விமர்சனம்: டர்போ!

சினிமா

மம்முட்டி தந்திருக்கும் ‘டைம்பாஸ் மூவி’!

மம்முட்டி கம்பெனி தயாரிப்பில் இதுவரை ‘ரோர்சா’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ‘கன்னூர் ஸ்குவாட்’, ‘காதல் தி கோர்’ என்று நான்கு படங்கள் வெளியாகியிருக்கின்றன. இவை வித்தியாசமான கதைகள், பாத்திரங்கள், பின்னணியைக் கொண்டிருந்தன. அதேநேரத்தில் கமர்ஷியலாகவும் வெற்றிகளை ஈட்டின. அதனால், இத்தயாரிப்பில் முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படம் வெளியானால் அது எந்தளவுக்கு வித்தியாசமானதாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருந்து வருகிறது. அதற்கேற்றாற்போல, தற்போது ‘டர்போ’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

மிதுன் மேனுவல் தாமஸ் எழுத்தாக்கத்தில், விசாக் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் மம்முட்டியோடு அஞ்சனா ஜெயபிரகாஷ், பிந்து பணிக்கர், சபரீஷ் வர்மா, கபீர் துஹான் சிங், திலேஷ் போத்தன், அருள்தாஸ், நமோ நாராயணா உட்படப் பலர் நடித்துள்ளனர். கன்னடத்தில் ஒரு நாயகனாகவும் இயக்குனராகவும் கலக்கலான படங்களைத் தந்துவரும் ராஜ் பி ஷெட்டி இதில் வில்லனாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் சுனிலின் மலையாள அறிமுகமாகவும் இது அமைந்துள்ளது.

பான் இந்தியா படங்களில் எப்படி வெவ்வேறு மொழிகளைச் சார்ந்த கலைஞர்களைப் பயன்படுத்துவார்களோ, அதுவே ‘டர்போ’விலும் நிகழ்ந்துள்ளது. சரி, அது எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது?

சென்னை நோக்கி..!

இடுக்கி பகுதியில் தனது தாய் ரோசாகுட்டியுடன் (பிந்து பணிக்கர்) வாழ்ந்து வருகிறார் ஜோஸ் (மம்முட்டி). ஜீப் ஓட்டுநராக இருந்துவரும் அவரை அக்கம்பக்கத்தினர் ‘டர்போ’ ஜோஸ் என்று விளிக்கின்றனர்.

நிலச்சரிவினால் ஏற்பட்ட அசம்பாவிதத்தினால் சிறுவயதில் தந்தையையும் தங்கையையும் இழந்த துக்கம் அவரை வாட்டுகிறது. அதனால் ஏற்பட்ட மன வேதனை, திருமண வாழ்க்கை குறித்த எண்ணத்தையே அவரிடத்தில் விதைக்கவில்லை.

ஒருநாள் தனது நண்பன் ஜெர்ரி (சபரீஷ் வர்மா) இந்துலேகா எனும் பெண்ணை விரும்புவதை அறிகிறார் ஜோஸ். அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதையும் தெரிந்துகொள்கிறார்.

ஜெர்ரியிடம் கலந்தாலோசிக்காமல் இந்துவை அவரது வீட்டுக்குச் சென்று அழைத்து வருகிறார். அப்போது ஏற்படும் களேபரத்தில், அவ்விழாவுக்கு வந்த சில உறவினர்களையும் தாக்கிவிடுகிறார் ஜோஸ். அவர்கள் ராணுவ வீரர்கள் என்பதால் நிலைமை இன்னும் சிக்கலாகிறது.

அதேநேரத்தில், ஜெர்ரியின் வீட்டில் நடக்கும் சம்பவமோ ஜோஸ், இந்து இருவரையும் ஒருசேரச் சோர்வுறச் செய்கிறது. இதய நோயாளியாக இருந்துவரும் தந்தையின் சொல்லை மீற முடியாத நிலையில் இந்துவை யார் என்றே தெரியாது என்கிறார் ஜெர்ரி.

அதனால், மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாத சூழலில் சென்னை செல்கிறார் இந்து. அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்ததால், ஜோஸும் தனது வீட்டுக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறார். ஆதலால், அவரும் இந்துவுடன் சென்னைக்குப் பயணிக்கிறார்.
சென்னையில் வங்கியொன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார் ஜோஸ். அதேபோல, ஜெர்ரியும் இன்னொரு வங்கியில் மேலாளராக இருக்கிறார்.

தனது நிலைமையை இந்துவிடம் விளக்கப் பலமுறை முயற்சிக்கிறார் ஜெர்ரி. அவை ஏதும் பலனளிக்கவில்லை.

இந்த நிலையில், ஜெர்ரியின் ‘பாஸ் கீ’யை பயன்படுத்தி இறந்துபோன ஒருவரின் வங்கிக்கணக்கில் இருந்து 70 லட்சம் ரூபாய் எடுத்திருக்கும் தகவல் அவருக்குத் தெரிய வருகிறது. இறந்து போனவரின் குடும்பம் புகார் கொடுத்தபிறகு, வங்கிக்கு வரவே இல்லை.

அந்த முறைகேடு குறித்து தகவல் தெரிய முனையும்போது, அந்த வங்கியில் பணியாற்றும் மேலும் பல பணியாளர்களின் ‘பாஸ் கீ’யை கொண்டு பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டு, உடனடியாக ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டறிகிறார் ஜெர்ரி.

பரிமாற்றம் நிகழ்ந்த கணக்குகள் போலியானவை. ஏனென்றால், அதில் சம்பந்தப்பட்ட அனைவருமே ஏழை எளியவர்களாக இருக்கின்றனர். குறிப்பிட்ட வங்கியில் தங்களுக்கு கணக்கு எதுவுமில்லை என்கின்றனர்.

அவர்களது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி சில மர்ம நபர்கள் வங்கிக்கணக்கு தொடங்கியதையும் பணப் பரிமாற்றம் செய்ததையும் தெரிந்து கொள்கிறார் ஜெர்ரி. கிடைத்த தகவல்கள் அனைத்தும், அந்த குற்றத்தின் பின்னணியில் வெற்றிவேல் சண்முகசுந்தரம் (ராஜ் பி ஷெட்டி) எனும் நபர் இருப்பதைக் காட்டிக் கொடுக்கிறது.

மிகப்பெரிய தொழிலதிபராகவும், வெளியுலகுக்குத் தெரியாமல் தமிழக அரசியலைக் கட்டுப்படுத்துபவராகவும்  இருந்து வருகிறார் வெற்றிவேல். அவர் நிகழ்த்திய மோசடி குறித்து காவல் துறையில் புகார் கொடுப்பதற்கு முன்பாக ஜெர்ரி கொல்லப்படுகிறார். ஜோஸ் தங்கியிருக்கும் பிளாட்டில், தூக்கிலிட்டுத் தொங்கிய நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. இறப்பதற்கு முன்பாக
நிகழ்ந்தது தற்கொலை என்றே ஜோஸும் இந்துவும் நினைக்கின்றனர். ஆனால், ஒருநாள் உண்மையை அவர்கள் அறிந்துகொள்கின்றனர்.  கூடவே, வெற்றிவேல் குறித்த தகவல்களும் தெரிய வருகின்றன.

ஜெர்ரி இறப்பதற்கு முன்பாகச் சந்தித்த நபர் இந்து. அந்த காரணத்தால், அவரைக் கொல்லத் துடிக்கின்றனர் வெற்றிவேலின் ஆட்கள்.

அதன்பிறகு என்னவானது? தன்னைக் குறித்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் எவரையும் விட்டுவைக்காத வெற்றிவேல், அவர்களை என்ன செய்தார்? நம்பி வந்தவர்களைக் காக்கும் இயல்பு கொண்ட ஜோஸ், இந்துலேகாவை காப்பாற்றினாரா என்று சொல்கிறது ‘டர்போ’வின் மீதி.

தான் வாழும் பகுதியில் ‘கலாட்டாகாரர்’ ஆக இருந்து வரும் ஜோஸ், முன்பின் அறியாத சென்னைக்குப் பயணிப்பதும், அங்கு தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும் முன்பாதியில் உள்ளது. பின்பாதி முழுக்க, ஜெர்ரியின் மரணம் குறித்த உண்மைகளைத் தெரிந்துகொள்ள அவர் தனது ஹீரோயிசத்தை வெளிப்படுத்துவதே நிறைந்துள்ளது.

கலக்கல் மம்முட்டி!

‘ராஜமாணிக்கம்’, ‘போக்கிரி ராஜா’ போன்ற ஒரு சில படங்களில் மம்முட்டியின் ‘ஆக்‌ஷன் அவதாரத்தை’ நம்மால் ரசித்துச் சிலிர்க்க முடியும். அந்த வாய்ப்பை மீண்டுமொரு முறை தருகிறேன் என்று இதில் ‘டர்போ ஜோஸ்’ ஆக அவர் வந்து போயிருக்கிறார்.

சண்டைப்பயிற்சி இயக்குனர் பீனிக்ஸ் பிரபு, மம்முட்டி இலகுவாக நடிக்கும் வகையில் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருப்பது இப்படத்தின் இன்னொரு சிறப்பு. அதேநேரத்தில், ‘பேமிலி ஆடியன்ஸ்’ வர வேண்டுமென்ற நோக்கத்தில் ரத்தத்தைத் திரையில் குறைவாகத் தெளித்திருக்கிறது அவரது டீம்.

ஜெர்ரியாக சபரீஷும், இந்துவாக அஞ்சனாவும் நடித்துள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல் பிந்து, திலேஷ் போத்தன், அருள்தாஸ், நமோ நாராயணா என்று பலர் இதிலுண்டு.

‘ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட அதேபோன்றதொரு பாத்திரத்தை இதிலும் ஏற்றிருக்கிறார் சுனில். அக்காட்சிகள் மலையாள சினிமாவுக்கு நிச்சயம் புதிதாக இருக்கும்.

இதில் வில்லனாக ராஜ் பி ஷெட்டி நடித்துள்ளார். மலையாளத்தில் அவர் வசனங்களைச் சரியாக உச்சரித்தாலும், தமிழ் வசனங்களை ஆங்காங்கே கடித்து துப்பியிருக்கிறார். அதனைச் சரி செய்திருக்கலாம். மற்றபடி, அவரது இருப்பு நம்மை மிரள வைத்திருக்கிறது.
வின்சென்ட் என்ற பாத்திரத்தில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியவரும் கூட, நம் கவனம் ஈர்க்கிறார்.

ஆடு, அஞ்சாம் பதிரா, ஆப்ரகாம் ஓஸ்லர் படங்களின் இயக்குனரான மிதுன் மேனுவல் தாமஸ், கடந்த ஆண்டு ‘கருடன்’, ’பீனிக்ஸ்’ என்று இரண்டு படங்களில் பாராட்டத்தக்க எழுத்தாக்கத்தைத் தந்திருந்தார். அந்த வரிசையில், மம்முட்டியின் ஹீரோயிசத்தை ரசிக்கப் புதியதொரு களத்தில் ‘ஜோஸ்’ திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசையானது, அடுத்தடுத்த காட்சிகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.

விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு, பரபரவென்று நகரும் திரைக்கதைக்கு நியாயம் சேர்ப்பதாக உள்ளது. குறிப்பாக, சண்டைக்காட்சிகளில் மம்முட்டியைப் பாதுகாப்பாகக் கையாள்வதற்குத் தேவையான கோணங்களைப் பயன்படுத்தியிருப்பது அழகு.

சமீர் முகம்மதுவின் படத்தொகுப்பு, ‘அடுத்தது என்ன’ என்று கேட்கும் அளவுக்குச் செறிவாகத் திரையில் கதை விரிய வழி வகுத்துள்ளது.
ஷாஜி நடுவில்லின் தயாரிப்பு வடிவமைப்பு, எம்.ஆர்.ராஜகிருஷ்ணனின் ஒலிக்கலவை, மெல்வி ஜே மற்றும் அபிஜித்தின் ஆடை வடிவமைப்பு போன்றவை கதை சொல்லலைத் தடை செய்யாதவாறு கூடுதல் வண்ணங்களை திரைக்கதையில் சேர்க்கிறது.

விசாக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ’போக்கிரி ராஜா’, ‘புலிமுருகன்’, ‘மான்ஸ்டர்’ போன்ற வெற்றிப்படங்களை ஏற்கனவே தந்திருக்கிறார். அந்த வரிசையில், ‘டர்போ’வையும் எழுத்தாக்கத்தில் இருந்த விறுவிறுப்பு குறையாமல் திரையில் தந்திருக்கிறார்.

ஆனாலும், ஆக்‌ஷன் காட்சிகளும் சேஸிங் காட்சிகளும் கொஞ்சம் பழைய படம் பார்த்த உணர்வை ஊட்டுகின்றன. இன்னும் நேர்த்தியாகக் காட்சியாக்கம் செய்யக் கூடுதலாகச் சில நாட்களைச் செலவிட்டிருக்கலாம். பட்ஜெட் காரணமாக அது நிகழவில்லை என்பது நமக்கு எளிதாகப் புரிகிறது.

சில குறைகள்!

இந்த திரைக்கதையில் திருப்பம் என்பது ஜெர்ரியின் பாத்திரத்தாலேயே நிகழ்கிறது. அப்படியிருக்க, அந்த பாத்திரத்தின் மன உணர்வுகளுக்கோ, அவரது பின்னணிக்கோ இடமளிக்கத் தவறியிருக்கிறார் இயக்குனர் விசாக்.

அது மட்டுமல்லாமல், இறப்பதற்கு முன்பாக அப்பாத்திரம் தனது காதலியைக் காண வருமிடத்திலும் அதற்குப் பிறகான காட்சிகளிலும் இன்னும் கூட ‘டென்ஷன்’ ஏற்றியிருக்கலாம்.

தன்னோடு மோதலைக் கடைப்பிடிப்பவரிடமும் நட்பு கொள்வதே ஜோஸ் பாத்திரத்தின் இயல்பு. அதனைத் திரைக்கதையில் ஆங்காங்கே சிறியளவில் சொல்லியிருக்கலாம். ஏனென்றால், கிளைமேக்ஸில் அது தொடர்பாக ஒரு வசனம் வருகிறது.

ராஜ் பி ஷெட்டியின் பாத்திரம் வருமிடங்கள் ‘கம்பீரமாக’ இருக்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறது ‘டர்போ’ குழு. ஆனால், அவரது தமிழ் உச்சரிப்பையோ, நடை உடை பாவனைகளையோ மெருகேற்றத் தவறியிருப்பது இன்னொரு குறை.

போலவே, சென்னை மக்களின் வாழ்வைக் காட்சிப்படுத்திய வகையில் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர்.

இது போன்ற குறைகள் ஒருபுறமிருக்க, ஏழை எளியவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி மரணமுற்றவர்களின் கணக்கில் இருக்கும் பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடிக்கிறது எனும் தகவலைச் சொல்லும்போது ‘டர்போ’ திரைக்கதை சூடுபிடிக்கிறது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

இப்படியொரு கதையில் ஆங்காங்கே காமெடிக்கும் சென்டிமெண்டுக்கும் இடமளிப்பதென்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், அந்த நுட்பத்தை இலகுவாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் விசாக்.

ரசிகர்கள் உற்சாகமாகத் திரையரங்கை விட்டு வெளியேறும்விதமாக, இறுதியில் விஜய் சேதுபதியின் குரலை ஒலிக்கவிட்டிருக்கிறது ‘டர்போ’. அதுவே, ‘இரண்டாம் பாகம் நிச்சயம்’ என்று அவர்களை அலறவிடுகிறது.

சில காட்சிகளைத் தவிர்த்து, சிலவற்றைச் சுருக்கி, சிலவற்றைப் புகுத்தி, இதே படத்தை இன்னும் நேர்த்தியானதாக மாற்றியிருக்கலாம். அது நிகழாதபோதும், நல்லதொரு பொழுதுபோக்கு அனுபவத்தைத் தருவதில் குறையேதுமில்லை. ஆதலால், இந்த ‘டர்போ’வை ‘டைம்பாஸ் மூவி’ ஆக பார்த்து ரசிக்கலாம்!

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வாழ்க்கையில் ஏற்படும் முரண்பாடுகளை எப்படி கையாள்வது?

டாப் 10 செய்திகள் : 6ஆம் கட்ட தேர்தல் முதல் ரிமெல் புயல் வரை!

ராயன் செகண்ட் சிங்கிள்… “வாட்டர் பாக்கெட்” கானா காதல்!

ராஜேஷ் தாஸ் வழக்கு: காலையில் கைது.. மாலையில் ஜாமீன்- என்ன நடந்தது?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *