பொதுவாக மலையாள சினிமா என்றாலே வாழ்வியல் சார்ந்த திரைப்படங்கள், எதார்த்தத்திற்கு நெருங்கிய திரைப்படங்கள் என்கிற ஒரு பார்வை உண்டு. இன்னோரு பக்கம் மிஸ்ட்ரி திரில்லர் ஜானர் படங்களும் மலையாளத்தில் நிறைய உண்டு.
குறைந்த பட்ச கதாபாத்திரங்களைக் கொண்டு மிகப் புதிரான ஒரு கதைக்களத்திற்குள் நம் சிந்தனைகளோடு விளையாடும் திரைப்படங்களாக ஃபஹத் ஃபாசில் நடிப்பில் ‘அகம்’, இயக்குநர் லிஜோ ஜோஸின் ‘சுருளி’, இயக்குநர் சனல் குமார் சசிதரனின் ‘சோலா’ போன்ற திரைப்படங்களும் உண்டு.
அந்த வகையில் இயக்குநர் சதாசிவனின் ‘பிரமயுகம்’ இடம்பெறும் போலும் என்கிற எண்ணம் தான் இந்தப் படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது அனைவருக்கும் தோன்றியது.
17ஆம் நூற்றாண்டில் நடைபெறுவதாகத் தொடங்குகிறது ’பிரமயுகம்’.தெற்கு கேரளாவில் இருக்கும் ஒரு காட்டிற்குள் பயணம் செய்யும் இருவர், தங்களின் பாதை வெளிச்சத்திற்காக நெருப்பை உண்டாக்குகின்றனர். அதற்குப் பிறகு அதில் ஒருவர் காட்டில் கண்ட மோகினியால் ஈர்க்கப்பட்டு காமம் முயன்று மடிய, மற்றொருவர் அதைக் கண்டு பயந்தோடி வழி தடுமாறி மம்முட்டியின் அமானுஷ்ய பங்களாவில் தஞ்சம் அடைகிறார்.
அதற்கு பிறகு தான் தெரிகிறது அந்த பங்களாவே ஒரு சபிக்கப்பட்ட இடமென்று. அந்த பங்களாவின் அமானுஷ்யம், மம்முட்டிக்குள் ஒளிந்திருக்கும் மர்மம் போன்ற விஷயங்களை திரில்லர் கலந்து சைக்காலஜிக்கல் படம் போல் சொல்வது தான் பிரமயுகம் திரைப்படத்தின் கதை.
மம்முட்டி ஒரு சிறந்த நடிகர் என்பதற்கு ஏற்கனவே பல சான்றுகளும், விருதுகளும் கொட்டிக்கிடப்பது ஒரு புறம் இருந்தாலும், இந்தப் படத்தில் அவரது சிறு, சிறு அசைவுகள், சிரிப்பு, பாவனை, கண்கள் என அனைத்தும் நம்மை மிரள வைக்கிறது.
1994யில் இயக்குநர் அதூர் கோபால கிருஷ்ணனின் ’விதெயன்’ என்கிற திரைப்படத்தில் மம்முட்டி காட்டிய வில்லத்தனத்தில் சற்றும் குறைவில்லாத ஒரு வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார் மம்முட்டி. குறிப்பாக இடைவேளைக் காட்சியில் இடம்பெறும் அவரின் சிரிப்பு, ’உன்ன இங்க கொண்டு வந்தது கடவுள் இல்லடா. விதி தான்’ என சொல்லும் ஒரு காட்சி, பகடை விளையாடும் ஒரு காட்சி என பல காட்சிகளில் நம்மை வியக்க வைக்கிறார் மம்முட்டி.
முழுக்க முழுக்க ஒரு கருப்பு வெள்ளைப் படமாக இந்தத் திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ‘இந்தக் கதையில் என்னால் எங்குமே வண்ணங்களைப் பார்க்க முடியவில்லை. அதனால் தான் இதை முழுக்க முழுக்க ஒரு கருப்பு வெள்ளை திரைப்படமாக்க முடிவெடுத்தோம்’ என ஏற்கனவே ஒரு பேட்டியில் இயக்குநர் ராகுல் சதாசிவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதை மிக நேர்த்தியாக செய்ததில் ஒளிப்பதிவாளர் சேனத் ஜலாலின் பங்கும் பெருமளவு உண்டு என்பது படமுழுக்க தெரிகிறது. ஒவ்வொரு ஃபிரேமும் அவ்வளவு கதை சொல்கிறது.
குறிப்பாக இதுபோன்ற கருப்பு வெள்ளை திரைப்படங்களுக்கு லைட்டிங் அமைப்பது, அதற்கு ஏற்றவாரு உடை, கலை வடிவமைப்பு போன்றவைகளை செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதை மிகச் சிறப்பாக செய்துள்ளனர் படக்குழுவினர்.
காட்சிகளுக்கு நடுவே இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியரின் இசையும், ஆங்காங்கே அவர் விட்டு வைத்த நிசப்தமும் நம்மை மேலும் திகைக்க வைக்கிறது. பொதுவாக ஹாரர் திரைப்படங்களில் நம்மை பயமுறுத்துவதற்காக சில ஜம்ப் ஸ்கேர்ஸ்(jump scares) காட்சிகள் இடம்பெறும். ஆனால், இந்தப் படத்தில் அதை மிக நேர்த்தியாக, எதார்த்தமாக கையாண்டிருந்தது ஒரு சிறந்த ஹாரர் திரைப்படத்திற்கான சரியான அணுகுமுறை.
படத்தின் மற்ற கதாபாத்திரங்களான அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் ஆகியோரின் நடிப்பும் கதைக்கு வலு சேர்க்கிறது. குறிப்பாக அர்ஜுன் அசோகன், தான் ஒரு அமானுஷ்ய இடத்தில் சிக்கிக் கொண்டதை உணரும் ஒரு இடம், அதற்கு பிறகு அவர் எடுக்கும் சில முடிவுகள் என மிக சிறப்பாக அந்தக் கதாபாத்திரத்தை கையாண்டுள்ளார்.
வேதங்கள், மாந்திரீகம், அமானுஷ்யம், சாத்தான் போன்ற விஷயங்களைப் பேசும் இந்தப் படத்தின் மற்றொரு நுண்ணியக் கூறாக ‘அதிகாரம்’ என்கிற ஒரு விஷயம் அமைந்திருந்தது. இயக்குநரின் சிறப்பான எழுத்தாற்றலை காட்டுகிறது. அதிகாரம் என்றால் என்ன, அது யார் இடத்தில் இருக்க வேண்டும், அது எந்த அளவுக்கு ஒரு உளவியல் நோயாகவே மாறக் கூடியது போன்ற விஷயங்களை இந்தத் திரைப்படம் நம் முன்னே விவாதமாக முன் வைக்கிறது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் போர்ச்சுகீசியர் அந்த இடத்திற்கு நுழைவதாக காட்டப்படும் அந்தக் காட்சியின் மூலம் வரலாற்று ரீதியாகவும் சில விஷயங்களை இந்தப் படம் கூற முயல்வதை புரிந்துகொள்ள முடிகிறது.
முன்னே சொன்னது போல் ஒரு சைக்காலாஜிக்கல் திரைப்படமாக ஆரம்பிக்கும் இந்தப் படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு வகையான ஃபாண்டசித்தனங்கள் இருந்தது கொஞ்சம் நெருடலாகச் சிலருக்கு தோணலாம். ஆனால், இந்தப் படம் தரும் அனுபவம், மம்முட்டியின் நடிப்பு போன்ற விஷயங்களுக்காக நிச்சயம் ஒன்றிற்கு இரண்டு முறை பார்க்க வேண்டிய திரைப்படம் தான் ‘பிரமயுகம்’.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பழனி : கெட்டுப்போன 70,000 பஞ்சாமிர்த பாட்டில்கள் அழிப்பு!
டிஎன்பிஎஸ்சி மூலம் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் : முதல்வர் ஸ்டாலின்
எலெக்ஷன் ஃப்ளாஷ்: ஆதவ் அர்ஜூனாவுக்கு விசிகவில் பொதுத்தொகுதி..சபரீசன் கொடுத்த வாக்குறுதி!
Video : ”சும்மா மெரட்டி விட்டுட்டாரு” SK 21 டைட்டில் இதுதான்!