விமர்சனம் : ரேகாசித்ரம்!

Published On:

| By uthay Padagalingam

குற்றம் நிகழ்ந்தது எப்படி?

’மர்டர் மிஸ்டரி த்ரில்லர்’ வகைமையில் சமீபகாலமாகப் பல படங்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. சமகாலத்தில் நிகழ்வதாக அல்லாமல், சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த குற்றச் சம்பவம் தொடர்பான விசாரணையை மையப்படுத்தி அவற்றின் திரைக்கதை அமைக்கப்படுவதைக் காண முடிகிறது.

அப்படிப்பட்ட விவரிப்பில் சிறிது பிசகினாலும் பார்வையாளர்கள் ‘ஹெக்கேக்கே’ என்ற சத்தத்தை அரங்கம் முழுவதும் எதிரொலிக்கவிடுவார்கள். அந்த அபாயத்தைக் கடப்பது அசாதாரணம். அதனைச் சாதித்திருக்கிறது சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘ரேகாசித்ரம்’.

இதில் ஆசிஃப் அலி பிரதான பாத்திரம் ஏற்றிருக்கிறார். மனோஜ் கே.ஜெயன், ஹரிஸ்ரீ அசோகன், சாய்குமார், சித்திக், இந்த்ரன்ஸ், சலீமா, டி.ஜி.ரவி, கௌரவ வேடத்தில் தோன்றிய ஜெகதீஷ் உள்ளிட்ட சீனியர்களோடு அனஸ்வரா ராஜன், உன்னி லாலு, ஜரீன் ஷிஹாப், நிஷாந்த் சாகர், பாமா அருண், மேகா தாமஸ், ஸ்ரீகாந்த் முரளி, ப்ரியங்கா, நந்து, சுதி கோப்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் கமல், திரைக்கதையாசிரியர் ஜான் பால் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் ஏஐ நுட்பத்தைப் பயன்படுத்தி மறைந்த இயக்குனர் பரதன், நடிகர் மம்முட்டி ஆகியோரும் பாத்திரங்களாக இடம்பெற்றுள்ளனர்.

மேற்சொன்ன விஷயங்களே ‘ரேகாசித்ரம்’ கதை எப்படிப்பட்டது என்று சொல்லிவிடும்.

ரேகாவின் சித்திரம்!

நாற்பதாண்டுகளுக்கு முன்னர் பதினெட்டு வயது இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். நான்கு பேர் அவரது சடலத்தைத் தூக்கிச் சென்று ஒரு காட்டில் புதைக்கின்றனர்.

40 ஆண்டுகள் கழித்து, நேர்மைக்குப் பெயர் போன ஒரு காவல்துறை ஆய்வாளர் அப்பகுதிக்கு மாற்றலாகி வருகிறார். சில காலம் இடைநீக்கத்திற்கு ஆளாகியிருந்த அவர், அன்றுதான் மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார்.

அப்போது, அருகிலுள்ள காட்டில் அறுபது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட விவரம் தெரிய வருகிறது.

அந்த நபரின் பெயர், அவர் குறித்த விவரங்களை விசாரிக்கின்றனர் போலீசார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, அந்த நபர் ஃபேஸ்புக் லைவ்வில் பேசியிருக்கிறார். அதில், தான் உட்கார்ந்திருக்கும் இடத்தின் கீழே ஒரு பெண்ணைப் புதைத்ததாகச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், தற்போது சமூகத்தில் பெரும்புள்ளியாக இருந்துவரும் ஒரு தொழிலதிபரும் இன்னொரு நபரும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

அந்த ஆய்வாளர் அந்த இடத்தை மட்டுமல்லாமல், கொலை செய்யப்பட்ட பெண் யார் என்ற விவரங்களையும் தோண்டியெடுக்கத் தொடங்குகிறார். குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் ஏதோ ஒருவிதத்தில் இக்குற்றத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை உணர்கிறார் அந்த காவல்துறை அதிகாரி. ஆனால், அவரால் அதனை நிரூபிக்க முடியாது.

ஆதலால், கொலை செய்யப்பட்ட பெண் யார் என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார். அப்போது, அந்த வனம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகேயுள்ள தேவாலய வளாகத்தில் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் ஒரு சினிமா படப்பிடிப்பு நடந்திருப்பது தெரிய வருகிறது. அதில், ஒரு பாடல் காட்சியில் நடிக்கத் துணை நடிகையாக வந்தவர் தான் கொலையான இளம்பெண்.

அந்தப் பெண் எப்படிக் கொல்லப்பட்டார்? அந்த தொழிலதிபர் எந்தவகையில் அச்சம்பவத்தோடு சம்பந்தப்படுகிறார் என்பதை லாஜிக்மீறல்கள் தொடர்பான கேள்விகளுக்கு இடமளிக்காமல் விவரிக்கிறது ‘ரேகாசித்ரம்’மின் மீதி.

உண்மையைச் சொன்னால், திரைக்கதையில் முதல் திருப்பம் வரும்போது கொலையான இளம்பெண்ணின் முகம் நமக்குத் தெரியாது. மெல்ல அது நம் கண்களில் படரத் தொடங்கும் வகையில் திரைக்கதை நகர்வதும், இறுதியில் அவரது முழுமையான வடிவம் தென்படுவதும்தான் இப்படத்தின் ப்ளஸ்.

த்ரில்லரா இது?!
’ரேகாசித்ரம் ஒரு பரபரப்பு நிறைந்த த்ரில்லர் படமா’ என்று கேட்டால், ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், உடனடித் திருப்பங்களுக்கு வழி வகை செய்ய முடிய இடமில்லாதவாறு அந்த குற்ற சம்பவம் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் நிகழ்வதாகக் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில் மலையாள சினிமா ரசிகர்கள் நன்கறிந்த ஒரு வெற்றிப்படத்தின் படப்பிடிப்பைப் பின்னணியாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒரு அம்சமே இப்படத்தைக் காண்பதில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகிறது.


யார் கொலையாளி என்பதில் கவனம் செலுத்தாமல், குற்றம் நிகழ்ந்தது எப்படி என்பதைச் சொல்வதிலேயே திரைக்கதை மெனக்கெடுகிறது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
இது போன்ற விஷயங்களே இப்படத்தை ‘கிளாசிக்’ ஆக மாற்றியிருக்கிறது. மலையாளத் திரையுலகில் இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் ஆகவும் இதனை மாறச் செய்திருக்கிறது.
ராமு சுனில் இதன் கதையை அமைத்திருக்கிறார். அவரோடு இணைந்து ஜான் மந்திரிகல் இதன் திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கிறார்.

வகைமை பிரிப்பதிலும் காட்சிகளின் வழியே உருவாக்கும் தாக்கத்திலும் பல இடர்ப்பாடுகளைக் கொண்ட இக்கதையைத் திரையில் குழப்பமின்றி சொல்வதில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் ஜோபின் டி. சாக்கோ.

ஒளிப்பதிவாளர் அப்பு பிரபாகர், படத்தொகுப்பாளர் ஷமீர் முகம்மது, தயாரிப்பு வடிவமைப்பாளர் ஷாஜி நடுவில் மற்றும் விஎஃப்எக்ஸ், டிஐ கலைஞர்களின் ஒத்துழைப்போடு அதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

இப்படத்தில் முஜீப் மஜீத் அமைத்திருக்கும் பின்னணி இசையானது காட்சிகளின் தன்மையை அடிக்கோடிடுவதோடு, அவை நகரும் வேகத்தையும் துரிதப்படுத்தியிருக்கிறது. அதனால், பார்வையாளர்கள் மனச்சோர்வடைய வாய்ப்பில்லாமல் போகிறது.

சமீபகாலமாகத் தொடர்ந்து போலீஸ் பாத்திரங்களில் நடித்து வருகிறார் ஆசிஃப் அலி. ஆனால், இப்படத்தில் அவரது பாத்திரம் வேறுமாதிரியாகத் தெரிகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாத அவ்வேறுபாடு, கூர்ந்து கவனித்தால் புலப்படுவதே அவரது திறமைக்குச் சான்று.
அனஸ்வரா ராஜன், இதில் சினிமா மீது மோகம் கொண்ட ஒரு இளம்பெண்ணாகத் தோன்றியிருக்கிறார். ’நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற பெண்கள் பலர் இருந்திருப்பார்களே’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார்.

மனோஜ் கே.ஜெயன் – சலீமா ஜோடியின் இருப்பு குறைவு என்றாலும், அவர்கள் வரும் காட்சிகளில் நாம் உணரும் தாக்கம் அதிகம். இப்படத்தில் நகைச்சுவைக்கு இடமளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் இந்திரன்ஸ் போன்றவர்கள் அக்குறையை ஆங்காங்கே தீர்த்து வைத்திருக்கின்றனர்.
இயக்குனர் பரதன், கமல், மம்முட்டி, ஜான் பால் என்று எண்பதுகளில் கோலோச்சிய திரைக்கலைஞர்களை, அதே காலகட்டத்து இளமையோடு காட்ட ‘ஏஐ’ நுட்பம் உதவியிருக்கிறது.
மிக முக்கியமாக, மக்கள் நன்கறிந்த ஒரு திரைப்படத்தின் பின்னணியில் புனைவுக் கதையொன்றைச் சொல்வது மிக அபாரமான கற்பனை. அதனைப் பிசகின்றிச் சொன்ன வகையில் கவனம் ஈர்க்கிறது ‘ரேகாசித்ரம்’.

சுமார் 6 கோடியில் தயாரான இப்படம் இரண்டு வாரங்களிலேயே 50 கோடி ரூபாய் வரை உலகம் முழுக்க வசூலித்திருக்கிறது. இது போன்ற படங்களின் வெற்றி புதிய முயற்சிகளில் இறங்குபவர்களுக்கு நல்லதொரு கள அனுபவத்தையும் அதனை எதிர்கொள்வதற்கான துணிவையும் வழங்கும். அந்த வகையில் ‘ரேகாசித்ரம்’ சமகால இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடத்தக்க ஒரு படமாக மலர்ந்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel