிளிஞ்சல்கள் முதல் பீட்சா, இசை பட வழியில் பொங்கிப் பிரவாகமெடுக்கிறது இதன் திரைக்கதை. அதுவே இப்படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது.

கேமிரா, மியூசிக் சூப்பர்!

இந்தப் படத்தில் சுமார் ஒரு டஜன் பாத்திரங்களே இடம்பெற்றிருக்கின்றன. அதனால், எடுத்துக்கொண்ட கதையைத் திறம்படத் திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதேநேரத்தில், அழகியல் ரசனையோடு எடுக்கப்பட்ட குறும்படங்களின் தொகுப்பாகவே அது நம்மை உணரச் செய்கிறது.

அன்சன் பால் சில மலையாள, தமிழ் படங்களில் குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடித்தவர். இதில் முன்பாதியில் அவரது நடிப்பு ஏற்புடையதாக இல்லை. அதற்குச் சேர்த்து வைத்து, இரண்டாம் பாதியில் தோற்றத்திலும் நடிப்பிலும் நம்மை எளிதாகக் கவர்கிறார்.

’ஜருகண்டி’, ‘பிகில்’ படங்களில் பேரழகியாகத் தோற்றமளித்த ரெபா மோனிகா ஜான், இதில் ‘பொருந்தா ஒப்பனை’யுடன் வலம் வருகிறார். ஒப்பனையில்லாமல் வந்து போன காட்சிகள் கூட நம்மைக் கவர்கின்றன.

அதேநேரத்தில், அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. போலவே நாயகனின் பெற்றோராக நடித்த மேத்யூ வர்கீஸ் – அனுபமா, நாயகியின் பெற்றோராக வந்த ராஜா – சுஜாதா ஜோடிகள் ‘சென்டிமெண்ட்’ நடிப்பில் கவர்கின்றனர்.

இது போக, ’சிரிக்க வைக்க நாங்க கியாரண்டி’ என்று முன்பாதியில் கிஷோர் ராஜ்குமார் ’ஒன்லைனர்களால்’ கிச்சுகிச்சு மூட்டுகிறார். பின்பாதியில் ‘ வெற்றிவேல் ராஜா அந்த வேலையைக் கனகச்சிதமாகச் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் ஈடுபாடும் அசர வைக்கிறது. கல்யாணின் ஒளிப்பதிவு நாயகன் நாயகியை மட்டுமல்லாமல், ஒவ்வொரு பிரேமையும் அழகுறக் காட்ட முயற்சித்திருக்கிறது.

இரண்டாம் பாதியில் நாயகன் வீட்டில் இருந்து, அவரும் நாயகியும் தங்கியிருக்கும் வீட்டுக்கு நகரும் ’ஏரியல் ஷாட்’ அழகு. அது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டதல்ல என்றபோதும், அந்த யோசனையைச் செயல்படுத்தியிருப்பது இனிக்கிறது. கலை இயக்குனர் என்.என்.மகேந்திரன், ஒளிப்பதிவு அழகாக அமைய வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார்.

ஆடை வடிவமைப்பாளரும் கூட அதையே மனதில் நினைத்திருக்கிறார். ஆனால் என்ன, மூன்று பேரும் ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

முக்கியமாக, ‘ஆடை வடிவமைப்பில் த்ரி கலர் ரூல்’ என்பார்களே. அதனை படக்குழு மனதில் கொள்ளவில்லை. சூழல், கலைஞர்களின் ஆடைகள், பிரேமில் நிறையும் வண்ணங்கள் அனைத்தையும் முன்னரே திட்டமிட்டு வடிவமைக்கும்போது, இதைவிடச் சிறப்பான ‘அவுட்புட்’ கிடைத்திருக்கக் கூடும்.

இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசையமைத்திருக்கிறார். ’உன் காதல் பார்வை போதும்’, ’நாட்கள் அழகாய் மாறிப்போகுதே’, ’வேட்டை ஆடும் விழிகள்’, ‘காலம் இருக்கும் வரை’ பாடல்கள் முதல்முறை கேட்கும்போதே ஈர்க்கின்றன.

இந்த பாடல்கள் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இந்த படம் முழுதாக நிறைவடைந்தது என்பதற்கான பதிலும் அதில் அடங்கியிருக்கிறது.
அதையும் மீறி இப்பாடல்கள் ஈர்ப்பதுவே, விஷ்ணுவின் இசையைக் கொண்டாடத் தூண்டுகிறது. இன்னும் பல படங்களில் ரசிக்க வேண்டும் என்று எண்ணச் செய்கிறது. கீப் ராக்கிங் மேன். பின்னணி இசையோ, ‘ஓகே’ ரகம்.

இப்படத்தின் வசனங்களை விஜி, கவின் பாண்டியன் எழுதியிருக்கின்றனர். அவை எளிமையாகவும் சட்டென்று மனதோடு ஒட்டிக்கொள்வதாகவும் இருப்பது சிறப்பு. ’என்னடா இவன் பாசிட்டிவ்வா பேசுறதா நினைச்சிட்டு பைத்தியம் மாதிரி பேசுறான்’ என்பது போன்ற வசனங்கள் நட்பு வட்டாரத்தில் ‘கலாய்த்தலுக்கு’ உதவும்.

இயக்குனர் டி.சுரேஷ்குமார், ஏற்கனவே சொன்னது போலத் திரையில் ‘காதல் கவிதை’ ஒன்றைப் படைக்க முயற்சித்திருக்கிறார். அது சிலருக்குப் பிடிக்கலாம். ஓடிடி வெளியீட்டுக்கு முன்னதாகவே அது நிகழ, அந்தச் சிலர் தியேட்டருக்கு செல்ல வேண்டும்.

இந்தப் படத்தின் சிறப்பு, இதன் காட்சியாக்கம். ’கேமிரா, மியூசிக் சூப்பர்’ என்று சொல்லும்படியாக நீள்கிறது இப்படம்.

கூடவே, அவசர கதியில் படம்பிடிக்கப்பட்டதாக எண்ண வைக்கின்றன சில வசனக் காட்சிகள். அதனால், ஒரு திரைப்படம் நிகழ்த்துகிற மாயஜாலம் நிகழவில்லை.

அதாகப்பட்டது, நாயகன் நாயகியின் காதலோடு நம் மனதைக் கரைக்க இயலவில்லை.
இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அது நிகழ்ந்திருக்கும். அதனைச் செய்யாமல் விட்டதால், ‘மழையில் நனைகிறேன்’ வெறுமனே சாரலாக முகத்தில் அறைகிறது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தாமதமாக வெளியானபோதும் இப்படம் நம்மை எரிச்சல் அடைய வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அதற்காகவாவது, இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மேலும் சில வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். அப்படியொரு எண்ணத்தைப் படம் பார்த்தவர்கள் மனதில் ஏற்படுத்தியதே ‘மழையில் நனைகிறேன்’ படத்தின் வெற்றி..!

மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கீடு: மத்திய அரசு உறுதி!

அனுமதி மறுப்பு… தடையை மீறி விஜயகாந்த் நினைவு தின பேரணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share