markazhi thingal movie review

மார்கழி திங்கள் – விமர்சனம்!

சினிமா

இன்னொரு ‘அலைகள் ஓய்வதில்லை’யா?

கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், வாலிபமே வா வா, மண் வாசனை, வேதம் புதிது, நாடோடி தென்றல், கிழக்குச்சீமையிலே உட்படப் பல படங்களில் இளங்காதலர்களைக் காட்டி அன்றைய ரசிகர்களைக் காதல் கிறக்கத்தில் ஆழ்த்தியவர் இயக்குனர் பாரதிராஜா. பிற்பாடு, அவர் தன் மகனை நாயகனாக்கித் தந்த ‘தாஜ்மஹால்’ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இன்று, அவர் ஒரு வெற்றிகரமான குணசித்திர நடிகராக வலம் வருகிறார். அந்த பாரதிராஜாவைப் பிரதான பாத்திரத்தில் நடிக்க வைத்து, ’மார்கழி திங்கள்’ எனும் ஒரு காதல் திரைப்படத்தைப் படைத்திருக்கிறார் அவரது மகன் மனோஜ். எப்படியிருக்கிறது அப்படம்?

இன்னுமொரு ‘காதல்’ கதை

பெற்றோரை இழந்து தாத்தாவின் அரவணைப்பில் வளரும் ஒரு சிறுமி, பதின்பருவத்தில் தன்னுடன் பயிலும் ஒரு மாணவன் மீது காதல் கொள்கிறார். கல்லூரிக்குச் செல்லும் தருணத்தில் அது இன்னும் பெரிதாகிறது. அந்த நேரத்தில், இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க நேர்கிறது.

markazhi thingal movie review

அதனைப் பொறுக்க முடியாமல், தன் மீது பாசம் கொட்டும் தாத்தாவிடம் உண்மையைச் சொல்கிறார் அப்பெண். அவரும் அம்மாணவனின் வீடு தேடிச் செல்கிறார். ’மூன்று வருட காலம் இருவரும் பேசாமல், பார்க்காமல் இருக்க வேண்டும்’ என்று நிபந்தனை விதிக்கிறார். இருவருமே அதற்குச் சம்மதிக்கின்றனர்.

ஆனால், விதியின் விளையாட்டால் அம்மாணவன் படிப்பைப் பாதியில் கைவிடுகிறார். வேலை தேடி வெளிநாடு செல்வதாக, அப்பெண்ணிடம் சொல்லிவிட்டுப் பிரிகிறார்.

markazhi thingal movie review

மூன்றாண்டுகள் கழித்து, தன் காதலனின் வீட்டுக்குச் செல்கிறார் அந்தப்பெண். அவரது வீடு பூட்டிக் கிடக்கிறது. அவரது பெற்றோரும் வெளியூர் சென்றுவிட்டதாகத் தகவல். அதன்பிறகு, தன் காதலன் என்னவானார் என்பதை அப்பெண் தேடித் தெரிந்துகொள்வதுடன் படம் முடிவடைகிறது.

முதல் பாதி முழுக்கப் பள்ளிப் பருவ வாழ்வே சொல்லப்பட்டிருக்கிறது. அதில் நிறைந்திருக்கும் காதலுக்கான எதிர்வினைகள் பின்பாதியில் காட்டப்படுகின்றன.

நாம் பார்த்த, கேட்ட, கேள்விப்பட்ட காதல் சம்பவங்களைப் பிரதியெடுத்திருப்பதால், இது இன்னுமொரு காதல் படமாகத் தோற்றமளிக்கிறது.

அளவான நடிப்பு

இந்த படத்தில் கவிதா எனும் பாத்திரத்தில் ரக்‌ஷனாவும், அவரது தாத்தா ராமையாவாக பாரதிராஜாவும், காதலர் வினோத்தாக ஷ்யாம் செல்வனும் நடித்துள்ளனர். நாயகியின் தாய்மாமனாக சுசீந்திரனும், வேலைக்காரர் ராசுவாக அப்புக்குட்டியும் நடித்துள்ளனர்.

ஷ்யாம் செல்வன் – ரக்‌ஷனா ஜோடி பார்ப்பதற்கு அக்கா தம்பி போலத் தோற்றமளித்தாலும், திரைக்கதை நகர்வில் அந்த எண்ணம் கரைந்து போகிறது. அந்தளவுக்கு இருவரும் காதலைத் திரையில் கொட்டியிருக்கின்றனர். அதேநேரத்தில், பள்ளிப்பருவக் காட்சிகளில் இருவரும் முதிர்ச்சியான உடல்வாகுடன் தெரிவதைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

markazhi thingal movie review

வரும் நாட்களில், ரக்‌ஷனாவைக் கவர்ச்சிகரமான வேடங்களில் பார்க்க வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன.

நாயகியின் தோழியாக வரும் நக்‌ஷா, மிக முதிர்ச்சியாகத் திரையில் தென்படுகிறார். பள்ளி மாணவி வேடம் அவருக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை.

பாரதிராஜாவுக்கு இதில் பெரிய பாத்திரமில்லை. ஆனால், சொல்லும் செயலும் வெவ்வேறாக இருக்கும் முதியவர் பாத்திரத்தை மிகச்சிறப்பாகத் திரையில் வெளிப்படுத்தியுள்ளார்.

இவர்கள் தவிர்த்து நாயகனின் பெற்றோராக வரும் ஜார்ஜ் விஜய், சாவித்திரி நடிப்பு நம்மைக் கவர்கிறது.

காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி, கலை இயக்குனர் சேகர் பங்களிப்புடன், இருபதாண்டுகள் நாம் பின்னோக்கிச் செல்ல உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன்.

இயக்குனர் தந்த காட்சிகளைச் சரிவரக் கோர்த்து நம் பார்வைக்கு வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் தியாகு. ஆனால், பின்பாதியில் ஏதோ ஒன்று விடுபட்ட உணர்வு நம்மை அலைக்கழிக்கிறது.

இளையராஜா தான் இப்படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் என்று சொல்வது ‘க்ளிஷே’வாக இருக்கும். ஆனால், அதைத்தான் அவரது பங்களிப்பு செய்திருக்கிறது. ‘புடிச்சிருக்கா புடிச்சிக்கிச்சு..’ ‘உன் இதழினால்’, ’உன் நினைவால் உனை எழுத முயன்றேன்’ என்று அவர் தந்திருக்கும் மூன்று பாடல்களும் புத்துணர்வூட்டும் மெட்டுகள். அதில் நிறைந்திருக்கும் எளிமை சமீபகாலமாக நாம் அரிதாகக் காண்பது.

போலவே காதல், வெட்கம், நெகிழ்ச்சி, இயலாமை, வன்மம், ரௌத்திரம் என்று பல்வேறு உணர்வுகளை அடிக்கோடிட்டுக் காட்ட உதவியிருக்கிறது ராஜாவின் பின்னணி இசை. முன்பாதியில் காதலைப் பொங்கி வழியச் செய்கிறார் என்றால், கிளைமேக்ஸில் நம்மைப் பதைபதைப்புக்கு ஆளாக்குகிறார் தன்னிசை வழியாக.

செல்லா செல்லம் உதவியோடு கதை, திரைக்கதை, வசனம் எழுதியதோடு இப்படத்தைத் தயாரித்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். அந்த வகையில், மனோஜை இயக்குனராக்கி அழகு பார்த்திருக்கிறார்.

இன்றைய சூழலில், கிராமப்புறப் பின்னணியில் ஒரு காதல் படத்தை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல. அதனை உணர்ந்து, அழகியலோடு காட்சிகளை வார்த்திருக்கிறார் மனோஜ் பாரதிராஜா. ஆனால், காதலைச் சாதீய வன்மம் முழுங்கும் இடங்களை ‘உக்கிரமாக’ காட்டத் தவறியிருக்கிறார்.

கொஞ்சம் சர்ச்சைகள்

மிகக்குறுகியதொரு சிறுகதைக்குத் திரையுருவம் தரும்போது நல்லதொரு காட்சியனுபவம் கிடைக்க அதிக வாய்ப்புண்டு. பெரிதாக ஜோடனைகள் இல்லாமல், மிக அழகாகப் படம்பிடிக்கப்பட்ட காட்சிகளால் அதனைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் மனோஜ். அதோடு, சாதீயத்தால் சிதைக்கப்பட்ட ஒரு காதலைக் காட்டி சில சர்ச்சைகளையும் கையிலேந்தியிருக்கிறார்.

நாயகனும் நாயகியும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களாகத் திரையில் காட்டப்படுகின்றனர். பொள்ளாச்சி வட்டாரத்தில் கதை நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் வெவ்வேறு வட்டாரத்தை நினைவூட்டுவது கதை நிகழுமிடம் குறித்த குழப்பத்தை அதிகப்படுத்துகிறது.

இந்த படத்தில் பாரதிராஜாவின் பெயர் ’ராமையா’ என்று குறிப்பிடப்பட்டாலும், ஓரிடத்தில் அவர் ‘ராமதாஸ்’ என்று கையெழுத்திடுவதாகக் காட்டப்பட்டுள்ளது. ஒன்று, தொடக்கத்தில் இருந்தே அப்பெயரைக் குறிப்பிட்டிருக்க வேண்டும் அல்லது முற்றிலுமாகத் தவிர்த்திருக்க வேண்டும். நிச்சயமாக, இது தேவையற்ற சர்ச்சையையே உருவாக்கும்.

எண்பதுகளில் ‘அழியாத கோலங்கள்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘ஓ மஞ்சு’, படங்களைத் தாண்டி, பள்ளிப்பருவத்து காதலைப் புனிதப்படுத்தியதில் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்கு முக்கிய இடமுண்டு. தொண்ணூறுகளில் ‘வைகாசி பொறந்தாச்சு’, இரண்டாயிரமாவது ஆண்டில் ‘துள்ளுவதே இளமை’, அதன்பிறகு ‘3’, ‘நீதானே என் பொன் வசந்தம்’ என்று பல படங்கள் அந்த இடத்தைப் பிடித்தன.

ஆனால், ’பரியேறும் பெருமாள்’ போன்று ஆணவக்கொலை சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் மிகச்சிலவே. இவ்விரண்டு வகைமையையும் ஒன்றாகப் பிணைத்து ஆக்கப்பட்டுள்ளது ‘மார்கழி திங்கள்’. அதனால், இப்படத்தை இன்னொரு ‘அலைகள் ஓய்வதில்லை’யாக நாம் கருதுவது பெரும் பிழையாகவே அமையும்.

’இன்றைய சூழலில் சமூகம் இப்படித்தான் சில காதல்களை எதிர்கொள்கின்றன’ என்று சொன்ன வகையில் யதார்த்தமான காதல் கதை ஒன்றைச் சொல்ல முயன்றிருக்கிறார் மனோஜ். அவரது முதல் முயற்சியை நாம் காண்பதற்கான ஒற்றைத் தூண்டலாக அமைந்திருக்கிறது இளையராஜாவின் இசை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதய் பாடகலிங்கம்

Asian Para Games 2023: 100 பதக்கங்களை கடந்து இந்தியா புதிய வரலாறு!

தீபாவளிக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *