சொந்த ஊரில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு அவரது உறவினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவர் மறைந்த நடிகர் மாரிமுத்து. நேற்று காலை டப்பிங் பேச சென்ற நிலையில் அங்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட மாரிமுத்துவின் உடலுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாலையில் அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைதேரி கிராமத்திற்கு ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது.
இன்று (செப்டம்பர் 9) அதிகாலை வந்தடைந்த மாரிமுத்துவின் உடல் அவரது வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்துஅவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் திரைப்பட நடிகர் விமலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மாரிமுத்து இயக்கிய புலிவால் படத்தில் விமல் கதாநாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, எதிர்நீச்சல் தொடரில் சிறப்பாக நடித்து வந்த மாரிமுத்துவின் மறைவு செய்தி கேட்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இரட்டை சகோதரிகளான ஆன்சி மற்றும் மெர்சி வீல் சேரில் வந்து அஞ்சலி செலுத்தியது அங்கிருந்தவர்களையும் கலங்க செய்துள்ளது.
மாரிமுத்துவின் உடலுக்கு மதியம் 12 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!