‘ஊருக்குள்ள வந்தா கொன்னுடுவீங்களா?’: மிரட்டும் மாமன்னன் டிரெய்லர்!

Published On:

| By Monisha

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தின் டிரெய்லர் இன்று (ஜூன் 16) வெளியாகியுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன்.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.

நடிகர் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மாமன்னன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது முதலே, ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. படம் குறித்த அடுத்ததடுத்த அப்டேட்டுகள், பாடல்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று மாமன்னன் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டிரெய்லர் எப்படி?

”நான் பாடிக் கொண்டிருப்பது ஒரே பாடலாக இருக்கலாம், அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன்” என்று வடிவேலுவின் உறுதியான குரலில் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஒரு வசனமே படம் எப்படிப்பட்ட அரசியல் கருத்தைக் கொண்டுள்ளது என்பது புரிய வருகிறது.

தொடர்ந்து ஒரு அரசியல்வாதியாக நடிகர் பகத் பாசில் ”இந்த பதவியும் பவரும் வருவதற்கு நம்ம எவ்வளோ கஷ்டப்பட்டோம் என்பது ஞாபகம் இருக்குதா இல்லையா” என்ற வசனம் அவரது வில்லத்தனத்தை எடுத்துக் காட்டுகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ், கதாநாயகனுக்கு ஜோடியாக மட்டுமில்லாமல் கதையின் ஒரு முக்கிய அங்கமாக பயணித்திருப்பதையும் உணர முடிகிறது.

’இங்க மதம் அடிக்குதா, ஜாதி அடிக்குதா, பணம் அடிக்குதானு யோசிச்சோம்னா நமக்கு பைத்தியமே பிடிச்சிடும்’, ’ஊருக்குள்ள வந்தா கொன்னுடுவீங்களா’ என்ற வசனங்கள் படத்தின் மொத்த கதை மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இறுதியாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றிருந்த புகைப்படம் வடிவேலு கையில் துப்பாக்கியுடன், உதயநிதி அறிவாளுடன் கோபத்துடன் அமர்ந்திருக்கும் காட்சியோடு டிரெய்லர் முடிகிறது.

நிச்சயம் டிரெய்லர் படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கும்.

மோனிஷா

செந்தில்பாலாஜியிடம் முதல்வர் அக்கறை காட்டுவது ஏன்? : சீமான் பதில்!

ஓமந்தூரார் டு காவேரி:  செந்தில் பாலாஜிக்கு நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share