பேஷன் ஸ்டுடியோஸ் ‘தி ரூட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’.
நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ஜூன் 14 அன்று வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்களில் அதிக திரையரங்குகளில் வெளியானதுடன் முதல் மூன்று நாட்களில் அதிக வசூல் (ரூ.36.2 கோடி) செய்த படம் மகாராஜா.
வாரத்தின் இறுதி நாட்களை போன்றே தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் வசூல் குறையாமல் மகாராஜா திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருக்கிறது.
இந்த தகவலை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில் நேற்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், மணிகண்டன், அருள்தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர், விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.
அப்போது நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “மகாராஜா படத்தின் கதையை கேட்ட போது எனக்குள் பெரும் நம்பிக்கை உருவானது. ஆனால் கூறிய கதையை திரைக்கதையாக்கி எப்படி படமாக்க போகிறோம் என்கிற அச்சமும் இருந்தது.
சமீபகாலமாக எனது முந்தைய படங்கள் வெற்றி பெறாத நிலையில் தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை எடுத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தோம்.
இதற்கு முன்பு என்னுடைய சில படங்கள் சரியாக போகாததால், மகாராஜா படத்திற்கு திரையரங்குகளில் பேனர் கட்டும்போது ’விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் கட்டினால் மட்டும் கூட்டம் வந்து விடவா போகிறது?’ என்று சிலர் சொல்லி இருக்கிறார்கள். இதுபோன்ற பல்வேறு கேள்விகள், அழுத்தங்கள் என்னை சுற்றி இருந்தது.
ஆனால் மகாராஜா படத்தின் வசூல் அதற்கான பதிலாக அமைந்திருக்கிறது. மகாராஜா படத்தை பற்றி மாற்றுக் கருத்துகள் பலருக்கு இருந்தாலும் பெரும்பான்மையான பார்வையாளர்கள் மகாராஜாவை ஆதரித்திருக்கிறார்கள்.
பட வெளியீட்டுக்கு முன்பாகவே பத்திரிகையாளர்களுக்கு மகாராஜாவை திரையிட்டதால் ஊடகங்கள் படம் பற்றிய தங்களது விமர்சனங்களை முன்கூட்டியே மக்களிடம் கொண்டு சென்றது மகாராஜா பெரும் வரவேற்பை பெற காரணமாக அமைந்தது” என்று விஜய் சேதுபதி மகிழ்ச்சியுடன் பேசினார்.
தொடர்ந்து மேடையில் இருந்து படக்குழுவினர் ஒன்றாக கைக்கூப்பி ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
கள்ளச்சாராய மரணம் : உயர்நீதிமன்றத்தில் அதிமுக முறையீடு!
’கள்ளச்சாராயம்… காவல் துறையின் சில கருப்பு ஆடுகளால் தடுக்க முடியவில்லை’ : வைகோ