மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்திற்கு வாழை என்று பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குனர் ராமிடம் மாரி செல்வராஜ், உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 2018-ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மாரி செல்வராஜ் அறிமுகமானார்.
தென் மாவட்டங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும், அவர்களது அரசியலையும் இப்படத்தில் மாரி செல்வராஜ் பேசியிருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2021-ஆம் ஆண்டு கர்ணன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். நாட்டார் தெய்வங்கள் குறித்தும், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமத்தில் பேருந்து நிற்காதது குறித்தும் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.
அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்த மாரி செல்வராஜ், மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. டப்பிங், ஒலிப்பதிவு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், மாரி செல்வராஜ் இயக்கும் நான்காவது படத்தின் அறிவிப்பு இன்று (நவம்பர் 21) வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கு வாழை என்று பெயரிடப்பட்டுள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் மாரி செல்வராஜின் நவி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
படத்தின் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. நவி ஸ்டூடியோஸ் மூலம் முதல் முறையாக மாரி செல்வராஜ் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
படத்தின் போஸ்டரில் வாழைத் தோட்டத்தில் நான்கு இளைஞர்கள் வேலை செய்வது போன்ற காட்சி அமைப்புகள் உள்ளது. அரிவாள், தூக்கு வாளி, நாய்க்குட்டியுடன் அவர்கள் அமர்ந்து இருக்கும் காட்சிகளும் உள்ளது.
மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையில், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் சிறுவனாக இருந்தபோது வாழைத் தோட்டத்தில் வேலை செய்த அனுபவங்களை எழுதியிருப்பார்.
அந்தக் கதையை அடிப்படையாக வைத்து வாழை திரைப்படம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
“பட்டினியின்மை எனும் இலக்கு எட்டப்பட்டுள்ளது” – மு.க.ஸ்டாலின்
பிரதமர் பதவி நிரந்தரமில்லை: சத்யபால் மாலிக்!