திரைப்படம் ஒன்று திரையரங்குகளில் ஓடியதை காட்டிலும் உலகம் முழுவதும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட காட்சிகளின் எண்ணிக்கை அதிகம் என்றால்” மாமனிதன்” படத்தை குறிப்பிடலாம்.
‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ போன்ற சமூகம் சார்ந்த, எளிய மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாமனிதன்’.
யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர்.
இந்த திரைப்படத்தை முடிப்பதற்கு இயக்குநராக சீனுராமசாமி எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம் பாடல் பதிவு, பின்னணி இசைகோர்ப்பு போன்ற பணிகள் நடைபெற்றபோது படத்தின் இயக்குநரான சீனுராமசாமியை இசையமைப்பாளர் இளையராஜா அனுமதிக்கவில்லை.
உரிய நேரத்தில் இயக்குநர் அமீர் தலையிட்டு தனக்கு உதவியதாக சீனுராமசாமி கூறியிருந்தார்.
அதன் பின்னரும் பல்வேறு பிரச்னைகளால் இத்திரைப்படத்தின் வெளியீடு தாமதமாக, 2022 ஜூன் மாதம் வெளியானது. இந்தப் படம், பல சர்வதேச விருதுகளைக் குவித்தது.
இந்நிலையில், மாமனிதன் திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச விருதைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் பிப்ரவரி 18-26 வரை நடைபெற்ற 29-வது செடோனா சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த உத்வேகம் தரும் திரைப்படம் என்ற விருதை வென்றுள்ளது.
இதுபற்றி விருதை பெற்றுக்கொண்ட பின்னர் பேசிய சீனு ராமசாமி, “இந்த விருது குறித்து எனக்கு இ-மெயில் வந்ததை நான் எதிர்பார்க்கவில்லை. இவிருதினை வழங்கிய விழாக்குழுவினருக்கு நன்றி.
முக்கியமாக நான் இங்கு வருவதற்கு உதவியாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி. என் விஜய்சேதுபதிக்கும் நன்றி. இந்த விருதினை புகழ்பெற்ற இயக்குநர் சத்யஜித்ரே-விற்கு அர்ப்பணிக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
இராமானுஜம்
வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு!
மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை : விரைவில் முடிவு!