இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சியின் மறு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்த இருந்தார். அவரின் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சென்னை பனையூரில் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று (ஆகஸ்ட் 12) சென்னையில் திடீரென கன மழை பெய்தது. இந்த மழை காரணமாக இசை நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஏ. ஆர் ரகுமான், இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய போது, “மழை காரணமாக சென்னையில் நடத்தப்பட இருந்த இசை நிகழ்ச்சியை தள்ளி வைத்து உள்ளோம். நமது அரசாங்கத்தின் உதவியுடன்.. கலை நிகழ்ச்சிகள், மெகா ஷோக்கள் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சிறப்பான உள்கட்டமைப்பை நாம் அரசு மூலம் உருவாக்குவோம் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ”அரசு இந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றும். ஈசிஆரில் நிறுவப்படும் ’Kalaignar Convention Centre’ பெரிய வடிவ கச்சேரிகள், நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்தக்கூடிய உலகத்தரம் வாய்ந்த வசதியாக இருக்கும் இயற்கையான சூழ்நிலையில், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பார்க்கிங் இடங்கள் மற்றும் சிறந்த இணைப்புடன் இது நகரத்தின் புதிய கலாச்சார சின்னமாக அந்த Kalaignar Convention Centre சென்டர் இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி மழையால் ஒத்திவைக்கப்பட்ட“மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்துள்ளார். மேலும், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றும் இந்த நிகழ்ச்சிக்காக பொறுமை காத்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிமுக மாநாடு தடைகோரி வழக்கு: நீதிமன்றம் தீர்ப்பு!
’ரஜினி சாரோட நம்பிக்கை தான் படத்தோட வெற்றிக்கு காரணம்’ – நெல்சன்