முதல் பட ரிலீசுக்கு பிறகுதான் வீட்டில் பாத்ரூமே கட்டினோம்!- மாரி செல்வராஜ் உருக்கம்!

Published On:

| By Kumaresan M

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வாழை திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தனது சிறு வயதில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதை களத்தை மாரி செல்வராஜ் செதுக்கியுள்ளார். இயக்குநர் பாலா படத்தை பார்த்துவிட்டு உச்சக்கட்ட சோகத்தில் மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தம் கொடுத்த வீடியோ வைரலானது.

வாழை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மாரி செல்வராஜ் திருநெல்வேலியில் பார்த்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘வாழை படம் எனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்து எடுத்திருக்கிறேன். இது அனைவரையும் மனம் கனத்துப்போக செய்யும். மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த மாதிரியான இடத்திலிருந்துதான் மாரி செல்வராஜ் என்பவன் கிளம்பி வந்தான் என்பதை இந்தப் படம் மக்களுக்கு உணர்த்தும். ரஜினியுடனான படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. வாழை படத்தை பார்த்து பாலா சார் ரொம்பவே எமோஷனல் ஆனார். ஒருவார்த்தைகூட இருவரும் பேசவில்லை” என்றார்.

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்கத்தில் நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. முதல் படம் பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை என மூன்று படங்களுமே நெல்லை மண்ணை மையமாக கொண்டு எடுக்கப்பட்டவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மாரி செல்வராஜ் அளித்துள்ள பேட்டியில், பரியேறும் பெருமாள் படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் தங்கள் வீட்டில் பாத்ரூம் கட்டப்பட்டதாக கூறியுள்ளார். குளிப்பதற்கு பெண்கள் தென்னங்கீற்றை வைத்து அடைத்து கொண்டு குளிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது அண்ணன் சிவனணைந்த பெருமாள் பிஎட் படிப்பதற்கு பணம் இல்லாததால் , ஒட்டுமொத்த ஆடுகளையும், மாடுகளையும் விற்றதாகவும், அப்போது துக்கம் விழுந்தது போல் தங்கள் வீடு காணப்பட்டதாக மாரி செல்வராஜ் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

லாட்டரி டு ராக்கெட் … மார்ட்டின் குழுமம் பறக்க தொடங்கிய பின்னணி என்ன?

உறக்கத்தில் அந்த பெயர் வச்சுட்டேன்! மகனுக்கு தமிழ்ப் பெயர் வைக்காததற்கு விசித்திர காரணம் சொன்ன தங்கர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel