கமலின் ‘குணா’வுக்கு அர்ப்பணம்!
’இனி உயிர் பிழைக்க முடியாது’ என்ற சூழலில் அதிலிருந்து மீண்டு வருவதென்பது வாழ்வின் மிகப்பெரிய அதிசயம். நிலச்சரிவினால் சீட்டுக்கட்டு போலச் சரிந்து கிடக்கும் கான்கிரீட் குவியல்கள் ஊடே சில நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் குறித்த செய்திகளையோ, பெருந்துயருக்கு நடுவே தன்னுயிரைக் காத்துக் கொண்டவர்கள் குறித்த தகவல்களையோ நாம் விரும்பித் தெரிந்துகொள்வதற்குக் காரணம் அதுவே.
அது போன்ற அனுபவங்களைச் சொல்லும் திரைப்படங்களை ‘சர்வைவல் மூவிஸ்’ என்றழைக்கிறது திரையுலகம். பெருங்காடு, மலைச்சரிவு, ஆழ்கடல் போன்ற இடங்களைத் தாண்டி விண்வெளியில் ஒற்றையாளாக மாட்டிக்கொண்ட தருணங்கள் கூட திரையில் உருவம் பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் ஒன்றாக இடம்பெறுகிறது சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படமான ‘மஞ்சும்மள் பாய்ஸ்’.
சரி, இந்த படத்தின் கதை எந்தப் பின்னணியில் அமைந்துள்ளது? அது எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை நமக்குத் தருகிறது?
கொடைக்கானலைச் சுற்றும் கதை!
எர்ணாகுளம் அருகேயுள்ள மஞ்சும்மள் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கூட்டமொன்று கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கின்றனர். அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்தவர்கள், ஊர் திரும்பும் நேரத்தில் புதிதாக ஓரிடத்திற்குச் செல்லலாமா என்று யோசிக்கின்றனர். அந்த இடம், குணா குகை.
உள்ளூர் மக்களால் டெவில்’ஸ் கிச்சன் என்றழைக்கப்படும் அக்குகையானது ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலுக்குப் பிறகு பிரபல சுற்றுலாத்தலமாக மாறியது. அங்கு சென்றவர்களுக்கு நேர்ந்த அபாயங்கள் காரணமாக, தொண்ணூறுகளின் இறுதியில் வனத்துறை அந்த இடத்தை வேலியிட்டு மூடியது. ஆனாலும், தடுப்புகளை மீறிச் சிலர் அங்கு சென்று வந்ததுண்டு.
மஞ்சும்மளைச் சேர்ந்த இளைஞர்களும் அப்படி வேலி தாண்டிக் குதிக்கின்றனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று அவர்கள் அந்த குகைக்குள் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில், திடீரென்று ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது. சுபாஷ் எனும் நபர் அங்கிருக்கும் குழி ஒன்றில் விழுகிறார்.
சில நிமிடங்களாகியும் குழிக்குள் எந்தச் சலனமும் இல்லை என்றபிறகே, விபரீதம் நடந்திருப்பதை அவருடன் வந்தவர்கள் உணர்கின்றனர். கூக்குரலிட்டு அழைத்தும் சுபாஷிடம் இருந்து எந்தப் பதிலும் வருவதில்லை. மாறாக, அந்த குழிக்குள் இருந்து ஆயிரக்கணக்கான வவ்வால்கள் பீறிக்கொண்டு வெளியேறுகின்றன. அந்தக் கணத்தில் சுபாஷின் நண்பர்கள் பீதியில் உறைகின்றனர்.
சில மணி நேரத்திற்குப் பிறகு உள்ளூர்காரர்கள், போலீசார், வனத்துறையினர் என்று ஒவ்வொருவராகச் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். ’சுமார் 900 அடி ஆழத்தில் உள்ள அந்த குழிக்குள் விழுந்த எவரும் உயிர் பிழைத்ததில்லை, எலும்பு கூடக் கிடைத்ததில்லை’ என்பதே உள்ளூர் மக்களின் கருத்தாக இருக்கிறது.
’இங்கேயே நின்று கொண்டிருப்பதால் எந்த பலனும் இல்லை’ என்று சுபாஷின் நண்பர்களை விரட்டுகின்றனர் போலீசார். ஆனால், ‘நண்பன் சுபாஷை எப்படியாவது மீட்டாக வேண்டும்’ என்பதில் அந்த இளைஞர்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்த நிலையில், சுபாஷின் அலறல் அவர்களுக்குக் கேட்கிறது.
அதன்பிறகு, அவரை மீட்கும் ஏற்பாடுகள் அரசு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் செல்கின்றனர். ஆனால், குழிக்குள் சிக்கியவரை எவ்வாறு மீட்பது என்று எவருக்கும் தெளிவு இல்லை. போலவே, அதனுள் இறங்கவும் எவரும் தயாராக இல்லை.
அதன்பிறகு என்னவானது? சுபாஷ் உயிருடன் மீட்கப்பட்டாரா என்பதைச் சொல்கிறது இந்த படத்தின் மீதி.
இது 2006ஆம் ஆண்டு கொடைக்கானலில் நிகழ்ந்த உண்மைச் சம்பவமொன்றைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இறுதியாக வரும் டைட்டில் கிரெடிட்டின்போது அது குறித்த தகவல்கள் காட்டப்படுகின்றன. அதுவே, இப்படத்தின் யுஎஸ்பியாகவும் உள்ளது.
’லைவ்’ த்ரில் அனுபவம்!
மஞ்சும்மள் பகுதியில் இருக்கும் இளையோர் கூட்டமொன்று பொழுதுபோக்குக்காக ஒரு கிளப்பை நடத்தி வருவதும், நாளடைவில் அது இரண்டாக உடைவதும் படத்தின் தொடக்கத்தில் காட்டப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே, அதில் ஒரு கிளப்பை சேர்ந்தவர்கள் கொடைக்கானலுக்குச் சுற்றுலா வருவதாகச் சொல்லப்படுகிறது. பிறகு, குணா குகையைச் சுற்றிச் சுற்றி வருகிறது திரைக்கதை.
அந்த வகையில், கமலுக்கும் குணா படத்திற்குமான அர்ப்பணமாக அமைந்திருக்கிறது இந்த ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. அப்படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் இக்கதையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதற்கேற்ப, அப்பாடல் காட்சியும் இசையும் திரைக்கதையின் வெவ்வேறு இடங்களில் வந்து போகின்றன.
இடைவேளைக்குப் பிறகு முக்கியமானதொரு கட்டத்தில் அந்தப் பாடல் ஒலிக்கும் விதம் ‘கூஸ்ம்பம்ஸ்’ மொமண்ட் ஆக அமைந்துள்ளது. ஒரிஜினல் பாடலை அளவுக்கு மீறி நேசிப்பவர்களால் மட்டுமே அப்படியொரு காட்சியாக்கத்தைச் சிந்திக்க முடியும்.
மிக முக்கியமாக, கொடைக்கானலின் அழகை விளக்கும் விதமாக ஒரு ‘மாண்டேஜ்’ இப்படத்தில் உள்ளது. அதற்காகவே, இயக்குனர் சிதம்பரத்தைத் தனியாகப் பாராட்டலாம்.
இப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் நமக்கு வெங்கட்பிரபுவின் ‘சென்னை 600028’ படத்தை உடனடியாக நினைவூட்டுகிறது. காரணம், அதேபோன்று இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரையை நிறைப்பதும், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரே பிரேமில் வெவ்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதாகக் காட்டப்படுவதும் தான். அந்த உத்தியே, பார்வையாளர்களான நாம் அந்த இடத்திற்கு நேரிடையாகச் சென்றது போன்ற ‘லைவ்’ உணர்வை உண்டாக்குகின்றன.
கதையின் முதல் திருப்புமுனையாக, குகைக்குள் இருக்கும் குழிக்குள் சுபாஷ் விழுவது இடம்பெற்றுள்ளது. ட்ரெய்லர் பார்த்ததன் காரணமாக, திரையில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழப் போகிறது என்று மனம் எதிர்பார்த்தாலும், அதையும் மீறி அந்தக் காட்சி நம்மை ‘த்ரில்’லின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.
முன்பாதியில் மது அருந்தும் காட்சிகள் அதிகம் உள்ளன. அதைத் தாண்டி, இத்திரைக்கதையில் வேறெதுவும் நம் மனதில் குறையாகத் தென்படவில்லை.
சுமார் ஆயிரம் அடி ஆழமுள்ள குகைக்குள் விழுந்தவர் எப்படியிருப்பார் என்பதைக் காட்டிய வகையில் ஆடை வடிவமைப்பாளர் மஷார் ஹம்சா, ஒப்பனைக் கலைஞர் ரோனக்ஸ் சேவியர் நம் மனம் கவர்கின்றனர்.
அந்த குகைக்குள் மாட்டிக்கொண்ட நிகழ்வில் நாமே பங்கேற்பது போன்ற உணர்வை ஊட்டுகிறது விக்ரம் தாஹியாவின் ஆக்ஷன் கொரியோகிராபி. அதேபோல ஷிஜின் – அபிசேக்கின் ஒலி வடிவமைப்பும் இதில் முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துள்ளது.
நொடிக்கு நொடி பதைபதைப்பையும் பயத்தையும் விதைக்கிறது இந்த ‘சர்வைவல் த்ரில்லர்’. அதற்கான ஆணிவேராக சிஜு காலித்தின் ஒளிப்பதிவு, அஜயன் சலிசேரியின் தயாரிப்பு வடிவமைப்பு, சுஷின் ஷ்யாமின் இசை ஆகியன அமைந்துள்ளன. அவர்களது உழைப்பு உருவாக்கிய பிரமிப்பைத் திரையில் சரியாக வெளிப்படுத்திய வகையில் நம் பாராட்டுகளைப் பெறுகிறார் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்.
இந்த படத்தில் சுபாஷ் ஆக ஸ்ரீநாத் பாசியும், அவரது நண்பர்கள் குட்டனாக சௌஃபின் ஷாகிர், சுதி ஆக தீபக் பரம்போல் ஆகியோர் வருகின்றனர். இவர்கள் தவிர்த்து ஷெபின் பென்சன், அபிராம் ராதாகிருஷ்ணன், காலித் ரஹ்மான் என்று 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகப் பெருங்கூட்டமொன்று இதில் நடித்துள்ளது. அவர்களில் சகோதரர்களாகக் காட்டப்படும் பாலு வர்கீஸ், ஜீன் பால் லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன.
மலையாள நடிகர் சலீம்குமாரின் மகன் சந்து படம் முழுக்க அழுது கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டாலும், இறுதிக்காட்சியில் முக்கியமான திருப்பமொன்று அவரால் நிகழ்வதாகச் சொல்லப்பட்டிருக்கும். அந்த இடத்தில் தியேட்டரில் ‘விசில்’ சத்தம் காதைப் பிளக்கிறது.
கொடைக்கானல் பகுதியைச் சார்ந்தவர்களாக ஜார்ஜ் மரியான், ராமச்சந்திரன் துரைராஜ் உட்பட சுமார் ஒரு டஜன் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அனைவரது நடிப்பும் வெகு இயல்பாக, 360 டிகிரி கேமிராவில் படம்பிடிக்கப்பட்டது போன்ற உணர்வை வெளிப்படுத்துவதுதான் இப்படத்தின் பெருஞ்சிறப்பு. அந்த வகையில், காஸ்ட்டிங் இயக்குனராகச் செயல்பட்டதுடன் ஒரு கதாபாத்திரமாகவும் நடித்துள்ள கணபதியைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.
வழக்கத்தை மீறி..!
இதற்கு மேல் சொல்லப்படும் தகவல்கள் ‘ஸ்பாய்லர்’ வகையைச் சாரும். ஆதலால், அதனை விரும்பாதவர்கள் தவிர்த்துவிடலாம்.
வழக்கமாக, ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயமொன்று நடந்தவுடனே திரைக்கதை முடிவதாகப் பெரும்பாலான படங்கள் அமைந்திருக்கும். இதில், அந்த சம்பவம் நிகழ்ந்தபிறகும் கூட திரைக்கதை தொடர்ந்து பயணிக்கிறது. சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்கள், அவற்றின் மனநிலை, அதனைப் பிற பாத்திரங்கள் எதிர்கொள்ளும் விதம் ஆகியன அக்காட்சிகளின் அடிநாதமாக அமைக்கப்பட்டுள்ளது.
’செத்துப் பொழச்சு ரெண்டாவது முறையா பிறந்தவங்க கடவுளுக்குச் சமம், உன்னைத் தொட்டுக் கும்பிட்டுக்கறேன்’ என்றொரு வசனம் இப்படத்தில் உண்டு. அந்தக் காட்சியில், ஒரு பகுதி மக்களின் நம்பிக்கைக்கு இன்னொரு சாரார் மரியாதை தருவதாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் சிதம்பரம். அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கேரளா எனும் இரு வேறு கலாசாரப் பின்னணி கொண்ட களங்களை, கதாபாத்திரங்களை முடிந்தவரை கண்ணியமாகச் சித்தரித்திருக்கிறார். ஓடிடியில் வெளியாகும்போது, நிச்சயம் அந்த விஷயம் பெரிதாகச் சிலாகிக்கப்படும்.
உலகின் அழிவைக் காட்டும் திரைப்படைப்புகளைப் போல, உயிர் பிழைக்கும் தருணங்களைச் சொல்பவையும் ரசிகர்களை எளிதாக வசீகரிக்கும். அப்படியொரு படத்தைத் தந்த ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ இயக்குனர் சிதம்பரத்துக்கும் அவரது குழுவுக்கும் பாராட்டுகள்!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்!
இந்தியாவில் தயாராகும் கூகுளின் பிக்சல் போன்கள்: விலை குறையுமா?