புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வந்த தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணையத்தில் சட்டவிரோதமாக படங்களை வெளியிடும் முக்கிய தளமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் உள்ளது. திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியானால், அந்த தளத்தில் முறைக்கேடாக அன்றைய தினமே படங்கள் வெளியிடப்படுகின்றன.
இதனால் படத்தயாரிப்பாளர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த இணையதளத்தின் உரிமையாளர் பல நாட்களாக தேடப்பட்டு வந்தார்.
இதற்கிடையே பிரபல நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜின் மனைவி சுப்ரியா இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல திரையரங்குகளில் அம்மாநில சைபர்கிரைம் போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் வெளியான தனுஷின் ராயன் படத்தை திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் சட்ட விரோதமாக வீடியோ எடுத்துக்கொண்டிருந்த மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன் ராஜ் என்பவரை கொச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு படத்திற்கு ரூ.5000 கமிஷன் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த குற்றச்செயலில் 12 பேர் இணைந்து செயல்பட்டதும், தமிழ் ராக்கர்ஸ் தளம் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் ஸ்டீபன் ராஜ் படங்களை வெளியிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் மேலும் பல விவரங்கள் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Paris Olympics 2024: முதல் பதக்கம் வெல்லப்போவது யார்? – இந்திய வீரர்கள் போட்டி விவரம்!
Paris Olympics 2024: சாதித்த மனு பாக்கர்… பதக்கங்களை நோக்கி இந்திய அணி!