manju warrier support malaikottai vaaliban
ஜல்லிக்கட்டு என்ற மலையாள படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. தற்போது லிஜோ இயக்கத்தில் நடிகர் மோகன் லால் நடிப்பில் ஜனவரி 25 ஆம் தேதி வெளியான படம் மலைக்கோட்டை வாலிபன்.
2024 ஆம் ஆண்டு இந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியான பிறகு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே இந்த படம் பெற்று வந்தது. மோகன்லாலின் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றி விட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவ ஆரம்பித்தது.
ரசிகர்களின் நெகட்டிவ் விமர்சனங்கள் ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் இந்த படத்திற்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு பிரபல ஹிந்தி இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப், “எதிர்மறை விமர்சனங்களால் மலைக்கோட்டை வாலிபனை வீழ்த்த முடியாது” என்று தனது கருத்தை கூறியிருந்தார்.
இவரை தொடர்ந்து தற்போது பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் மலைக்கோட்டை வாலிபன் படத்திற்கு ஆதரவாக தனது கருத்தை முன் வைத்துள்ளர்.
அவர் பதிவில், “மலைக்கோட்டை வாலிபன் படத்தை பார்த்தபோது, நான் சிறு வயதில் எப்போதும் கேட்டு மகிழ்ந்த கதைகளின் உலகத்திற்கே என்னை அழைத்துச் சென்று விட்டது.
மல்யுத்த வீரர்களும், அடிமை அதிகாரிகளும், ரத்த தாகம் கொண்ட அரசர்களும், கொடூரமான படை வீரர்களும் மற்றும் நல்ல மனிதர்களும் என ஒரு பேண்டஸி படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கின்றன.
படம் முடிந்து வெளிவந்த பின்னும் கூட இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசை ஏற்படுத்திய தாக்கம் நீங்கவில்லை.
லாலேட்டன் பற்றி சொல்லவே தேவையில்லை. மலைக்கோட்டை வாலிபனாகவே அவர் கூடு விட்டு கூடு பாய்ந்துள்ளார். இது முழுக்க முழுக்க ஒரு லிஜோ ஜோஸ் பெல்லிஸேரியின் படம் தான்.
மலையாள சினிமாவிற்கு அவர் இன்னும் சிலவற்றை செய்ய வேண்டி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
மலைக்கோட்டை வாலிபன் படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு சினிமா ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை கொண்டாடுவார்கள் என்றும் ஓர் கருத்து கூறப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய அனுமதி!
அண்ணாமலை யாத்திரை : பாஜக கொடிக் கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்!
manju warrier support malaikottai vaaliban