நீதிமன்றத்தில் கூறியதற்கு முரணாக வங்கி கணக்கில் விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் விஷாலை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 12) எச்சரித்துள்ளது.
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாதது தொடர்பாக நடிகர் விஷால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.21.29 கோடி கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது.
அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி ரூ.15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருந்தது, சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விஷாலுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி P.T.ஆஷா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார்.
அப்போது நீதிபதி, “உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளின்படி விஷால் சொத்து விவரங்கள் குறித்து மனுத்தாக்கல் செய்யவில்லை, 15 கோடி ரூபாயை இதுவரை உயர் நீதிமன்றத்துக்கு செலுத்தவில்லை, தன்னிடம் நிதி ஆதாரம் இல்லை எனத் தெரிவித்த அதே நாளில் ஒரு கோடி ரூபாயை மினி ஸ்டூடியோவிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவிப்பதாகும்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், “தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டதால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. நிதி ஆதாரம் இல்லை எனக் கூறிய நாளில் விஷாலின் வங்கிக் கணக்கில் 91 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “உயர் நிதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரலில் ரூ.15 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய உத்தரவை உறுதி செய்த பிறகும், சொத்து விவரங்கள் குறித்து மனுத்தாக்கல் செய்யாதது ஏன் மினி ஸ்டூடியோ தாக்கல் செய்த வங்கிக் கணக்கு விவரங்களில் 1 கோடியே 61 லட்ச ரூபாய் விஷால் வங்கிக் கணக்கில் இருந்ததாக கூறப்பட்டுள்ளதே” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், “அந்த தொகையில் இருந்து 90 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி. வரியாக செலுத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவு எதுவும் மீறப்படவில்லை. வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய சார்ட்டர்டு அக்கவுண்டண்டை நியமிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது நீதிபதி, “லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை எப்படி செலுத்தப்படும்? நீதிமன்ற உத்தரவின்படி 15 கோடி செலுத்தாவிட்டால் படங்களை வெளியிட தடை விதிக்கப்படும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஷால், லைகாவுக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்கவில்லை, உத்தரவாதம் அளித்து விட்டு அதை செயல்படுத்தவில்லை” என்றார்.
விஷால் தரப்பில், “சக்ரா படத்தின் ஓ டி டி மற்றும் சாட்டிலைட் உரிமை லைகாவிடம் உள்ளது. லைகா ஜி எஸ் டி செலுத்தாததால் விஷால் செலுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சு நடத்தினால் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்” என தெரிவிக்கப்பட்டது.
லைகா தரப்பில், “படங்களுக்கு ரூ.40 கோடி ஊதியம் பெற்றுள்ள விஷால், பணத்தை செலுத்தாவிட்டால் நடிப்பதை நிறுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் கூறியதற்கு முரணாக வங்கி கணக்கில் விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் விஷால் தொடர்பான அனைத்து படங்களையும் எதிர்காலத்தில் தடை விதிக்கலாமா, சொத்து விவரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு விஷால் தரப்பில் அந்த மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அப்போது மினி ஸ்டூடியோ தரப்பில், 60 கோடி செலவு செய்து மார்க் ஆண்டனி படத்தை தயாரித்து, 1400 ஸ்கிரீனில் வெளியாக உள்ளது. படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதி, மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மேலும், விஷாலின் நான்கு வங்கிக் கணக்குகளின் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன, சொத்து ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஆஷா, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19 ம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், அடுத்த விசாரணையின்போது விஷால் ஆஜராக தேவையில்லை எனவிலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.
செல்வம்
பட்டியலின சமையலர் : கனிமொழி ஆய்வு – முடிவுக்கு வந்த பிரச்சினை!
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’: டீசர் எப்படி?