மாரி செல்வராஜின் “வாழை”… “தென்கிழக்கு தேன்சிட்டு” முதல் சிங்கிள் எப்படி?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ என மூன்று படங்களும் அடித்தட்டு மக்களின் அவலங்களையும், அவர்களின் உரிமைகளைப் பற்றி பேசிய படம்.
வணிக ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படங்களை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ்.
முதல் படமாக தான் இயக்க வேண்டும் என்று எழுதப்பட்ட கதையை வெற்றிகரமான இயக்குநர் என தன்னை சினிமாவில் உறுதிப்படுத்திய பின் சிறுவர்களை மையமாக கொண்டு திரைக்கதை எழுதப்பட்டுள்ள ‘வாழை’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் நேற்று (ஜூலை 18) வெளியிடப்பட்டுள்ளது. அதனையொட்டி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது,
“முதன்முதலில் நான் படம் இயக்கலாம் என நினைத்த கதை ‘வாழை’. 50 லட்சம் ரூபாய் இருந்தால் படம் எடுத்துவிடலாம் என்ற நிலையில், இந்தப் படத்தை பொறுமையாக நேரம் கிடைக்கும்போது எடுக்க வேண்டும் என்று தள்ளிவைத்தேன்.
‘பரியேறும் பெருமாள்’ இயக்கிய பின் அடுத்து ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ இயக்கிக் கொண்டிருந்தபோது, ’வாழை’ என் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. அப்படித்தான் இப்படம் தொடங்கியது.
நான் உருவாக்கும் எல்லா கதாபாத்திரங்களும் என் வாழ்க்கையில் நான் பார்த்தது. அவர்கள் இன்னும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே எனக்குள் பதட்டம் இருந்துகொண்டேயிருக்கிறது.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பாதகத்தி’ பாடல் என்னை தொந்தரவு செய்துகொண்டேயிருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் மிகவும் பிடித்துள்ளது. நான் பட்ட கஷ்டங்களை நீங்கள்பட வேண்டும் என்று கூறி நடிகர்களிடம் வேலை வாங்கினேன்.
என் வாழ்வில் நடந்த ஆகப்பெரும் துயரத்தை எனது காதல் மனைவி திவ்யா தயாரிப்பார் என நான் நினைத்துப் பார்த்தது கிடையாது. பிரமிப்பாக இருக்கிறது.
என் வாழ்க்கையில் மீளமுடியாத துயரம் ‘வாழை’. என்னைப்பற்றி நிறைய கேள்விகள் உங்களிடம் இருக்கும். என்னை நீங்கள் புரிந்துகொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம் இது” என்றார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘வாழை’.
டிஸ்னி ஹாட் ஸ்டார் வலைதளத்தில் வெளியிடுவதற்காக அந்நிறுவனத்தின் நிதியுதவியுடன் நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் வாழை படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன. படத்தை பார்த்த ரெட் ஜெயண்ட் நிறுவனம் சிறப்பான படம் என பாராட்டியதுடன், திரையரங்குகளில் வெளியிடலாம் என கூறியதால் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது ‘வாழை’.
இந்தப் படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முதல் சிங்கிள் எப்படி?
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள “தென்கிழக்கு தேன்சிட்டு” பாடலை பாடகர் தீ பாடியுள்ளார். வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். தீ குரலில் ஆர்ப்பாட்டம் இல்லாத மெலடியாக மனதை வருடுகிறது பாடல்.
யுகபாரதியின் வரிகளும் சந்தோஷ் நாராயணனின் மென்மையான இசையும் மனதை வருடிச் செல்கின்றன. பாடகர் தீ-யின் குரலில் “பனங்கருக்கும் பால் சுரக்கும்… பசி மறக்கும் நாள் பிறக்கும்” போன்ற வரிகள் உற்சாகமூட்டுகின்றன.
கிராமத்துப் பின்னணியும், பள்ளியும், காடும், மரமும் செடியும் பூவுமாய், இளம்பிராயத்தை சுகமாக மனசுக்குள் உணரச் செய்திருக்கிறது பாடலின் காட்சிகள்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: போர்னோகிராபி அடிக்ஷன்… மண வாழ்க்கையை பாதிக்குமா?
டாப் 10 நியூஸ்: எடப்பாடி ஆலோசனை முதல் கனமழை விடுமுறை வரை!
பியூட்டி டிப்ஸ்: இளமையைத் தக்கவைக்குமா முகத்தில் தடவும் தேங்காய் எண்ணெய்?
கிச்சன் கீர்த்தனா: மணத்தக்காளி வற்றல் குழம்பு