மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி நடிப்பில் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் சென்ற வாரம் மலையாளத்தில் வெளியான ‘பிரமயுகம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. ஒரு சிறந்த ஹாரர் படத்திற்கான அனைத்து அம்சங்களும் கொண்ட படமாக ‘பிரமயுகம்’ இருக்கிறது.
அதோடு மம்முட்டியின் அசுரத்தனமான நடிப்பு, செனத் ஜலாலின் அற்புதமான ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் கிறிஸ்டோபர் சேவியரின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த படத்துக்கு பொருத்தமாக அமைந்துள்ளன. இந்த படத்தில் பேசப்பட்டுள்ள நுண்ணிய அரசியல், அதிகாரம், கேரளாவின் நாட்டுப்புறக் கதை, மாந்திரீகம், வேதங்கள் போன்ற விஷயங்களை சினிமா ரசிகர்களும், விமர்சகர்களும் தற்போது அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
குறிப்பாக இந்தப் படத்தில் மம்முட்டி ஏற்றுள்ள கதாபாத்திரமான ‘கொடுமோன் போட்டி’ என்கிற கதாபாத்திரத்திற்கும், புகழ்பெற்ற மலையாள இயக்குநர் அதூர் கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் 1994 -ல் வெளியான ‘விதெயன்’ திரைப்படத்தில் மம்முட்டியே ஏற்று நடித்த ’பாஸ்கர படேலர்’ என்கிற கதாபாத்திரத்திற்குமான ஒற்றுமை போன்ற விஷயங்களை ஆழமாக ஆராய்ந்து பல கட்டுரைகள் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில், ‘பிரமயுகம்’ திரைப்படம் நாளை (பிப்ரவரி 23) தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி மலையாளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் கேரள பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. தற்போது மேலும் பல மொழிகளில் வெளியாவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
–ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குஜராத்திற்கு விழுந்த அடுத்த அடி… காயத்தால் விலகிய நட்சத்திர வீரர்!
முன்னாள் ஆளுநர் வீட்டில் சிபிஐ சோதனை : ஏன்?