மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்னன்’. இந்த வருடம் வெளியான படங்களில் அதிகமான விவாதங்களை ஏற்படுத்தி அது இன்று வரை தொடர்கிறது.
அதே போன்று வணிகரீதியாக வெற்றியை பெற்ற இப்படத்தின் 50 ஆவது நாள் விழா சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று (ஆகஸ்ட் 17) நடைபெற்றது. படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மாமன்னன் ஷீல்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
அதன் பின்னர் நிகழ்வில் பேசிய நடிகர் வடிவேலு, “நான் அதிகமாக நகைச்சுவை படங்களில் தான் நடித்திருக்கிறேன். மொத்த நகைச்சுவை படத்துக்கும், இந்த ஒற்றை படம் தான் பெரிய பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது. இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
மாரிசெல்வராஜ் கதை சொல்லும்போதே அவரிடம் இருந்த பாசம், உணர்வு ஆகியவை கிட்டத்தட்ட 30 படங்களை இயக்கிய இயக்குநருக்கு இருந்ததை பார்த்தேன். இதை ஓகே சொல்ல வைத்ததற்கு உதயநிதி தான் காரணம்.
ஆனால் இது இப்படியான ஒரு வெற்றியை பெறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. படத்தில் 6 காட்சிகள் என்னை தூங்கவிடவில்லை. மலை உச்சியில் நான் அழும் காட்சியை பார்த்து நானே கதறி அழுதேன். திரையில் நான் வேறொருவரை பார்த்து அழுதேன்.
நானும் உதயநிதியும் வண்டியில் செல்லும் காட்சியில் இறுக்கத்தையும், வலியையும் உதயநிதி சிறப்பாக கடத்தியிருப்பார். வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது மனைவியின் காலை பிடித்து பேசியிருப்பேன். இந்தக் காட்சிக்கு பலரும் என்னை அழைத்து பாராட்டினார்கள். அந்த காட்சியை மாரிசெல்வராஜ் சிறப்பாக எழுதியிருப்பார்” என்றார்.
ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், “எல்லாப்புகழும் இறைவனுக்கே. எனக்குள் 20-30 ஆண்டுகளாக இருந்த ஆதங்கம் தான் இந்தக் கதை. ஏன் இப்படி நடக்கிறது? என ஆதங்கப்பட்டிருக்கிறேன்.
என்னால் இசையில் எதுவும் பண்ண முடியவில்லை. யார் செய்கிறார்களோ அவர்களுடன் இணைந்து விட்டேன். படம் இந்த அளவுக்கு சிறப்பாக வரும் என நினைக்கவில்லை. எனக்குப் பிடித்த இயக்குநர்களின் சாயலில் இருந்தது படம். உதயநிதியுடன் பைக்கில் வடிவேலு செல்லும் காட்சியை பார்த்ததும் படத்தை சிறப்பாக கொடுக்க முடிவு செய்தேன். அப்போது தான் ‘ராசா கண்ணு’ பாடலுக்கான ஐடியா தோன்றியது” என்றார்.
இறுதியாக பேசிய மாமன்னன் படத்தின்இயக்குநர் மாரி செல்வராஜ், “நான் என்ன பேசப்போகிறேன் என்பதை உதயநிதி காண்காணிக்கிறார். இந்த நேரத்தில் நான் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும். ‘நாம் பாடிக்கொண்டிருப்பது பழைய பாடலாக இருக்கலாம். அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன். என் வயிற்றிலிருந்து குடலை உருவி, ஓரிழை யாழாக மாற்றி அதைத் தெருத்தெருவாக மீட்டிவருவேன். உண்மையை கேக்க கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டே இருப்பேன்” என்றவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறும்போது “சந்தோசமாக உள்ளது. மாமன்னன் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதுக்கு மக்களே காரணம்”என்றார்.
அப்போது, நாங்குநேரி சம்பவத்துக்கு சாதிய எண்ணம் கொண்ட திரைக்கலைஞர்கள் காரணம் என்று பேச்சு எழுகிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “என்னுடைய மூன்று படங்களும் மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. எதையும் மக்கள் தீர்மானிப்பார்கள்” என்றார்.
ரத்னவேலு கதாபாத்திரம் தவறாக கொண்டாடப்பட்டது குறித்த கேள்விக்கு, “தவறாக கொண்டாடியவர்களிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்.
எல்லா படைப்புகளும் உருவாக்கப்பட்டது மக்களிடம் கொண்டுச் சேர்க்கத்தான். மக்களிடம் படைப்புகள் எப்படி சென்றாலும் சரி. ஒரு திரைப்படம் என்பது நான்கு நாட்களில் முடிந்துவிடுவது கிடையாது. ஆண்டுக்கணக்கில் திரைப்படங்கள் பேசும்.
நான்கு நாட்களில் பேசப்படுவதை வைத்து முடிவு செய்ய முடியாது. படங்கள் பேசப்பட்டு கொண்டே இருக்கும். கதாப்பாத்திரங்கள் உருமாறும். நிறம் மாறும். இறுதியில் அந்த பாத்திரங்கள் அதன் நிலையை அடையும். படம் பார்க்க பார்க்க அதன் உண்மையை பேசும்” என்றார்.
இராமானுஜம்
போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: பணியிடை நீக்கம்!
வேலைவாய்ப்பு : MRB – யில் பணி!