பொன்னியின் செல்வனில் மணிரத்னம் செய்யும் மாற்றம்!

Published On:

| By Kavi

லைக்கா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், லால், உட்பட பலர் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்.

480 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது.

உலகெங்கும் பன்மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப்படத்துக்கு ஆந்திரா, வட இந்தியா தவிர உலகெங்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் முன்னணி தமிழ் சினிமா ஹீரோ படத்திற்கு கிடைக்கும் வசூல் கிடைத்திருக்கிறது.

முதல் பாகத்தின் வணிக வெற்றி காரணமாக, இரண்டாம் பாகத்தில் சில மாற்றங்களைச் செய்ய தற்போது முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரண்டு பாகங்களுக்குமான படத்தொகுப்பை முடித்த பின்னரே முதல் பாகம் வெளியானது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டாம் பாகத்தை வெளியிடுவது தான் மணிரத்னத்தின் திட்டமாக இருந்தது. படத்தின் வெளியீட்டுக்கு முன்பு இந்தியா முழுவதும் பத்திரிகையாளர்களை படக்குழுவும், இயக்குநரும் சந்தித்தனர்.

படம் தொடர்பான சர்ச்சைக்கு இயக்குநரும், வசனகர்த்தாவும் பொதுவெளியில் இது சம்பந்தமாக கருத்தை பதிவு செய்யவோ, பத்திரிகையாளர்களை சந்திக்கவோ இல்லை. அதற்குப் பதிலாக படத்தில் நடித்தவர்கள் மூலமாக தங்கள் பதில்களை பொது சமூகத்திற்கு தெரியப்படுத்த தொடங்கியுள்ளனர்.

அதன் வெளிப்பாடுதான், சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு மணிரத்னம் தான் பதில் கூற வேண்டும் அவரிடம் கேளுங்கள் என்ற நடிகர் சரத்குமார் நீண்ட அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருக்கிறார் என்கிறது பொன்னியின் செல்வன் படக்குழு வட்டாரம்.

படத்திற்கான ஆதரவு, எதிர்ப்பு, விமர்சனங்களை கொண்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் சில மாற்றங்களை செய்ய மணிரத்னம் முடிவு எடுத்திருப்பதாக கூறுகின்றனர்.

படத்தின் நீளத்தை குறைக்கும் வகையில் ஏற்கனவே வேண்டாம் என்று முடிவு செய்த வந்தியத்தேவன் சம்பந்தபட்ட சில சாகச காட்சிகளை படமாக்கி இரண்டாம் பாகத்தில் இணைக்கவுள்ளாராம்.

வந்தியதேவனின் பயணத்தில் வனவிலங்குகளை எதிர்கொண்டு மீண்டு வரும் காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதற்காக புதிதாக இருவார காலம் வந்தியத்தேவனாக நடித்திருக்கும் கார்த்தி நடிக்க வேண்டியிருக்கும் என அவரிடம் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டாம் பாகம் இதுதான் என முடிவு செய்யப்பட்ட படத்தொகுப்பை மீண்டும் மீண்டும் பார்த்துவரும் மணிரத்னம் அதிலும் சில மாற்றங்களை செய்ய அதுதொடர்பான பணிகளை செய்ய தனது படக்குழுவினருக்கு கூறியிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் வெற்றியை கொண்டாடி புதிய படங்களில் திரைக்கலைஞர்கள் நடித்து வரும் சூழ்நிலையில் நடிகர் கார்த்தி மட்டும் மீண்டும் நீண்ட தலைமுடியை வளர்க்க வேண்டி உள்ளது.

இராமானுஜம்

சிறந்த நடிகருக்கான விருது பெறும் குரு சோமசுந்தரம்

‘மிகவும் யதார்த்தமாக பேசுகிறீர்கள்’ : மத்திய அமைச்சரிடம் மயிலாப்பூர் மக்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share