விமர்சனம் : மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்!

சினிமா

ஆட்கள் குறைவு!

குறைவான பாத்திரங்கள், மிகக்குறைவான இடங்கள், ஒரு எளிமையான கதை என்றிருக்கும் படங்கள் பார்க்க வித்தியாசமாக இருக்கும். ஆனால், அவற்றால் பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கவோ, சுவாரஸ்யப்படுத்தவோ முடியாது. இப்படியொரு கருத்தினாலேயே ஒரு சில காட்சிகளாவது நிறைய பொருட்செலவோடு உருவாக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் திரையுலகில் இருந்து வருகிறது. அதிலிருந்து விலகி நின்றால் என்ன நடக்கும்? அதற்கொரு உதாரணமாக அமைந்திருக்கிறது ‘மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்’.

’கொன்றால் பாவம்’ படத்தையடுத்து, இதனைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன். ஆஹா தமிழ் தளத்தில் ‘மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்’ வெளியாகியிருக்கிறது.

த்ரில் எங்கே?

வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில், நள்ளிரவு நேரத்தில் ஜெய்சங்கரின் (மஹத் ராகவேந்திரா) மொபைலுக்கு ஒரு அழைப்பு வருகிறது. எதிர்முனையில் அவரது கேர்ள்பிரெண்ட் இருக்கிறார். அப்போது, தான் நிற்கும் இடத்தின் அருகே ஒரு சிறுமியைச் சிலர் கடத்தி வந்திருப்பதைப் பார்க்கிறார் ஜெய்சங்கர். உடனே, அருகிலிருக்கும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கச் செல்கிறார். ஸ்டேஷன் வாசலில் நின்றுகொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் குருநாதன் (அமித் பார்கவ்), ஜெய்யை மடக்கி அந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கு சென்றபிறகுதான், சிறுமியைக் கடத்திய ரவுடி நாகாவும் (சுப்பிரமணிய சிவா) குருநாதனும் கூட்டுக் களவாணிகள் என்று தெரிய வருகிறது. அதன்பிறகு, ஜெய் கொலை செய்யப்படுகிறார். கொலையாவதற்கு முன்னர், அந்தச் சிறுமியைக் கடத்தியவர்கள் பற்றிய வீடியோவை ஒரு மொபைல் எண்ணுக்கு அனுப்புகிறார்.

சில மாதங்கள் கழித்து, மாருதிநகருக்கு மாற்றலாகி வருகிறார் எஸ்ஐ அர்ச்சனா (வரலட்சுமி). அவர்தான் ஜெய்சங்கரின் கேர்ள்ப்ரெண்ட். குருநாதனும் நாகாவும் சேர்ந்துதான் தனது காதலரைக் கொலை செய்தனர் என்ற உண்மையையும் தெரிந்துகொள்கிறார். அதற்குப் பழிவாங்கும் வகையில், அடுத்தடுத்து குருநாதனையும் நாகாவையும் கொலை செய்யத் திட்டமிடுகிறார்.

ஜெய்யும் அர்ச்சனாவும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர்கள். அங்கு, அவர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் மூன்று பேர் (சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், யாசர்). ஜெய்யின் கொலைக்குப் பழி வாங்க, அர்ச்சனா உடன் அம்மூன்று நண்பர்களும் கைகோர்க்கின்றனர். குறிப்பிட்ட நாளில் வெவ்வேறு பிரச்சசனைகளுக்காக மூவரும் மாருதிநகர் காவல் நிலையம் செல்கின்றனர்.

இரவு 8 மணியளவில் கரண்டை ‘கட்’ செய்துவிட்டு குருநாதனைக் கொல்ல வேண்டுமென்பது அவர்களது திட்டம். ஆனால், 7.45 மணியளவில் அங்கு நாகா வருகிறார். அதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மூவரும் விழிக்க, ‘எதுவும் செய்ய வேண்டாம்’ என்கிறார் அர்ச்சனா. ஆனால், சரியாக 8 மணிக்கு கரண்ட் ‘கட்’ ஆகிறது. அப்போது துப்பாக்கிச் சத்தம் இரண்டு முறை கேட்கிறது.

மீண்டும் மின்சாரம் வரும்போது நாகாவும் குருநாதனும் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கிடக்கின்றனர். அர்ச்சனாவோ, அவரது மூன்று நண்பர்களோ அதில் சம்பந்தப்படவில்லை. அப்படியானால் குருநாதனைச் சுட்டது யார்? இந்த கேள்விக்கான பதிலை அறியும் வகையில், உயரதிகாரி நெடுஞ்செழியன் (ஆரவ்) தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. அதில் உண்மை தெரிய வந்ததா என்பதோடு படம் முடிவடைகிறது.

ஜெய்சங்கரின் கேர்ள்ப்ரெண்ட் யார் என்ற கேள்வி நம் மனதில் தோன்றிய மிகச்சில நிமிடங்களில், அர்ச்சனாவின் அறிமுகத்தை நமக்குக் காட்டிவிடுகிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன். அதேபோலவே, நடந்த கொலைக்கு யார் காரணம் என்பதையும் திரைக்கதையின் பாதியிலேயே சொல்லிவிடுகிறார். அதனால், அந்த கொலையின் பின்னணி என்ன என்பதை அறிவதே ‘த்ரில்’ ஊட்டும் விஷயமாக மாறுகிறது. ஆனால், கிளைமேக்ஸில் அது தெரியவரும்போது ‘இதுதானா அந்த பிளாஷ்பேக்’ என்ற வார்த்தைகளே மனதில் எதிரொலிக்கிறது.

இயக்குனரின் அனுபவம்!

‘மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்’ பட திரைக்கதை மஹத்திடம் இருந்து தொடங்கினாலும், அதன்பிறகு வரலட்சுமியிடம் மையம் கொண்டு, இறுதியாக ஆரவ்வை சுற்றி நகர்கிறது. அமித் பார்கவ், சுப்பிரமணிய சிவா காட்சிகள் வழக்கமானதாகத் தெரிந்தாலும், அவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் போரடிக்கவில்லை. மஹத்தின் நண்பர்களாக வரும் சந்தோஷ் பிரதாப், யாசர், விவேக் ராஜகோபால் மூவருக்குமே சமமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. உண்மையைச் சொன்னால், இதில் அனைவருக்கும் சம முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. படத்தின் ப்ளஸ்ஸும் மைனஸும் அதுவே. ஏனென்றால், எந்த பாத்திரத்தைப் பின்பற்றிச் செல்வது என்பதில் நமக்கு குழப்பம் அதிகமாகிறது.

’மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைக்கதையில் ‘சஸ்பென்ஸ்’ அம்சங்களைப் பொத்திப் பாதுகாக்கவில்லை. மாறாக, அடுத்தடுத்த காட்சிகளிலேயே அந்த முடிச்சுகள் விடுபடுகின்றன. அந்த இடங்களை மாற்றியமைத்திருந்தால் திரைக்கதை இன்னும் சுவையாக இருந்திருக்கும்.

அதேபோல, இப்படத்தில் அதிகளவில் துணைநடிகர்கள் பயன்படுத்தப்படாததும் பெருங்குறை. ஏனென்றால், நாம் பார்த்து ரசித்த ‘போலீஸ் ஆக்‌ஷன்’ திரைப்படங்களின் காரணமாக ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்றால் குறைந்தபட்சம் 15 முதல் 20 போலீஸ்காரர்களாவது இருப்பார்கள் என்ற எண்ணம் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. இந்த படத்திலோ, மருந்துக்குக் கூட உதிரி நடிகர் நடிகைகளைக் காண முடிவதில்லை. அதுவே, திரைக்கதை அமைப்பை நாடகத்தனமாக மாற்றிவிடுகிறது.

குறைந்த நடிப்புக்கலைஞர்களே திரையில் வந்தாலும், ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது சேகர் சந்திராவின் ஒளிப்பதிவு. ப்ரீத்தி – பாபுவின் படத்தொகுப்பு, ஒவ்வொரு காட்சியையும் கனகச்சிதமாக வார்க்க உதவியிருக்கிறது. காட்சியின் தன்மையோடு சேர்ந்து கலந்துவிட தூண்டுகோலாய் இருக்கிறது மணிகாந்த் கத்ரியின் பின்னணி இசை.

கன்னடத்தில் குறிப்பிடத்தக்க இயக்குனராக இருந்துவரும் தயாள் பத்மநாபன், தற்போது தொடர்ந்தாற்போல தமிழில் படங்கள் தந்து வருகிறார். ஓடிடி தளத்திற்கான குறைந்த பட்ஜெட் தயாரிப்பு என்ற முறையில், அவரது உழைப்பு திரையில் அபாரமானதாகவே மாறியிருக்கிறது. ஆனால், தியேட்டர் சென்று ஒரு படம் பார்த்த திருப்தியை இது தரவில்லை என்பதே உண்மை.

எப்படிப்பட்ட காட்சியனுபவம்?

இன்று டிவி சீரியலுக்கும் வெப் சீரிஸுக்குமான வித்தியாசத்தை மிகத் தெளிவாகக் கண்டுவிட்டார்கள் ரசிகர்கள். யூடியூப் வீடியோ ஆனாலும், சுவாரஸ்யம் தந்தால் அதனைக் கொண்டாடுகிறார்கள். அப்படியொரு சூழலில், இரண்டு மணி நேரத்தைச் செலவிடும் வகையிலேயே ஒரு கதை சொல்லலைக் கொண்டிருக்கிறது ‘மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்’.

திரைக்கதையை ‘பட்டி டிங்கரிங்’ செய்து, சஸ்பென்ஸ் விடுபடும் காட்சிகளைக் கனகச்சிதமாக வடிவமைத்து, துணைநடிகர்களைத் திரையில் சரிவரப் பயன்படுத்தி, கொஞ்சமாக மெனக்கெட்டிருந்தால் மிகச்சிறந்த ‘த்ரில்’ அனுபவமாக ’மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்’ மாறியிருக்கும். இப்போது, ‘ஓகே’ என்றளவுடன் தன் இருப்பை நிறுத்திக் கொண்டிருக்கிறது. போதுமான பணியிடங்கள் நிரப்பப்படாத காவல்நிலையத்துக்குள் சென்று வந்த அனுபவத்தைத் தருகிறது. 

உதய் பாடகலிங்கம்

சுற்றுலா நிறுவனத்தை ஆரம்பித்த நடிகர் அஜித்

நடிகர் சரத்பாபு காலமானார்: ரசிகர்கள் சோகம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *