”மேல ஏறி வாரோம்”: வசூலில் வரலாற்று சாதனை படைத்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ 

சினிமா

மலையாளத்தில் கடந்த 2021- ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த ஜன்.இ.மேன் திரைப்படத்தை இயக்கிய சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி 22 அன்று வெளியான படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’.

2006-ம் ஆண்டு கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணத்திற்காக வந்த நண்பர்கள் குழுவில் ஒருவர் அங்குள்ள குணா குகையில் சிக்கிக்கொண்டபோது, அவரை மீட்க அவரின் நண்பர்கள் நடத்திய போராட்டத்தின் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படமே ‘மஞ்சுமெல் பாய்ஸ்’.

இப்படத்தில் சவ்பின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ், கணபதி எஸ் பொதுவால், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், பிரபல மலையாள நடிகர் லாலின் மகன் ஜீன் பால் லால் என மலையாள சினிமாவின் வளர்ந்துவரும் இளம் நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்.

1991-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘குணா’ திரைப்படத்துடன் பல வகையில் தொடர்பு கொண்டிருந்த இப்படத்திற்கு, கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தநிலையில், தற்போது இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை கடந்து அசத்தியுள்ளது. மேலும், மிக விரைவில் ரூ.100 கோடி வசூலை எட்டிய மலையாள திரைப்படம் என்ற, புதிய சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.

முன்னதாக, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படம், தமிழ்நாட்டில் ரூ.10 கோடி வசூலை கடந்த முதல் மலையாள படம் என்ற சாதனையையும் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம், “உலகம் முழுவதும் உள்ள எங்களின் அனைத்து ரசிகர்களுக்கும் எனது மிகப்பெரிய நன்றிகள்”, என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் பெருநகரங்களில் மட்டுமின்றி வளர்ந்து வரும் நகரங்களிலும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிவருவது குறிப்பிடத்தக்கது.

-மகிழ்  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“காலியானது” : பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்?

‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடலுக்கு கிடைத்த வருமானம் இதுதான்: சந்தோஷ் நாராயணன்

+1
1
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *