நடிகை த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படத்தில் த்ரிஷா உடன் இணைந்து நடிக்காதது குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்ததை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி திரைத்துறையினர் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார் மன்சூர் அலிகான். தொடர்ந்து ”எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு” என்று மன்சூர் அலிகான் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
இதனையடுத்து நடிகை த்ரிஷா “தவறு செய்வது மனிதம், மன்னிப்பது தெய்வீகம்” என்று தனது எக்ஸ் பதிவின் மூலம் மன்சூர் அலிகானுக்கு ரிப்ளை செய்திருந்தார். மேலும் வழக்கு நிலுவையில் இருப்பதால் நடவடிக்கை எடுப்பது குறித்து த்ரிஷாவிடம் போலீசார் கேட்டதற்கு, “மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால் நடவடிக்கை எடுக்க வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தலா ரூ.1 கோடியை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்துள்ளதால் இந்த பிரச்சனை மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
IPL2024: பணத்தால விசுவாசத்தை வெலைக்கு வாங்க முடியாது… சென்னை வீரருக்கு வலை விரிக்கும் அணிகள்?