மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினிகாந்த் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு மறுப்பு தெரிவித்தது உண்மை தான் என்று இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார்.
கல்கி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் கதையை இரண்டு பாகங்களாக படமாக்கியுள்ளார்.
இந்த படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாதனை படைத்த பொன்னியின் செல்வன்
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் 5,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
படம் திரையரங்குகளில் வெளியாவதை ரசிகர்கள் ஒரு விழா போல் கொண்டாடினர்.
படம் வெளியான முதல் நாள் அன்று ரூ. 50 கோடி வசூலிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரூ. 80 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனைப் பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது பொன்னியின் செல்வன்.
இதற்கு, படம் வெளியாவதற்கு முன்பே படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று படக்குழுவினர் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டதும் ஒரு முக்கிய காரணமாகும்.
இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.
ரஜினியின் விருப்பம்
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் , “எப்படியாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதனால் நான் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கலாமா என்று மணி சாரிடம் கேட்டேன்.
ஆனால், என் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவர் வாய்ப்பை மறுத்துவிட்டார். அது மகிழ்ச்சியாக இருந்தது. வேறு யாராக இருந்தாலும் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள்.
ஆனால் மணி சார் அதனைச் செய்தார். இது தான் அவரை தனித்துவமாக்குகிறது” என்று பேசினார்.
ரஜினிகாந்த் நிராகரிக்கப்பட்டது உண்மை
இந்நிலையில் ‘பிங்க்வில்லா’ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது மணிரத்னத்திடம், ரஜினிகாந்த் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பியது உண்மையா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மணிரத்னம், “அது உண்மை தான். அவர் அதை அன்புடன் கேட்டுக் கொண்டார்.
ரஜினி ஒரு பெரிய நட்சத்திரம். அதோடு பொன்னியின் செல்வன் படத்தில் நிறையக் கதாபாத்திரங்கள் உள்ளன.
எல்லாவற்றுக்கும் மத்தியில் மிக பெரிய நட்சத்திரத்தை கொண்டு வருவது சரியாக இருக்காது. இதனை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் ” என்று கூறினார்.
மோனிஷா
மணிரத்னத்துடன் இணையும் ரஜினிகாந்த்
ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: ரவுடி உயிரிழப்பு!