திரையில் விரியும் வாஜ்பாய் வாழ்க்கை!
அடல் பிஹாரி வாஜ்பாய். பாஜக தலைவர்களில் மென்மையானவர் என்ற பிம்பத்தைக் கொண்டவர். லால் கிருஷ்ண அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை விட ஒரு படி முன்னதாக அக்கட்சியின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டவர். அவரது அரசியல் வாழ்க்கை குறித்து, சாரங் தர்ஷனே எழுதிய ‘அடல்ஜி’ எனும் நூலைத் தழுவி ‘மெய்ன் அடல் ஹூன்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரவி ஜாதவ் இதனை இயக்கியுள்ளார்.
எத்தகைய காட்சி அனுபவத்தை இப்படம் நமக்குக் கொடுக்கிறது?
வாஜ்பாயிடம் நிகழ்ந்த மாற்றங்கள்!
இளம் வயதில் மேடைப்பேச்சுகளில் ஆர்வம் இருந்தாலும், கூட்டத்தைக் கண்டதும் பயமுறும் சுபாவம் கொண்டவராக இருந்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய். தந்தை கிருஷ்ண பிஹாரியின் வழிகாட்டுதலும் கண்டிப்புமே அவரது மனதை மடை மாற்றுகிறது. கவி மொழியில் அவரைப் பிரகாசிக்கச் செய்கிறது. வளர வளர, அவரது கவனம் பிராணாயாமம், உடற்பயிற்சிகள் என்று உடலையும் மனதையும் வலுவாக்குவதில் நிலைக்கிறது.
பதின்பருவத்தின் இறுதியில் கல்லூரிக்குச் செல்லும்போது, அவரது கவனம் சமூகச் சீர்திருத்தங்களின் பக்கம் திரும்புகிறது. அப்போது, அவர் ராஜ்குமாரி எனும் பெண்ணைச் சந்திக்கிறார். அப்பெண்ணின் இருப்பு அவருக்குள் ரசாயன மாற்றத்தை உருவாக்குகிறது. சில மாதங்களில் அப்பெண்ணின் குடும்பம் கான்பூரில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்கிறது. அந்த ஈர்ப்பும் நிறைவேறாக் கனவாகிறது.
இளம் வயதில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் ஆர்வம் மிக்கவராக இருக்கும் அடல், அதன் தலைவர்களைக் கண்டு பிரமிக்கிறார். அவர்களைப் போலவே தானும் ஆக வேண்டுமென்று எண்ணுகிறார். ஷ்யாமா பிரசாத் முகர்ஜியை சந்தித்தபிறகு, அவரது வாழ்வில் அந்த மாற்றம் தொடங்குகிறது. ஜனசங்கம் என்ற கட்சியின் சார்பாகச் செயலாற்றுகிறார்.
அறுபதுகளில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் அடல் பிஹாரி வாஜ்பாய், சுமார் பதினைந்து ஆண்டுகள் நல்லதொரு எதிர்க்கட்சி பிரதிநிதியாகச் செயல்படுகிறார். அவசரநிலை காலகட்டத்தில் அரசின் அடக்குமுறைக்கு ஆளாகிறார். 1977இல் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறார். சரண்சிங்கின் அரசியல் நிலைப்பாட்டால், அந்த அரசு கவிழ்கிறது.
1980இல் பாரதிய ஜனதா கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவராகத் திகழ்கிறார் வாஜ்பாய். வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தின்போது கரசேவையை அறிவிக்கிறது பாஜக. அதன்பிறகு பாபர் மசூதி இடிப்பு நிகழ்கிறது.
பின்னர், 1998 தேர்தலில் வாஜ்பாயை பிரதமர் வேட்பாளராகத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அறிவிக்கிறார் அத்வானி. அந்த தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. ஓராண்டில் அந்த ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அதற்குள் பொக்ரான் அனுகுண்டு வெடிப்பும் கார்கில் போரும் வாஜ்பாய் குறித்த பிம்பத்தை மாற்றியமைக்கின்றன. அதன்பிறகான தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராவதைச் சொல்வதோடு படம் முடிவடைகிறது.
விக்கிபீடியா பார்த்தாலே இத்தகவல்களில் பாதி நமக்குத் தெரிந்துவிடும். அவற்றையே இப்படத்தில் காட்சிகளாகத் தந்திருக்கிறார் இயக்குனர் ரவி ஜாதவ். வாஜ்பாயின் மனமாற்றங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல், அவரது தோற்றத்தில் நிகழ்ந்த மாற்றங்களைக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்.
பழைய புகைப்படத்தை நினைவூட்டும்!
வாஜ்பாயின் உதடுகளில் ஒருவிதப் பெருமிதம் தென்படும். முடிந்தவரை, அதனைத் திரையில் காட்ட முயற்சித்திருக்கிறார் பங்கஜ் திரிபாதி. அவர் குறித்த சித்திரங்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் அப்பாத்திரத்தின் தோற்றத்திலும் கைகள் அசைவிலும் கவனம் கொட்டப்பட்டுள்ளது. அதனைத் திறம்பட உள்வாங்கிச் செயல்பட்டிருக்கிறார் பங்கஜ். அவருக்குப் பாராட்டுகள் குவிவது நிச்சயம்.
இந்த படத்தில் வாஜ்பாய் தந்தையாக பியூஷ் மிஸ்ரா, அத்வானியாக ராஜா சேவக், தீனதயாள் உபாத்யாயா ஆக தயாசங்கர் பாண்டே, ஷ்யாமா பிரசாத் முகர்ஜியாக பிரமோத் பதக், எம்.எஸ்.கோல்வால்கராக பிரசன்ன கேட்கர், பிரமோத் மகாஜன் ஆக ஹர்ஷத் குமார், இந்திரா காந்தியாக பாயல் நாயர் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். அவர்களில் ராஜ்குமாரி கவுல் ஆக வரும் மது சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் இதம் சேர்க்கின்றன.
லாரன்ஸ் டி குன்ஹாவின் ஒளிப்பதிவு, சந்தீப் சரத் ராவடேவின் தயாரிப்பு வடிவமைப்பு, பண்டி நாகியின் படத்தொகுப்பு, மாண்டி சர்மாவின் பின்னணி இசை ஆகியன ஒன்றிணைந்து, திரையில் ஒரு ‘கிளாசிக் திரைப்படம்’ பார்க்கும் உணர்வை உருவாக்குகின்றன. அது, செம்பழுப்பு வண்ண புகைப்படத்தை உற்றுநோக்கும்போது மனதில் அக்காலகட்டம் தானாகத் தென்படுமே, அந்த மாற்றத்தை நிகழ்த்துகிறது.
இந்த படத்தில், ஒரு கமர்ஷியல் படத்திற்கு ஏற்றாற் போன்ற பாடல்களை பாயல் தேவ், கைலாஷ் கெர், அமித்ராஜ், சலீம் – சுலைமான் தந்துள்ளனர்.
ரிஷி விர்மானி உடன் இணைந்து இயக்குனர் ரவி யாதவ் எழுத்தாக்கம் செய்திருக்கிறார். அவர்களது பங்களிப்பு இன்னும் சிறப்பாக அமைந்திருந்தால், வாஜ்பாய் குறித்த செறிவான படமொன்றைப் பார்த்த திருப்தி நமக்குக் கிடைத்திருக்கும்.
சிலவற்றைத் தவிர்த்திருக்கலாம்!
‘மெய்ன் அடல் ஹூன்’ என்ற டைட்டிலே இப்படத்தில் பாஜக குறித்த பிம்பம் பெரிதாக இருக்கும் என்பதைச் சொல்லிவிடும். கிட்டத்தட்ட படமும் அதையே செய்திருக்கிறது.
இந்திரா காந்தி, சோனியா காந்தி போன்ற தலைவர்களையும், அவர்கள் சார்ந்த காங்கிரஸ் கட்சியையும் நேரடியாக விமர்சிக்கும் இடங்கள் திரைக்கதையில் உண்டு. காங்கிரஸ் கட்சியினர் அவற்றைக் கடுமையாக எதிர்க்க வாய்ப்புள்ளது.
வாஜ்பாயின் வாழ்வில் குறிப்பிட்ட காலகட்டத்தை மட்டும் எடுத்துக்கொள்ளாமல், ‘பறவைப் பார்வை’யில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது இப்படத்தின் பெரும் பலவீனம்.
அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அவரது தந்தை கிருஷ்ணா சம்பந்தப்பட்ட காட்சிகள் நகைச்சுவையூட்டும் நோக்கில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவை பெரிதாகச் சிரிப்பை வரவழைக்கவில்லை.
அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததற்கான காரணத்தைக் காட்சிகளில் உணர்த்தவில்லை. முக்கியமாக, 1990 முதல் 1998 வரையிலான காலகட்டத்தைத் திரையில் விரிவாகக் காட்டவில்லை. 2000இல் பொக்ரான் குண்டுவெடிப்புக்குப் பிறகு இந்தியா சந்தித்த பொருளாதாரத் தடைகளும், கார்கில் போரின் விளைவுகளும் படத்தில் இடம்பெறவில்லை.
அவற்றைச் சேர்க்காத காரணத்தால், பட்டம் பாதியில் அறுந்து பறந்தது போலத் தவிக்கிறது திரைக்கதை. அது போன்ற சில விஷயங்களைச் சரி செய்திருக்கலாம்.
படத்தில் இருக்கும் தகவல் பற்றாக்குறை காரணமாக, வாஜ்பாய் அபிமானிகள் கூட இப்படத்தை ரசிக்காமல் போகலாம். அதனைக் கருத்தில் கொண்டிருந்தால், படம் ஏற்படுத்தும் தாக்கமும் அதன் நீளமும் இன்னும் கொஞ்சம் கூடியிருக்கும். அது நிகழாத காரணத்தால், தற்போது ‘அடல் பிஹாரி வாஜ்பாயின்’ வாழ்வைப் பிரசாரத் தொனியில் சொல்லும் ஒரு திரைப்படம் என்ற இடத்தையே இப்படம் பெற்றிருக்கிறது.
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொகுதி உடன்பாடு, தேர்தல் அறிக்கை தயாரிக்க மதிமுக குழு அமைப்பு!
மீண்டும் பார்த்திபனின் புது முயற்சி: ‘TEENZ’ ஃபர்ஸ்ட் லுக்!
நடிகையை 3-வது திருமணம் செய்த சானியா மிர்சாவின் கணவர்… அப்போ அது உண்மை தானா?