சாகப்போனேன், சாகவில்லை என்ற பாடலை பாடிய வாணி ஜெயராம் அந்த பாடல் வரியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு சினிமா நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராம் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “வாணி ஜெயராம் அம்மாவின் இழப்பு திரை உலகிற்கும் இசை உலகிற்கும் ஈடு செய்ய முடியாதது. அவர் பாடிய அழகான பாடல்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேகமே மேகமே என்ற அவர் பாடிய பாடலில் எனக்கு ஒரு மலர் மாலை நீ வாங்க வேண்டும். அது எதற்கோ என்ற வரி வரும். அவரது உடல் மீது மலர் மாலை வைத்த பிறகு மேகமே மேகமே பாடல் வரிகள் தான் மனதிற்குள் நிற்கிறது.
அவருடைய குரல் மிகவும் துல்லியமானது. அந்த குரலை யாராலும் நிரப்ப முடியாது. புன்னகை மன்னன் திரைப்படத்தில் கவிதை கேளுங்கள் என்ற பாடலில் சாகப்போனேன், சாகவில்லை என்று பாடியிருப்பார். அந்த வரியாக தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது மாதிரியான கலைஞர்களுக்கு எப்பொழுதுமே மரணமில்லை. அவர்கள் எப்பொழுதுமே நமது கூடவே இருப்பார்கள்.” என்று தெரிவித்தார்.
செல்வம்
கலைமூச்சை நிறுத்திக் கொண்ட கூத்துப் பறவையின் இறுதி காலம்!
இன்று தைப்பூசம்: முருகன் வேல் வாங்கிய நாள்!
அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!