மயில்சாமி எனக்கு ஒரு அண்ணன் மாதிரி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமாகப் பேசினார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று (பிப்ரவரி 19) காலை மாரடைப்பால் காலமானார். அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் திரண்டு வந்து மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மயில்சாமி அண்ணனின் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கிறது. திரையுலகைத் தாண்டி மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவர் போலத்தான் பேசுவார். என்னிடம் அவ்வளவு அன்பாக இருப்பார். 10 நாட்களுக்கு ஒருமுறை தொலைபேசியில் அழைத்துப் பேசிவிடுவார்.
அவருக்காகவோ, அவரது குடும்பத்துக்காகவோ எதுவும் பேசமாட்டார். எப்போதும் பொதுநலன் சார்ந்தும், யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என என்னிடம் பேசுவார். கட்சி சார்பு இல்லாமல் அன்பைச் செலுத்தக்கூடியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் என்னுடன் நடித்திருந்தார். கடைசியாக நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தின் போது, 50 நாட்கள் படப்பிடிப்பு என்றால் 40 நாட்கள் என்னுடன் இருந்தார். எனக்கு ஒரு அண்ணன் மாதிரி” என கூறினார்.
பிரியா
தொகுதி மாறும் தொல்.திருமா… குறிவைக்கும் துரை.வைகோ- என்ன செய்யும் திமுக?
மனிதநேய சாமி: யார் இந்த மயில்சாமி?