உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று (ஜூன் 29) தமிழகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் இசை, மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி ஜூன் 1 அன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விழா, மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்பதால் இந்த விழாவில் இயக்குநர் மாரி செல்வாஜ் பேசியது ஊடகங்களில் பிரதானமாக வெளிவராமல் போனது.
இசை வெளியீட்டு விழா தொகுப்பு தனியார் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான பின்பு மாரிசெல்வராஜ் தேவர் மகன் திரைப்படம் பற்றி பேசியது விவாத பொருளானது.
மாரி செல்வராஜ் பேசியது சம்பந்தமாக அவரோ நடிகர் கமல்ஹாசனோ நேரடியாக பதில் கூறவில்லை. சிலர் படத்திற்கு எதிராக வழக்கு, புகார் என்கிற முயற்சிகளில் ஈடுபட்டது வெற்றி பெறவில்லை.
தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில சமூக அமைப்புகள் மாமன்னன் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டாம் என்று தங்கள் சமூக கூட்டங்களில் முடிவு எடுத்துள்ளனர்.
இதனை அச்சமூகம் சார்ந்த அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கமல்ஹாசனுக்கு அதிகளவில் ரசிகர்கள் இருப்பது தென் மாவட்டங்களில் தான். அவர்களும் இது போன்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மாமன்னன் படத்தை திரையிட திரையரங்குகளிடம் ரஜினிகாந்த், விஜய் படங்களுக்கு இணையாக டேம்ஸ் (பங்குத்தொகை 70%-30%) கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
அதன் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கடேஷன் திரையரங்குகளை நடத்துவதா, மூடுவதா என கேள்வி எழுப்பியதுடன் கள்ள சாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசு எங்களை போன்ற தொழில் செய்பவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில்லை.

சங்க தலைவர்கள் தங்கள் அளவில் பலன் அடைந்து கொண்டு எங்களை போன்றவர்களை கண்டு கொள்வது இல்லை என விரக்தியில் பேசிய ஆடியோ பதிவை பொது வெளியில் வெளியிட்டார். இது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் ஜூலை 11 அன்று ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கிடையில் தமிழ்நாடு முழுவதும் தயாரிப்பாளருக்கு70% திரையரங்குக்கு 30% என்கிற அடிப்படையில் மாமன்னன் திரைப்படத்தை திரையிட திரையரங்குகளுக்கு நெருக்கடி கொடுத்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களுக்கு 50% என்பதே அதிகபட்சமானது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்பு ரெட் ஜெயண்ட் நிறுவனம் கூறுகிற அடிப்படையில் ஒப்பந்தம் செய்ய வேண்டியுள்ளது.
இல்லையென்றால் தொடர்ச்சியாக புதிய படங்களை தங்கள் திரையரங்கிற்கு தரமாட்டோம் என கூறுகின்றனர். கோடிக்கணக்கில் முதலீடு செய்த தியேட்டரை மூடி வைக்க முடியாதே என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.
எங்களது பயம் அவர்களது பலமாக இருக்கிறது. ஆளும் கட்சி, மந்திரி என்பதற்காக ரஜினிகாந்த் படங்களுக்கு இணையாக டேம்ஸ் கேட்பது பொருத்தமற்றது என கூறும் திரையரங்க உரிமையாளர்கள் எங்களுக்காவது முதல் வாரம் மட்டுமே 70% – 30% திருச்சி ஏரியாவில் இரண்டு வாரங்களுக்கு 70% – 30% என ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சினிமாவில் இது போன்ற நிலையை தியேட்டர்கள் முன் எப்போதும் எதிர்கொண்டது இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின் திரையரங்கு தொழில் சம்பந்தமான அனைத்து செலவினங்களும் அதிகரித்து உள்ளது, சொத்துவரி, மின்சார கட்டணம் என எல்லாமே அதிகரித்து உள்ளது.
ஆனால் திரையரங்குகளுக்கான பங்கு தொகையை தொடர்ச்சியாக குறைத்து வருகிறது இது எந்த வகையில் நியாயம் என்கிற புலம்பல்கள் திரையரங்குக உரிமையாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இராமானுஜம்
எச்-1B விசா வைத்திருப்பவர்களுக்கு கனடாவில் பணிபுரிய வாய்ப்பு!