மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மாமுக்கோயா இன்று (ஏப்ரல் 26) காலமானார். அவருக்கு வயது 76.
கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்பு மற்றும் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு நோயால் மாமுக்கோயா சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் ஏப்ரல் 24-ஆம் தேதி மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியை துவக்கி வைப்பதற்காக மாமுக்கோயா சென்றிருந்தார்.
அவருடன் செல்ஃபி எடுப்பதற்காக ரசிகர்கள் சூழ்ந்ததால் கால்பந்து மைதானத்திலேயே மாமுக்கோயா மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாமுக்கோயா இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவு மலையாள திரையுலகினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1946-ஆம் ஆண்டு பிறந்த மாமுக்கோயா 450-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடக்கத்தில் நாடகத்தில் நடித்து வந்த மாமுக்கோயா 1979-ஆம் ஆண்டு வெளியான ஆயுர்வேதே பூமி என்ற திரைப்படத்தில் நடித்து மலையாள சினிமாவிற்கு அறிமுகமானார்.
தொடர்ந்து ஸ்னேகமுல்லா சிம்ஹம், காலம் மாரி கத மாரி, பட்டனபிரவேசம், கல்யாண கச்சேரி குருதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். தனது தனித்துவமான நடிப்பாலும் கோழிக்கோடு வட்டார வழக்கு பேச்சாலும் எளிதாக மலையாள சினிமா ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார்.
மலையாள சினிமாவில் முதல் முறையாக காமெடி நடிகர் விருது பெற்றது மாமுக்கோயா தான். இரண்டு முறை மலையாள சினிமாவில் காமெடி நடிகர் விருதை வென்றுள்ளார்.
மாமுக்கோயா மறைவிற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
செல்வம்