50 ஆண்டுகளாக மலையாள சினிமா ரசிகர்களை தனது நகைச்சுவை நடிப்பால் சிரிப்பில் மூழ்கடித்த காமெடி சூப்பர் ஸ்டார் இன்னொசென்ட் இன்று அவர்களை கண்ணீரில் மூழ்கடித்துள்ளார்.
1948-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி கேரள மாநிலம் இரிஞ்சலகுடாவில் இன்னொசென்ட் பிறந்தார். 8 ஆம் வகுப்போடு தனது பள்ளி படிப்பை நிறுத்தினார். சிறு வயதில் அனைவரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை திறமை அவரிடம் இருந்தது. இதனால் தனது ஊரில் எண்டெர்டெயிண்மெண்ட் ஷோக்கள் நடத்தி அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தான் அவர் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.
இதில் அவருக்கு போதுமான வருமானம் கிடைக்காததால் 1970-ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார். அந்த சமயத்தில் அவர் சில நாடகங்களில் நடித்து தனது நடிப்பிற்கு தீனி போட்டு வந்தார். தீப்பெட்டி தொழிற்சாலை நிதி நெருக்கடி ஏற்பட்டு கடனில் மூழ்கியது. இதனால் அவர் மறுபடியும் தனது சொந்த ஊரான இரிஞ்சலகுடாவிற்கு வந்து தோல் பொருட்கள் விற்பனை செய்து வந்தார்.
அந்த நேரத்தில் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. 1972-ஆம் ஆண்டு நிருத்யஷாலா என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு அறிமுகமானார்.
தொடர்ந்து ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங், மன்னார் மதை ஸ்பீக்கிங், கிலுக்கம், காட் பாதர், வியட்நாம் காலனி, நாடோடி கட்டு, தேவசுரம், ராவணபிரபு, மணிசித்திரத்தாழ், கபூலிவாலா, ரசதந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மலையாள ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானார். இன்னொசென்ட் தனது நகைச்சுவையான உடல்மொழி, திரிசூர் வட்டார வழக்கு பேச்சால் ரசிக்கப்பட்டார். இன்றளவும் அவரது வசனங்கள் பல மீம்ஸ்களாகவும், அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழலுக்கும் அவரது வசனங்கள் பொருந்திப்போகக்கூடியதாகவும் உள்ளது.
தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் மலையாள திரையுலகை கட்டிப்போட்ட இன்னொசென்ட் வரிட் திக்கதாலா 750-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இன்னொசென்ட் சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். தனது ரசிகர்களின் தொடர் கோரிக்கையால் ஜோமோண்டே சுவிஷேங்கள், நான் மேரிக்குட்டி, மரக்கர் அரபிக்கடலின் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு பிரித்விராஜ், சுகுமாரன் ஆகியோருடன் கடுவா படத்தில் நடித்திருந்தார்.
1976-ஆம் ஆண்டு இன்னொசென்ட் ஆலிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சொன்னட் என்ற மகன் உள்ளார். இன்னொசென்ட்டை போலவே ஆலிஸும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சினிமா மட்டுமல்லாது அரசியல் பணிகளிலும் இவர் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். இடதுசாரி சிந்தனை உள்ள குடும்பத்தில் பிறந்த இன்னொசென்ட் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1970-ஆம் ஆண்டு அக்கட்சியின் இரிஞ்சலகுடா தொகுதி செயலாளராக இருந்துள்ளார்.
1979-ஆம் ஆண்டு புரட்சிகர சோஷலிச கட்சி சார்பில் இரிஞ்சலகுடா நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார். கடந்த 2014-ஆம் ஆண்டு இடதுசாரி முன்னணி கூட்டணியில் சாலக்குடி தொகுதி வேட்பாளராக களமிறங்கினார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிசி சக்கோவை 13,884 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தேர்தலில் வெற்றி பெற்றார். 2003-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகளாக மலையாள சினிமா நடிகர்கள் அசோசியேஷன் தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.
இன்னொசென்ட் சிறந்த நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் 5 புத்தகங்களை எழுதியிருக்கிறார். புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்ட அனுபவங்களை கேன்சர் வார்டில் சிரி என்ற புத்தகத்தின் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார். சிரிக்கு பின்னில், மழ கண்ணாடி, இரிஞ்சலகுடக்கு சுத்தும், ஞான் இன்னசென்ட் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
இன்னொசென்ட் மார்ச் 3-ஆம் தேதி கொச்சியில் உள்ள விபிஎஸ் தனியார் மருத்துவமனையில் நுரையீரல் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அவருக்கு ECMO உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 10.30 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கடவாந்தராவில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் இரிஞ்சலகுடா பகுதியில் உள்ள முனிசிபல் டவுனில் மதியம் 1 மணி முதல் 3.30 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. நாளை காலை 10 மணிக்கு இரிஞ்சலகுடாவில் உள்ள புனித தோமையார் கேத்தென்றல் ஆலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அவரது மறைவால் மலையாள திரையுலகினர், ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். முதல்வர் பினராயி விஜயன், முன்னணி நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்டோரும் இன்னொசென்ட் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்னொசென்ட் இந்த உலகை விட்டு மறைந்தாலும் தனது நகைச்சுவை நடிப்பால் மலையாள ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
செல்வம்
ராகுல் தகுதி நீக்கம்: லண்டனில் போராட்டம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!