மீண்டும் ரசிகர்களைச் சோதித்த லிஜோ!
மலையாளத் திரையுலகில் வித்தியாசமானதொரு இயக்குனராக அறியப்படுபவர் லிஜோ ஜோஸ் பெலிசேரி. நாயகன், சிட்டி ஆஃப் காட், ஆமென், டபுள் பாரல் படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், ‘அங்கமாலி டயரீஸ்’ படத்தில் பிரமிப்பில் ஆழ்த்தினார். அன்று தொடங்கிய லிஜோவின் கொடி, இப்போதும் பட்டொளி வீசிப் பறக்கிறது.
இடையே ஈ மா யூ, ஜல்லிக்கட்டு, சுருளி படங்களில் நம்மைச் சோதித்த லிஜோ, கடந்த ஆண்டு வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தை நினைத்து நினைத்து ரசிக்கத்தக்க ஒரு படைப்பாகத் தந்திருந்தார். அதில் மம்முட்டியோடு இணைந்தவர், அடுத்ததாக மோகன்லால் உடன் இணைந்து தந்திருக்கும் ஆக்ஷன் அட்வெஞ்சர் படமே ‘மலைக்கோட்டை வாலிபன்’. இந்த டைட்டிலே விமர்சனரீதியிலும் வசூல்ரீதியிலும் வியத்தகு சாதனைகளைப் படம் நிகழ்த்தும் என்ற எண்ணத்தைத் தூண்டியது.
டீசர், ட்ரெய்லர் ஆகியன அந்த எண்ணத்தை அதிகப்படுத்திய நிலையில், தற்போது படம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. படம் எப்படியிருக்கிறது? இது ரசிகர்களுக்கான சோதனையா அல்லது கொண்டாடத்தக்க சாதனையா?
ஒரு வீரனின் வாழ்க்கை!
அம்பத்தூர் மலைக்கோட்டையைச் சேர்ந்த வாலிபன் (மோகன்லால்) எனும் வீரன் ஒவ்வொரு ஊராகச் சென்று, அங்கிருக்கும் வீரர்களை எதிர்த்துச் சண்டையிட்டு வெற்றி வாகை சூடுகிறார். ஆசான் அய்யனாரும் (ஹரீஷ் மோசஸ்) அவரது மகன் சின்னப்பையனும் (மனோஜ் மோசஸ்) அந்த பயணத்தில் அவருக்குத் துணை நிற்கின்றனர்.
கேலு மல்லன் என்பவரை வீழ்த்தி இன்னொரு இடம் தேடிச் செல்கையில், வழியில் ரங்கபட்டிணத்து ரங்கராணி (சோனாலி) எனும் பெண்ணைச் சந்திக்கிறார் வாலிபன். நடனமங்கையான ரங்கராணி நிகழ்ச்சியொன்றில ஆடிப் பாடுகிறார். அப்போது, சமதகன் (டேனிஷ் சேத்) என்ற நபர் அவரைப் பாலியல்ரீதியாக மேடையில் துன்புறுத்த, அவரைத் தாக்குகிறார் வாலிபன்.
ஆத்திரமுறும் சமதகன், ’மாங்கோட்டு மல்லன் உடன் மோதி வெற்றி பெற்றால் என் ஒரு பக்கத்து தலைமுடியையும் மீசையையும் மழிக்கிறேன்’ என்று சவால் விடுகிறார். மாங்கோடு செல்லும் வாலிபன், அவரையும் வீழ்த்துகிறார்; அதையடுத்து, சவால் விட்டவாறே தலைமுடியையும் மீசையையும் மழித்துக்கொண்டு கழுதையில் ஊர்வலம் செல்கிறார் சமதன். எதிரிகளை எந்த வழியிலாவது வஞ்சகம் கொண்டு வெற்றியடையத் துடிக்கும் அவர், மலைக்கோட்டை வாலிபன் பின்னாலேயே திரிகிறார்.
தான் பிறந்த இடமான அம்பத்தூர் மலைக்கோட்டை போர்ச்சுக்கீசியர்கள் வசம் இருப்பது கண்டு, அந்த ராஜாவோடு மோதிப் பார்க்க முனைகிறார் வாலிபன். அங்கு, ‘உன் மனதில் மிகப்பெரிய ரகசியம் ஒளிந்திருப்பது எனக்குத் தெரிகிறது’ என்று அய்யனாரிடம் சொல்கிறார் சமதகன். அதைக் கேட்டதும் அய்யனார் துணுக்குறுகிறார். அன்றிரவு, சமதகனிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு வாலிபனிடம் அறிவுறுத்துகிறார்.
அடுத்த நாள், மோதல் நடக்குமிடத்திற்குக் கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு செல்கிறார் மலைக்கோட்டை வாலிபன். அப்போது, அவரது உடலில் விஷம் தடவிய ஊசியால் குத்துகிறார் சமதகன்.
அதன்பிறகு என்னவானது? எல்லா மோதலையும் போன்று அதிலும் மலைக்கோட்டை வாலிபன் வெற்றி பெற்றாரா? சமதகன் சதியை முறியடித்தாரா? அய்யனார் மனதில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன என்று அதுவரை திரைக்கதையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது மீதி.
மொத்தப்படமும் ஒரு வீரனின் வெற்றிப் பயணமாகவே காட்சியளிக்கிறது. அது ரசிகர்களின் பார்வையில் அமையாமல், இயக்குனர் லிஜோவின் கண்ணோட்டத்தில் இருப்பதுதான் இப்படத்தின் பெரும்பலவீனம்.
லிஜோவிடம் இருக்கும் பிரச்சனை!
மோகன்லாலின் நடிப்பு பற்றிச் சிலாகிக்க வேண்டிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. என்னதான் ‘டூப்’பின் பங்களிப்பு இருந்தாலும், சண்டைக்காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் சிரத்தை நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. அறுபதைத் தாண்டியவர் அவர் என்ற எண்ணமே மறந்து போகிறது.
ஹரீஷ் பேரடி, டேனிஷ் சேத் இருவரும் திரைக்கதையில் பிரதான இடத்தைப் பிடிக்கின்றனர். இருவரது பங்களிப்பும் அபாரமாக உள்ளது. சின்னப்பையனாக நடித்த மனோஜ் மோசஸூம், சாமந்தி எனும் பாத்திரத்தில் வரும் கதா நந்தியும் இளம் ரசிகர்களை ஈர்க்கும் ஜோடிகளாக விளங்குகின்றனர்.
சோனாலி பெனேத்கர், சஞ்சனா சந்திரன், சுசித்ரா நாயர். பேட்ட படத்தில் நடித்த மணிகண்டன் ஆச்சாரி உட்படப் பலர் திரையில் வந்து போயிருக்கின்றனர். நாட்டியக் கலைஞர் சாந்தா தனஞ்செயன் இதில் பொன்னுரூமி வீரம்மாவாகத் தோன்றியிருக்கிறார்.
இது போன்ற படங்களில் பிரமாண்டத்தைக் காட்ட நிறைய பாத்திரங்களைத் தொடர்ந்து திரையில் அறிமுகப்படுத்த வேண்டும். அதேநேரத்தில், மையக் கதையில் இருந்து விலகிவிடாதவாறு குறிப்பிட்ட பாத்திரங்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இயக்குனர் லிஜோ ஜோஸ் பெலிசேரி சில பாத்திரங்களின் வார்ப்பில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார். அதேநேரத்தில், அவற்றில் புதிய அம்சங்கள் என்று எதுவுமில்லை.
மலைக்கோட்டை வாலிபன் என்று டைட்டில் வைத்தாலும், அறுபதைத் தொட்ட மோகன்லாலை இளமையாகக் காட்ட முடியாது என்பதை அறிந்தவர் லிஜோ. அதனால், லாலின் பாத்திரத்திற்கு ‘வாலிபன்’ என்று பெயரிட்டிருக்கிறார்.
மது, பெண் வாசம், சண்டை, வெற்றி என வாழ்ந்துவரும் ஒரு வீரனுக்குத் தனது தனிப்பட்ட பொறுப்பு, கடமை, லட்சியம் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லை என்பதாகத்தான் வாலிபன் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், திரையில் தென்படும் அந்த வீரனின் சாகசங்கள், பதின்ம வயதில் இருப்பவர்களை ஈர்க்கத்தக்கதாகவே உள்ளன.
அப்படிப்பட்ட சாகசங்களை முன்னிறுத்திய பல கதைகளின் ஒரு துளியாக, அவற்றுக்கான அர்ப்பணமாக விளங்குகிறது திரைக்கதை. கூடவே, அது போன்ற கதைகளைப் பார்த்து ரசித்துப் பெற்ற உணர்வினை ஒட்டுமொத்தமாகத் திரையில் தந்து ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் வேலையையும் செய்திருக்கிறார் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெலிசேரி.
முன்பாதியில் வழக்கத்திற்கு மாறான அரச கதையையும் ஆக்ஷன் அனுபவத்தையும் திரையில் காட்ட முயற்சித்த இயக்குனர், பின்பாதிக் காட்சிகளை அவ்வாறு அமைந்த திரைப்படங்களுக்கான அர்ப்பணமாக வடிவமைக்கவா அல்லது அவற்றை விமர்சிக்கும் ‘ஸ்பூஃப்’ ஆகத் தருவதா என்று குழம்பியிருக்கிறார். ரசிகர்கள் சோம்பிச் சோர்ந்துபோகும் இடமும் அதுதான்.
’சப்னாமி’ பாடல் வருமிடமோ, அப்படியே ‘ஷோலே’ படத்தை ‘லொள்ளுசபா’வில் பார்த்த எபெக்டை தருகிறது.
வழக்கமாக ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதற்கு எதிர்த்திசையில் வேறொன்றைத் தருவது லிஜோவின் வழக்கம். இதிலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. இந்த படம் வழக்கமானதொரு நாயக சாகச படமாகவும் அமையவில்லை. லிஜோவின் தனித்துவ முத்திரையும் இதில் பதியவில்லை.
‘நண்பகல் நேரத்து மயக்கம்’ உட்பட லிஜோவின் படங்கள் தரும் காட்சியனுபவம், நம் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்தாலும் கவனத்தை நிச்சயம் கொள்ளை கொள்ளும். இதில் அந்த மாயாஜாலம் நிகழவில்லை.
வித்தியாசமான அனுபவம்!
பெரும் நிலப்பரப்பு. அதில் பழமையை நினைவூட்டும் சில அடையாளங்கள். அவற்றுக்கு நடுவே நிறைந்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள். ஊடே புகுந்தாடும் ஒளியின் கீற்றுகள். அனைத்தையும் கொண்டு, வழக்கத்திற்கு மாறான வண்ணமயத்தைத் திரையில் பரப்பியிருக்கிறார் இயக்குனர். அந்த வகையில், மலைக்கோட்டை வாலிபன் படத்தில் ஒவ்வொரு பிரேமும் நிச்சயம் ஆச்சர்யத்தைத் தரும்.
அதற்கான முக்கியக் காரணங்களாக ஒளிப்பதிவாளர் மது நீலகண்டனும் இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளையும் உள்ளனர். மிகச்சில வாத்தியங்களைக் கொண்டு வார்க்கப்பட்டிருக்கும் பின்னணி இசை, பல காட்சிகளில் நம்மை ‘அட’ சொல்ல வைக்கிறது.
திரையில் மனிதர்கள் மற்றும் பொருட்கள் இருக்குமிடத்தைத் தீர்மானிக்க இயக்குனருக்கு உதவிய கலை இயக்குனர் கோகுல்தாஸ், வண்ணங்களை நிறைக்கத் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்திருக்கும் ஆடை வடிவமைப்பாளர்கள் சுஜித் சுதாகரன், ரதீஷ் சமரவட்டம் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் இதில் கணிசம்.
போலவே, இதில் விஎஃப்எக்ஸ் மற்றும் டிஐயின் பங்கைச் சரியான விகிதத்தில் பயன்படுத்தியிருப்பதும் பெரும் பாராட்டுக்குரியது. பின்பாதியில் பரங்கியர்களின் கோட்டைக்குள் புகுந்து மலைக்கோட்டை வாலிபன் போரிடும் காட்சிகள் அதற்கான உதாரணம்.
இந்த படத்தில் படத்தொகுப்பாளர் தீபு ஜோசப் தான் அதிகம் கெட்ட பெயரைச் சம்பாதித்திருக்கிறார். பின்பாதியை அவர் சீரமைக்க வேண்டுமென்றால், ஒட்டுமொத்தமாக வெட்டி தூக்கியெறிய வேண்டியிருக்கும். அது முடியாது என்பதால் அப்படியே விட்டிருக்கிறார்.
அனைத்தையும் தாண்டி, ’மலைக்கோட்டை வாலிபன்’ என்பது லிஜோ ஜோஸ் பெலிசேரியின் பார்வையை வெளிப்படுத்தும் ஒரு ஆக்ஷன் சித்திரம் என்று நினைவில் கொண்டால் ஒருமுறை பார்க்கலாம். அதனை ரசிக்கலாமா வேண்டாமா என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முகமது ஜூபேருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது!
‘கோவாவுக்கு பதிலாக அயோத்திக்கு தேனிலவு’ – விவாகரத்து கோரிய இளம்பெண்!