சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இயக்குனராக அடையாளம் காணப்பட்ட மாரி செல்வராஜ், இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
வாழை படத்தை பார்த்து விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மாரி செல்வராஜின் வீட்டுக்கு சென்று பாராட்டினார். பின்னர், அவரின் குடும்பத்தாரோடு சேர்ந்து வாழை இலையில் உணவு சாப்பிட்டார்.
பல தரப்பில் இருந்து வாழை படத்துக்கு பாராட்டு குவிந்தாலும், ஒரு சிலர் அந்த படத்தை விமர்சித்துள்ளனர். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வாழை படத்தை எடுத்த மாரி செல்வராஜை கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். தனது இழந்த அடையாளத்தை அதிகாரத்தை மீட்கப் போராடுகின்ற ஒரு சமுதாயத்தை பெருமைப்படுத்த முயற்சி செய்ய முடியாமல் போய் இருக்கலாம். ஆனால், அந்த சமுதாயத்தை இன்னும் கூலிக்காரர்களாகவே சித்தரித்துச் சிறுமைப்படுத்துகின்ற போக்கும், அவர்களின் போராட்ட உணர்வுகளையும் குணங்களையும் மழுங்கடித்து யார் யாருடைய அரசியல் லாபங்களுக்காகவோ புதிய களம் அமைத்துக் கொடுக்கக்கூடிய விதமும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
எனினும், பாராட்ட நினைக்கிறேன். பாராட்டவும் முடியவில்லை. திட்ட நினைக்கிறேன். திட்டவும் முடியவில்லை. தன்னைக் காட்டிலும் தனது குடும்பம் பெரிது. தனது குடும்பத்தைக் காட்டிலும் இந்த குலமும் இந்த மண்ணும் மக்களும் பெரிது என்ற அடிப்படையில் வாழ்ந்து, என்றோ வீழ்ந்து, இன்று மீண்டும் வீறுகொண்டு எழுந்திருக்கக் கூடிய மாபெரும் சமுதாயத்தை ‘வாழை’யை சொல்லி கூலிகளாக கோழைகளாக்க வேண்டாம்” என்று பதிவிட்டிருந்தார்.
❤️❤️❤️ நன்றி பூங்கொடி டீச்சர் #Vaazhai https://t.co/s7hjI944In
— Mari Selvaraj (@mari_selvaraj) August 31, 2024
இந்த நிலையில், மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார். வாழை படத்தில் பூங்கொடி டீச்சருடன் மாணவர்கள் ஆடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அதே போன்று ஒரு டீச்சருடன் மாணவர்கள் நடனமாடும் வீடியோதான் அது. அந்த வீடியோ காட்சியுடன், ஒரு படைப்பு மக்களை கவர்ந்து விட்டால் எந்த விதமான எதிர்ப்பு வந்தாலும் அங்கீகரிப்பார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் இதோ இந்த ஆண்டு பள்ளி ஆண்டு விழாவில் இதுதான் நடக்க போகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“மற்ற மொழி சினிமா துறையை விட மலையாளம்தான் சிறந்தது”- மவுனம் கலைத்த மோகன்லால்