mansoor alikhan explanation for his speech

த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் விளக்கம்!

சினிமா

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்கு மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படத்தில் நடிகை த்ரிஷா உடன் இணைந்து நடிக்ககாதது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். மன்சூர் அலிகானின் இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்தன.

மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில், “மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன். அவரது பேச்சுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். அவர் தொடர்ந்து ஆசைப்படலாம், ஆனால் அவரைப் போன்ற மோசமான ஒருவருடன் நான் நடிக்கவில்லை என்பதில் நான் நன்றாக உணர்கிறேன். அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன். மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர்” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

த்ரிஷாவின் இந்த எக்ஸ் பதிவை பகிர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அதில் அவர், “மன்சூர் அலிகான் பேசியதை கண்டு நான் மனம் உடைந்தேன். அது என்னை கொதிப்படையவும் செய்துள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் அனைவரும் ஒரே அணியாக இணைந்து பணியாற்றியவர்கள். எந்த துறையாக இருந்தாலும் பெண்கள், சக கலைஞர்கள், தொழில்முறை வல்லுநர்கள் என அனைவருக்குமான மரியாதை சமரசமின்றி வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களிலும் நடிகை த்ரிஷாவிற்கு ஆதரவாகவும், மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் கருத்துக்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார். அதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “’அய்யா’ பெரியோர்களே. திடீர்னு த்ரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு, பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல, நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடுறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவி விட்டுருக்கானுக. உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஞ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க.

mansoor alikhan explanation for his speech

பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்லன்னு ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு அஞ்சறவனா? த்ரிஷாக்கிட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா, என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்எல்ஏ, எம்.பி, மந்திரின்னு ஆயிட்டாங்க. பல கதாநாயகிகள் பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க.

மேலும், ‘லியோ’ பூஜையிலேயே என் பொண்ணு தில்ரூபா உங்களோட பெரிய ரசிகைன்னு த்ரிஷாக்கிட்ட சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும். 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கறவன் என எல்லாருக்கும் தெரியும். த்ரிஷாக்கிட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது. உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு… பொழப்ப பாருங்கப்பா” என்று குறிப்பிட்டுள்ளார்.

மன்சூர் அலிகானின் பதிவு வைரலாகி வரும் நிலையில், அவர் அலட்சியமான விளக்கத்தை அளித்துள்ளதாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

World Cup Final: 3வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா?

மீண்டும் ஆட்குறைப்பில் இறங்கியுள்ள அமேசான்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *