டைட்டில் நமக்கானது..!
பதின்ம வயது நட்பையும் காதலையும் சொல்லும் படங்கள் மிகக்கவனத்துடன் கையாளப்பட வேண்டியவை. ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது போலப் படைப்பாளியையும் பார்வையாளரையும் ஒருசேரச் சரிவடையச் செய்பவை. அதேநேரத்தில், பள்ளிப் பருவத்து நிகழ்வுகளையும் அந்த காலகட்டத்தின் சிறப்புகளையும் நினைவூட்டும்விதமாகவும் அப்படங்கள் இருக்கும்பட்சத்தில் சிறப்பான வரவேற்பைப் பெறும்.
பன்னீர் புஷ்பங்கள், துள்ளுவதோ இளமை, ஆட்டோகிராப், பதினாறு, 96 என்று தொடரும் அந்த வரிசையில் கடந்த ஆண்டு வெளியான ரங்கோலியும் இணைந்தது. அதில் புதிதாகச் சேர முனைந்திருக்கிறது ‘மறக்குமா நெஞ்சம்’.
’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் துல்கருடன் தோன்றிய ரக்ஷன், இதில் நாயகன். கேபிஒய் தீனா, மலினா, ஸ்வேதா வேணுகோபால், பிராங்ஸ்டர் ராகுல், ஆஷிகா காதர், மெல்வின் டென்னிஸ் உட்படப் பலர் நடித்திருக்கும் இப்படத்தை ராகோ.யோகேந்திரன் இயக்கியிருக்கிறார்.
பள்ளிக்கால நட்பையும் காதலையும் சொல்லும் படமாக இருக்கும் என்ற உறுதியைத் தந்திருந்தது ‘மறக்குமா நெஞ்சம்’ ட்ரெய்லர். சரி, படம் அதனை மிகச்சரியாக, சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறதா?
பள்ளிப்பருவத்தில் காதல்!
கன்னியாகுமரி வட்டாரத்தில் உள்ள ஒரு ஊர். அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளி. 2008ஆம் ஆண்டு அதில் பன்னிரண்டாம் வகுப்பு முதல் பிரிவில் படித்தவர்களில் ஒருவர் கார்த்திக் (ரக்ஷன்). அவரது நண்பர்கள் சலீம் (தீனா), ஜோசப், கௌதம் (பிராங்ஸ்டர் ராகுல்). இவர்கள் நால்வரும் கடைசி பெஞ்சில் அமர்ந்து கலாட்டாவாகப் பள்ளி நாட்களைக் கழிக்கின்றனர்.
பதினோராம் வகுப்பின்போது, புதிதாக வந்து சேர்ந்த பிரியதர்ஷினியைப் (மலினா) பார்த்தவுடனே கார்த்திக் மனதில் காதல் பிறக்கிறது. அதனை வெளிப்படுத்த, அவர் பல முறை முயல்கிறார். இருந்தாலும், பலன் கிடைப்பதாக இல்லை. திடீரென்று இருவரும் ஒருவரையொருவர் பார்த்து பேச முடியாமல் போகிறது.
பத்தாண்டுகள் கழித்து கல்லூரி, வேலை என்று அந்த வகுப்பில் படித்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்றுவிடுகின்றனர். சலீம் மட்டுமே கார்த்திக் உடன் இருக்கிறார்.
ஒருநாள், அவர்கள் படித்த பள்ளியின் மீது இன்னொரு பள்ளி உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பு வெளியாகிறது.
2008ஆம் ஆண்டு அப்பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியர் மீண்டும் தேர்வெழுத வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அனைவரும் அதனால் அதிர்ச்சியடைந்தாலும், கார்த்திக் மட்டும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
மூன்று மாதங்கள் அம்மாணவர்கள் அனைவரும் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து தேர்வெழுத வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் அறிவிக்கிறது. சலீம் உடன் சேர்ந்து அப்பள்ளிக்குச் செல்கிறார் கார்த்திக். பிரியதர்ஷினி உட்பட அனைவருமே அங்கிருக்கின்றனர். ஒவ்வொருவரும் வாழ்வில் ஒவ்வொருவிதமான அனுபவங்களைத் தாண்டி வந்து அங்கு அமர்ந்திருக்கின்றனர்.
அவர்களால் மீண்டும் பள்ளிப் பருவத்தை அனுபவிக்க முடிந்ததா? பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகும் அவர்களுக்கு இடையிலான உறவும் நட்பும் அப்படியே இருந்ததா என்று சொல்கிறது ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் மீதி.
‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என்ற யதார்த்தத்தில் சாத்தியமில்லா கற்பனைக்குச் செயல் வடிவம் தந்திருக்கிறது இப்படத்தின் கதை. உண்மையைச் சொன்னால், இது மிகவும் சுவாரஸ்யமானது. ரீயூனியன் நடத்துவதே இயலாது எனும் வாழ்க்கைச் சூழலில், மீண்டும் ஓரிடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் என்பது எப்படிச் சாத்தியம்?
ஆனால், ’இருட்டுக்கடை அல்வா’ போன்றிருக்கும் அந்த முரணைச் சுவையாகச் சொல்வதை விட்டுவிட்டு, ‘எப்படா உன் காதலை சொல்லப் போற’ என்று நாயகனிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கின்றன இதர பாத்திரங்கள்.
படத்தின் கிளைமேக்ஸில் தான் அவர் அதனைச் சொல்வார் என்று நமக்குத் தெரியாதா? ஆனால், அதற்குள் தான் எத்தனை ‘அமிலச் சோதனை’களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது?!
ஏன் இத்தனை சொதப்பல்கள்!
பள்ளிப்பருவத்தை நினைவூட்டும் படங்கள் எப்போதுமே ‘மினிமம் கியாரண்டி’யை தரும். ஆசிரியரின் பார்வையில் அமைந்த படங்கள் ஒரு வகை என்றால், மாணவ மாணவியர் பார்வையைச் சொல்வது இன்னொரு வகை. ‘ஸ்கூல் மாஸ்டர்’ படமும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ மற்றும் ‘துள்ளுவதோ இளமை’ படங்களும் வேறுபடுவது இந்த இடத்தில்தான்.
அதனை அடிக்கோடிட்டுக் காட்ட, ஒரு கதையில் ஆசிரியர்களின் பாத்திரங்களும் மாணவ மாணவியரின் பின்புலமும் ‘தெளிந்த நீரோடை’யாக வடிவமைக்கப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஓரிரு காட்சிகளிலாவது முக்கியத்துவம் தரப்பட்டிருக்க வேண்டும்.
வெறுமனே ஒரு இளைஞனின் மனதில் பூட்டி வைக்கப்பட்ட காதலைப் பற்றிப் பேச வேண்டுமென்றால், பள்ளிப் பருவம் என்பது ஊறுகாய் அளவுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்.
அப்படி எந்த கணக்கு வழக்கும் வைத்துக்கொள்ளாமல், ‘மறக்குமா நெஞ்சம்’ திரைக்கதை தன் போக்கில் சென்றுகொண்டே இருக்கிறது. அதுதான் இப்படத்தைப் பார்ப்பதில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை.
கதையின் ஆணிவேராக உள்ள கார்த்திக் – பிரியதர்ஷினி பிரிவுக்கான காரணத்தைத் திரைக்கதையில் தெளிவாகச் சொல்லவில்லை இயக்குனர். அவர்கள் எப்படித் தேர்வு எழுதினார்கள் என்றோ, எப்போது கடைசியாகச் சந்தித்தார்கள் என்றோ இக்கதையில் சொல்லப்படவில்லை.
சமீபத்தில் வந்த ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் இது போன்ற சிக்கல்கள் மிகச்சிறப்பாகக் கையாளப்பட்டிருந்தன. கூடவே, முக்கியப் பாத்திரங்கள் அனைத்தும் மிகச்சரியான அளவில் திரையில் காட்டப்பட்டிருந்தன.
இது போன்று இத்திரைக்கதையில் இருக்கும் லாஜிக் மீறல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். நமது நோக்கம் அதுவல்ல. நடிப்புக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை சேர்த்தழைத்து, மொத்த ஸ்கிரிப்டையும் படிக்க அல்லது கேட்கச் செய்து, அவர்களிடம் இருந்து கேள்விகளையும் யோசனைகளையும் பெற்றிருந்தாலே இவற்றில் பலவற்றைச் சரி செய்திருக்க முடியும். அதுவும் நிகழவில்லை.
இறுதியாக, ஒரு காட்சி எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்பதில் எந்தத் தெளிவும் இல்லை. அதனால், திரைக்கதை ‘சவசவ’ என்று நகர்கிறது. அதன் காரணமாக, முதல் பாதியில் ‘எப்படா இடைவேளை விடுவாங்க’ என்று மனம் பதறுகிறது; இரண்டாம் பாதியிலோ ‘கிளைமேக்ஸ் எப்போ வரும்’ என்று தவிக்கிறது.
தாங்கிப் பிடிக்கும் இசை!
‘மறக்குமா நெஞ்சம்’ செய்திருக்கும் நல்ல விஷயங்களில் ஒன்று, நிறைய கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருப்பது.
ரக்ஷனும் மலினாவும் நம் பொறுமையைச் சோதித்தாலும், இதர கலைஞர்கள் நல்லதொரு நடிப்பைத் தந்திருக்கின்றனர். சலீம் ஆக வரும் தீனா, சரண்யாவாக வரும் ஸ்வேதா, நாயகனுடன் மோதல் போக்கைக் கையாளும் ராகவ் ஆக வரும் முத்தழகன், கர்ப்பிணி மாணவியாக வரும் ஆஷிகா, கிளைமேக்ஸில் வரும் மாணவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். முனீஸ்காந்த், அகிலா ஜோடி உண்டென்றாலும், அவர்களுக்கான பிணைப்பைச் சொல்லும் பிளாஷ்பேக் காட்சி திரைக்கதையில் தவறான இடத்தில் அமைந்துள்ளது.
கோபி துரைசாமி, ராஜேஷ் டி.ஜி.யின் ஒளிப்பதிவு இப்படத்தின் பெரும்பாலான பிரேம்களை அழகுறக் காட்டியிருக்கிறது. சச்சின் வாரியரின் இசை துவண்டு விழும் திரைக்கதையைத் தாங்கிப் பிடிக்க முயன்றிருக்கிறது. ‘வானிலை சுகம்’, ‘பருவக்கால நினைவிது’, ‘துடிக்கும் நெஞ்சம்’, ‘நேற்றும் இன்றும் இரு தினம்’ பாடல்கள் சட்டென்று மனதைப் பற்றிக் கொள்கின்றன.
ராகோ.யோகேந்திரன் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். திரைக்கதை தரும் அயர்ச்சியை மீறி, கதையின் மையப்புள்ளி நம்மை ஈர்ப்பது நிச்சயம்.
பள்ளிப் பருவத்தில் காதலிப்பது போன்ற படங்கள் வெளியானாலே பெற்றோர்கள் வயிற்றில் அமிலம் சுரக்கும். அதையே இந்த படமும் செய்திருக்கிறது. கிளைமேக்ஸில் தனது காதலியை ஒரு மாணவர் தேடிச் செல்வது போன்று ஒரு காட்சி உண்டு. அதற்கு முன்பான காட்சிகள் எரிச்சலை ஏற்படுத்தினாலும், அப்பெண்ணிடம் பேசிவிட்டு வந்தபிறகு அம்மாணவர் சொல்லும் விளக்கம் சரியாகத் திரையில் வெளிப்பட்டுள்ளது.
அதே போன்ற அணுகுமுறையைப் படம் முழுவதும் பயன்படுத்தியிருந்தால், இப்படம் தொட்டிருக்கும் உயரமே வேறு. ஆனால், ‘அதுக்கு வாய்ப்பில்ல’ என்பது போலவே முக்கால்வாசி படம் ஓடி முடிகிறது.
பள்ளிப் பருவத்தைத் தாண்டிய ஒருவர் மீண்டும் பயிலச் செல்வது போல ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’, ‘காவலன்’ படங்களில் பார்த்திருப்போம். ‘ஒரு கல்லூரியின் கதை’யில் நாயகனுக்காக மொத்த மாணவ மாணவியரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கல்லூரிக்கு வருவதாகச் சொல்லப்பட்டிருக்கும்.
அதிலிருந்து உத்வேகம் பெற்று, பள்ளிப் பருவத்து நினைவுகளை 90ஸ் கிட்ஸ்களின் பார்வையில் சொல்ல முயன்றது பாராட்டப்பட வேண்டியது. ஆனால், அதனை மிகச்சரியாக வெளிப்படுத்த முடியாமல் ரொம்பவே சோதிக்கிறது ‘மறக்குமா நெஞ்சம்’.
உண்மையைச் சொன்னால் இந்த டைட்டில் நமக்கானது. படம் பார்த்து முடித்தபிறகு, ‘இதை மறக்குமா நெஞ்சம்’ என்று நம்மை நாமே நொந்துகொள்வதை நிச்சயம் தவிர்க்க முடியாது!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“தமிழக வெற்றி கழகம்” டைட்டிலே தோல்வி: அந்தணன் விமர்சனம்!
எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!