காதலர் தினத்தை முன்னிட்டு காதல் படங்களை வெளியிடும் வழக்கம் மிகச்சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அந்த படங்கள் காதலைக் கொண்டாடும் விதமாக இருக்குமென்பது நாம் அறிந்ததே. அவற்றுள் மிகச்சில படங்கள் மட்டும் காதல் என்ற உணர்வு வாழ்வை எந்தளவுக்கு அர்த்தப்படுத்தும் என்று சொல்வதாக அமையும்.
அப்படியொரு படமாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது ‘லவ்வர்’ ட்ரெய்லர். புதுமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். மணிகண்டன், ஸ்ரீகௌரிப்ரியா, கண்ணா ரவி, ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் உண்மையிலேயே காதல் குறித்து ஆழமாகப் பேசுகிறதா? என்பதை இங்கே பார்க்கலாம்.
எது காதல்?
இருபத்தைந்துகளில் இருக்கும் இளைஞரான அருண் (மணிகண்டன்), கல்லூரிக் காலத்தில் இருந்தே திவ்யாவை (ஸ்ரீ கௌரிப்ரியா) உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார். அவரும் அப்படியே. ஆறாண்டுகளாகத் தொடரும் அவர்களது காதல் பற்றி அருண் தாய்க்குத் (கீதா கைலாசம்) தெரியும். ஆனால், திவ்யாவின் குடும்பத்தினருக்குத் தெரியாது.
வேலைக்குச் செல்வதில் ஆர்வமில்லாமல் இருக்கும் அருண், சுயதொழில் செய்கிறேன் என்று தாயின் சேமிப்பில் இருந்த 15 லட்சம் ரூபாயை வீணாக்கி விடுகிறார். அதன்பிறகு, மீண்டும் அந்த எண்ணத்தைச் செயல்படுத்தும் நோக்கில் நாட்களை நகர்த்தி வருகிறார்.
அது, அவருக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. அதனால் ஏற்படும் வலிகளும், வேதனைகளும் நேரடியாகத் திவ்யாவைத்தான் பாதிக்கின்றன. மது, சிகரெட், போதைப்பொருள் பழக்கம் என்றிருந்தாலும், தன் மீது அருண் கொண்டிருக்கும் காதலை மிகவும் விரும்புகிறார் திவ்யா.
அதனால், காதலர் மனம் புண்படக்கூடாது என்பதற்காகச் சில பொய்களைச் சொல்கிறார். அதையும் மீறி, அருண் செய்யும் கலாட்டாக்களால் அவரது நிம்மதி பறிபோகிறது. ஒருகட்டத்தில் அருணை விட்டுப் பிரியலாமா? என்ற யோசனை திவ்யாவைத் தொற்றுகிறது.
இந்தச் சூழலில், வேலை பறிபோனதைச் சொல்லாமல் அருண் தன்னை ஏமாற்றுவதாக உணர்கிறார் திவ்யா. போலவே, ஊருக்குப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு அலுவலக சகாக்களுடன் சுற்றுலா சென்றதைத் திவ்யா மறைத்துவிட்டதாகப் பொருமுகிறார் அருண்.
அருண் மனதில் விஸ்வரூபமெடுக்கும் சந்தேக புத்தியும், காதல் குறித்து திவ்யாவின் மனதில் பெருகும் வெறுப்பும் ஒன்றோடொன்று மோதுகின்றன. அப்போது, ‘நாம் பிரிந்துவிடலாம்’ என்கிறார் திவ்யா. ‘அப்படி என்னால் விட்டுவிட முடியாது’ என்கிறார் அருண்.
இந்த முரண்களுக்கு மத்தியில், திவ்யாவின் சகாக்களோடு அருண் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள நேரிடுகிறது. அந்த பயணத்தில் திவ்யா – அருண் காதல் துளிர்த்தா? அல்லது முற்றிலுமாகப் பொசுங்கியதா? என்பதற்குப் பதில் சொல்கிறது இந்த ‘லவ்வர்’.
எது காதல் என்று கரும்பலகையில் கேள்விகளும், பதில்களுமாக எழுதி விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக சில காட்சிகளைப் புகுத்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ். அதுவே ’லவ்வர்’ படத்தின் யுஎஸ்பி.
கலக்கலான ‘காஸ்ட்டிங்’
‘குட்நைட்’ வெற்றிக்குப் பிறகு மணிகண்டன் ‘சோலோ’ ஹீரோவாக பெரிதும் கவனிக்கப்படுகிறார். அதற்கு ஏற்றாற்போல அமைந்திருக்கிறது ‘லவ்வர்’ ஸ்கிரிப்ட். ஆனால், ‘நாங்க யூத்துங்க’ என்ற பெயரில் வசவு வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவதைத்தான் தாங்க முடியவில்லை. மற்றபடி, மணிகண்டனின் நடிப்பு சூப்பராக அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், முகத்திலும் உடலிலும் ‘வெயிட்’ போடுவதை அவர் கவனிப்பது நல்லது.
தினசரி வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் ஒரு சராசரி பெருநகரத்துப் பெண்ணாகத் தோன்றியிருக்கிறார் ஸ்ரீ கௌரிப்ரியா. அவருக்கு இது முதல் படமா? என்று தெரியவில்லை. இதுதான் அறிமுகம் என்றால், நிச்சயம் அவருக்கு திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். குளோஸ் அப்பில் ஸ்ரீ கௌரிப்ரியா அழுவதைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் என்பதே அவரது நடிப்புக்கான அங்கீகாரம்.
‘கைதி’ படத்தில் ‘அண்டர்கவர்’ ஆபீசராக வந்த கண்ணா ரவி, இடையில் சில படங்களில் நடித்தார். அவை கவனிப்பை பெறவில்லை. இந்த நிலையில், ‘மின்னலே’ அப்பாஸ் போல இதில் வந்து போயிருக்கிறார். அவரை வில்லத்தனமாகக் காட்டாதது ஓகே. ஆனால், ‘இவ்வளவு நல்லவரா’ என்று தியேட்டரில் ரசிகர்கள் கத்தும் அளவுக்கு அமைந்திருக்கிறது அவரது பாத்திரம்.
‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ் குமாருக்கு, இதில் ‘டாடா’வுக்குப் பிறகு ஒரு அருமையான பாத்திரம். நாயகியின் தோழி ரம்யாவாக வரும் நிகிலா சங்கர் ’ யார் இது’ என்று நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறார். இன்னொரு தோழி ஐஸ்வர்யாவாக வரும் ஹரிணி சம்பந்தப்பட்ட காட்சிகளை இனிமேல் அடிக்கடி ‘மீம்ஸ்’களில் காண நேரிடலாம். இவர்கள் ஆறு பேரும் பின்பாதியை ஆக்கிரமிக்கின்றனர்.
மணிகண்டன் தாயாகக் கீதா கைலாசமும், தந்தையாக சரவணனும் இரண்டொரு காட்சிகளில் தோன்றி அருமையாக நடித்துள்ளனர். அதற்கு மேல், திரைக்கதையில் அவர்களுக்கு இடமில்லை.
பிண்டு பாண்டு உள்ளிட்ட நான்கு பேர் நாயகனின் ஏரியா நண்பர்களாக நடித்துள்ளனர். அவர்களில் மணிகண்டனோடு திரிபவராக வருபவர் அடிக்கும் கமெண்ட்களுக்கு தியேட்டரே சிரிக்கிறது. அந்த வகையில், ‘குட்நைட்’ போலவே இதிலும் ‘காஸ்ட்டிங்’ கலக்கலாக அமைந்திருக்கிறது.
இன்னும் கல்லூரிக் கால நட்பு என்று சுமார் இரண்டு டஜன் பேர் திரையில் வந்து போயிருக்கின்றனர். மற்றபடி, மிகச்சில பாத்திரங்களை மட்டுமே மையப்படுத்திய கதை இது.
தொழில்நுட்பம்
திரைக்கதையின் பின்பாதியில் கோகர்ணாவின் அழகை நிறைத்திருக்கிறது ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. வெளிப்புறக் காட்சிகள் மட்டுமல்லாமல் நாயகன் நாயகியின் வசிப்பிடங்கள், ஹோட்டல் அறை, அலுவலக உட்புறம் போன்றவற்றையும் அழகுறக் காட்டியிருக்கிறது. அதற்குப் பெரிதும் உதவியிருக்கிறது ராஜ்கமலின் தயாரிப்பு வடிவமைப்பு.
அளவெடுத்துத் தைத்த சட்டை போல மிகக்கூர்மையாகக் காட்சிகளை வெட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன்.ஷான் ரோல்டன் இசையில் இதில் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவை காட்சிகளோடு பொருந்தியிருந்தாலும், முதன்முறை கேட்டவுடன் மனதோடு ஒட்டிக்கொள்வதாக இல்லை. திரும்பத் திரும்பக் கேட்கும்போது அவற்றைக் கொண்டாட நேரிடலாம்.
மிகக்கனமான உணர்வைக் கடத்தும் காட்சிகளில் மிகச்சில வாத்தியங்களைக் கொண்டு ஷான் ரோல்டன் அமைத்திருக்கும் பின்னணி இசை சட்டென்று மனதைத் தொடுகிறது. ஒலிப்பதிவு, டிஐ, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை என்று இதில் பல நுட்பங்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
‘லவ்வர்’ படத்தின் கதை இதுதான் என்று நம்மால் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், பிரதான பாத்திரங்கள் இந்தக் கதையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நிறைய. அதனால், அந்தக் காட்சிகளையும் சேர்த்து மொத்தத் திரைக்கதையையும் விவரிக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், மிக ஆழமானதொரு காட்சியனுபவத்தை நமக்குத் தருகிறார் பிரபுராம் வியாஸ்.
காதல் குறித்த பார்வை
‘ஒருவர் தனது காதலிக்கு, மனைவிக்கு அல்லது தன் சுற்றத்தில் இருக்கிற இதர பெண் உறவுகளுக்குச் சுதந்திரம் இவ்வளவு தந்தால் போதும்’ என்று நினைப்பது சரியா? தவறா? இந்தக் கேள்விக்குப் பதிலாக, ‘அவரவர் சுதந்திரம் அவரவர் சம்பந்தப்பட்டது’ என்பதே பிரபுராம் வியாஸின் பதிலாக உள்ளது.
திரையில் அதனைச் சொன்னபிறகும் படம் தொடர்கிறது. காரணம், நாயகன் அதன் அர்த்தத்தை உள்வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை என்பதே. அதனால், திரும்பத் திரும்ப ஒரே விஷயம் ‘ரிப்பீட்’ ஆவதாகத் தெரியலாம்.
’விட்டுக்கொடுப்பதோ, சகிப்பதோ மட்டுமே காதல் இல்லை; புரிதல் இல்லை என்று தெரிய வரும்போது என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியையும் எழுப்புகிறது இப்படம். அதற்கு நாயகன், நாயகி மட்டுமல்லாமல் நாயகன் பெற்றோரையும் உதாரணமாகக் காட்டுகிறது. ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கமாக இருக்குமாறு இயக்குனர் அதற்குப் பதிலளித்திருப்பது அருமை.
திரைக்கதையில் நாயகி குடும்பத்தை இயக்குனர் காட்டவே இல்லை. நாயகன் எவ்வாறு பதினைந்து லட்ச ரூபாயை இழந்தார் என்பதையோ, நாயகனின் தந்தைக்கும் தாய்க்குமான உறவு எப்போது பிசகியது என்பதையோ கூட அவர் விலாவாரியாக விளக்கவில்லை.
இந்தக் கதையில் நாயகன், நாயகி இடையேயான விலகலை விலாவாரியாகப் புட்டு புட்டு வைத்தாலே போதும் என்று நினைத்திருக்கிறார். அதனால், திரையில் முக்கால்வாசி காட்சிகள் சோகத்தைப் பொழிகின்றன. அது ரசிகர்களைச் சோர்வுக்கு உள்ளாக்கலாம்.
உறவுச் சிக்கல்களின் அடிநாதமாக இருக்கும் ஆதிக்க மனப்பான்மையை மிகச்சில பாத்திரங்கள், எளிமையான வாழ்க்கையின் ஊடாகச் சொல்கிறது ‘லவ்வர்’, நல்லதொரு பொழுதுபோக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு இது திருப்தி தராது. அதேநேரத்தில், ஆங்காங்கே சிரித்து ரசிக்கச் சின்னச்சின்ன தருணங்கள் திரைக்கதையில் உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.
காதலில் வெற்றி, தோல்வி உண்டா என்பதற்குப் பதிலாக, காதலர்களைக் காதல் வாழ வைக்குமா? என்பதற்குப் பதிலளிக்கிறது இப்படம். அந்த வகையில், இந்த ஆண்டின் முக்கியமான படங்கள் பட்டியலில் இடம்பிடிக்கத்தக்கது இந்த ‘லவ்வர்’!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : தொழிலாளர்களின் நிலை?
இந்தியாவில் எத்தனை கோடி வாக்காளர்கள்? – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!