பாலிவுட் இயக்குநர் விகாஷ் பாஹல் இயக்கத்தில் மாதவன், அஜய் தேவ்கன், ஜோதிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (பிப்ரவரி 22) வெளியாகியுள்ளது.
திரைப்படத்திற்கான கதையை கிருஷ்ணதேவ் யக்னிக் எழுத, திரைக்கதையை ஆமில் கியேன் கான் எழுதியுள்ளார். படத்தின் இயக்குநர் விகாஷ் பாஹல் முன்னதாக ‘சில்லர் பார்ட்டி’, ‘குயின்’, கோயிங் ஹோம்’, ‘ஷாண்டர்’, ‘சூப்பர் 3௦’, ‘குட்பை’, ‘கண்பத்’, என 7 படங்களை இயக்கியுள்ளார்.
அந்தவகையில் இந்த ‘சைத்தான்’ அவரின் 8-வது படமாகும். மேலும், இவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான ‘தேவ் டி’, ‘அக்லி’, ‘ராமன் ராகவ் 2.0’ போன்ற படங்களின் இணை தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரெய்லர் எப்படி இருக்கிறது?
அஜய் தேவ்கன் – ஜோதிகா தம்பதியினரின் குடும்பத்திற்குள் அழையா விருந்தாளியாக நுழைகிறார் மாதவன். மெல்ல, மெல்ல அஜய் தேவ்கனின் மகளை வசியம் செய்து ஆட்டிப்படைக்கத் தொடங்குகிறார்.
மாதவன் கதாபாத்திரத்திற்குப் பின்னே உள்ள அமானுஷ்யமும், அவரிடம் இருந்து தப்பிக்கப் போராடும் அஜய் தேவ்கனின் குடும்பத்திற்கும்-மாதவனுக்கும் இடையே நடக்கும் போராட்டமும் தான் ‘சைத்தான்’ கதையாக இருக்குமெனத் தெரிகிறது.
ட்ரெய்லர் எடிட்டில் இருக்கும் அதே விறுவிறுப்பு படத்தில் பாதி அளவேனும் இருந்தால் கூட திரில்லர் பட விரும்பிகளுக்கு ஒரு விருந்தாக இந்தத் திரைப்படம் இருக்கக்கூடும். அமித் திரிவேதியின் இசை, சுதாகர் ரெட்டியின் ஒளிப்பதிவு, நடிக-நடிகையர்களின் நடிப்பு என அனைத்துமே ட்ரெய்லரில் மிக நேர்த்தியாக உள்ளது.
மாதவன்
குறிப்பாக வில்லன் வேடத்தில் நடித்துள்ள மாதவன் நம்மை மிரள வைக்கிறார். உலகப் புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியர் பிளேக் ஸ்னைடர், திரைக்கதைகளை பத்து வகைகளாகப் பிரித்துள்ளார். உலகம் முழுக்க எடுக்கப்பட்ட, எடுக்கப்படுகின்ற திரைப்படங்கள் இந்த பத்து வகைகளுக்குள் தான் அடங்கும் என்பது ஸ்னைடரின் கூற்று.
அந்த வகையில் இந்த ’சைத்தான்’ திரைப்படம் அவர் வகைப்படுத்திய ‘மான்ஸ்டர் இன் தி ஹவுஸ் (monster in the house)’ என்கிற வகைக்குள் அடங்குவதாகத் தெரிகிறது.
இந்த வகையில் பொதுவாக பல ஹாரர் திரைப்படங்கள் இந்திய சினிமாவில் எடுக்கப்பட்டு இருந்தாலும், அந்த வகைக்கு மிகச் சரியான எடுத்துக்காட்டாக சமீபத்தில் வெளியான ‘பிரமயுகம்’ திரைப்படத்தை சொல்லலாம்.
ஏறத்தாழ இந்தத் திரைப்படமும் அப்படியான ஒரு புதுமையான திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்கிற நம்பகத்தன்மையை ட்ரெய்லர் தருகிறது.
அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த ‘சைத்தான்’ வருகின்ற மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது.
-ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலக்ஷன் ஃபிளாஷ் : பானையை தக்க வைக்க திருமாவின் திடீர் உத்தி!
’தெளிவாக எழுதி கொடுங்கள்’ : மருத்துவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!