இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தின் பாடலான கொடி பறக்குற காலம் பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று (ஜூன் 13) வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.
நடிகர் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
மாமன்னன் படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி வடிவேலுவின் குரலில் ’ராசா கண்ணு’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ’ஜிகு ஜிகு ரயில்’ சிறப்பு வீடியோவாக வெளியாகி டிரெண்ட் ஆனது. அதன் பின்னர் காதல் பாடலான ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடல் வெளியானது. பின்னர் கடந்த வாரம் நான்காவது பாடலான ‘மன்னா மாமன்னா’ லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார்.

தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள கொடி பறக்குற காலம் வந்தாச்சி பாடல் இன்று மாலை வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ளார். பிரபல பாடகியான கல்பனா உடன் இணைந்து ரக்ஷிதா சுரேஷ், தீப்தி சுரேஷ் மற்றும் அபர்ணா ஆகியோர் பாடியுள்ளனர்.
சிறகுகள் கேட்பது பந்தயத்திற்காக அல்ல, பறத்தலுக்காக” எனும் மாரி செல்வராஜின் வரிகளுடன் பாடல் தொடங்குகிறது.

அரசு கலைக் கல்லூரியில் கீர்த்தி சுரேஷ் நடனமாடும் வகையில் லிரிக்கல் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. ‘நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு’ வரிகள் மூலம் பெண் விடுதலைக்கான பாடலாக இப்பாடல் உருவாகியிருப்பதாக உணர முடிகிறது.
வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் பெண்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என்ற கருத்தை பாடல் மூலம் உணர முடிகிறது. பாடல் வரிகளும் துள்ளலான இசையும் பாடலை திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.
மோனிஷா