தொலைக்காட்சிக்கு இணையாக நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூக வலைத்தளங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பிரதானமாக இருப்பது யுடியூப் அரசியல், பிற செய்திகளை காட்டிலும் சினிமா செய்திகளில் குறிப்பாக தனி நபர் அந்தரங்கங்கள் பற்றி வரம்பின்றி பேசுவது சர்வசாதாரணமாகி விட்டது.
பத்திரிகையாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் என்கிற அடைமொழியுடன் சினிமா விமர்சனம், பாக்ஸ் ஆபீஸ் வசூல், நடிகர் நடிகைகள் அந்தரங்கம் பற்றி எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இன்றி இவர்கள் பேசும் வீடியோக்களைபடிக்க கூசும் தலைப்புகளை வைத்து வெளியிடுகின்றனர்.
இது சம்பந்தமாக நடிகைகள் பலரும் எங்கள் அந்தரங்கங்களை பொய்யாக பேசி வயிறு வளர்க்க வேண்டுமா என்கிற அளவிற்கு பேட்டி கொடுத்து பார்த்தார்கள். ஆனால் யுடியூபில் பேசுபவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்பதுடன் மலையாள சினிமா பற்றி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பின்பு அதிகரித்திருக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டி நடிகர், நடிகைகளை பற்றி அவதூறாக, உண்மைக்கு புறம்பாக பேசும், வெளியிடும் யுடியூப்பர்கள், மற்றும் அந்நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவரும், சமூக செயல்பாட்டாளருமான நடிகை ரோகிணி தெரிவித்திருந்தார்.
அந்த அடிப்படையில் காந்தராஜ் என்பவ ர் மீது காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹேமா கமிஷன், விசாகா குழு சம்பந்தமாக தமிழ்நாட்டில் செயல்படும் எந்தவொரு அரசியல் கட்சி, மற்றும் திரையுலக முன்னணி நடிகர்கள் கருத்து எதுவும் கூறாமல் மெளனம் காத்து வருகின்றனர்.
இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ்நாடு மாநிலக் குழு தலைவர் எஸ். வாலண்டினா, பொது செயலாளர் ராதிகா இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள்
அதில், ”சமீப காலமாக சமூக வலைதளங்களில் பெண் திரைப்பட கலைஞர்கள் மீது காந்தராஜ் என்பவரும், பயில்வான் ரங்கநாதன் என்பவரும் தொடர்ச்சியாக யூடியூப் சேனல்களில் அருவருக்கதக்க, ஆபாசமாக, பெண் திரைப்பட கலைஞர்கள் குறித்து பாலியல் ரீதியான அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
பெண் திரைப்படக் கலைஞர்கள் வாய்ப்புக்காக பாலியல் சமரசங்களை செய்து கொள்கிறார்கள் என்றும், பாலியல் சமரசம் செய்தே ஆடம்பர வசதியான, வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும், பெண் திரைப்படக் கலைஞர்களை கண்ணிய குறைவாகவும், மரியாதை குறைவாகவும் திரைப்படத் துறையில் பணியாற்றும் பெண்களுடைய உழைப்பை கொச்சைப்படுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர்.
அனைத்து துறைகளிலும் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து முன்னேறி வருகின்றனர். அதுபோலவே திரைப்படத் துறையிலும் பணி சூழல் காரணமான கடும் இன்னல்களை எல்லாம் தாண்டி எந்தவித நேர கட்டுப்பாடும் இல்லாமல் உழைத்து வருகின்றனர்.
திரைப்படத்தில் நடிப்பது என்பது தொழில் என கருதாமல் ஆடம்பரமான வாழ்க்கைக்காக என பெண் கலைஞர்களை மட்டுமே குறிவைத்து ஆணாதிக்க சிந்தனையின் உச்சபட்ச கருத்துகளை சமூகத்தின் பொது புத்தியில் திணிக்க கூடிய இத்தகைய செயலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் இத்தகைய அவதூறு பிரச்சாரங்களை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
பெண் திரைப்பட கலைஞர்களின் பாதுகாப்பிற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உறுதுணையாக நிற்கும்.
தென்னிந்திய நடிகர் சங்கம் உள் புகார் கமிட்டி குறித்து திரைப்பட கலைஞர்களுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்திட வேண்டும்.
தமிழக மகளிர் ஆணையமும் மேற்கண்ட சம்பவத்தில் தலையீடு செய்து விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகனின் பிறந்தநாள் விழாவில் மரணமடைந்த இளம் தாய்: அதிரவைக்கும் சோகம்!
புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… என்ன காரணம்?