ஆஸ்கர் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம்!
வரும் 96வது ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்படும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக ‘2018’ என்ற மலையாள திரைப்படத்தை இந்திய திரைப்படக் கூட்டமைப்பு தேர்வு செய்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் ஜூடு ஆண்டனியின் இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படம் ’2018’.
இத்திரைப்படம் இயற்கை பேரிடரின் கோர நிமிடங்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்பு, அசாதாரண சூழ்நிலையில் ஹீரோவாக மாறிய சாமானியர்கள்,
துணிச்சலுடன் மக்களுக்காக களமிறங்கிய மீனவ மக்கள், பேரபாயத்தில் இருந்து ஒற்றுமையுடன் போராடி மீண்ட மக்களின் வடுக்கள் ஆகியவற்றின் உணர்ச்சி பூர்வமான குவியலாக திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது.
படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், அபர்ணா பாலமுரளி, ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், கலையரசன் ஆகியோர் மிகச்சிறப்பான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனால் வெறும் ரூ.30 கோடியில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்று உலகளவில் ரூ.200 கோடியாக வசூல் சாதனை படைத்தது.
மேலும் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 96வது ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு இந்தியாவின் சார்பில் ‘2018’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான இறுதிப்பட்டியலில் மாரி செல்வராஜின் மாமன்னன் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை – பாகம் 1, தனுஷின் வாத்தி உட்பட நான்கு தமிழ்ப் படங்கள், கேரளா ஸ்டோரி, தி வாக்சின் வார் உள்ளிட்ட 11 ஹிந்தித் திரைப்படங்கள், தெலுங்கில் இருந்தும் 4 திரைப்படங்கள் என மொத்தம் 22 இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் ரவி கொட்டாரகரா கூறுகையில்,
“இயற்கைக்கும் மனித குலத்துக்கும் இடையிலான போரின் உருவகமாக 2018 மலையாள திரைப்படம் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.
😍🤩🙏🏼❤️ #2018Movie – India’s Official entry to Oscars! pic.twitter.com/WTnBfWRhPv
— Tovino Thomas (@ttovino) September 27, 2023
கடந்த காலங்களில் ஆஸ்கர் விருதுக்கு மலையாளத்தில் இருந்து குரு (1997), ஆதாமிண்டே மகன் அபு (2011) மற்றும் ஜல்லிக்கட்டு (2019) ஆகிய படங்கள் தேர்வாகின.
தற்போது 4வது படமாக 2018 (2023) திரைப்படம் தேர்வாகியுள்ளது மலையாள திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அடுத்த 2 ஆண்டில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: முதல்வர் ஸ்டாலின்
திருமாவளவனிடம் உடல் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி