தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் மார்ச் 30 அன்று தொடங்க உள்ளது.
தேர்தல் என்றாலே வாக்குறுதிகள், பரிசுகள், இத்யாதிகள் என்ற இலக்கணத்துக்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தலும் விதிவிலக்கல்ல. இந்த நிலையில் புதிய முன்னேற்றமாய்… தயாரிப்பாளர் சங்கத்தை லைகா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் கைக்குள் கொண்டுவருவதற்காக இந்தத் தேர்தலை பயன்படுத்திக் கொள்வதில் தீவிரமாக இருக்கின்றன.
போட்டியிடும் அணிகள்
இந்தத் தேர்தலில் இப்போது தலைவராக இருக்கும் தேனாண்டாள் முரளி ராமசாமி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்குகிறது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளி ராமசாமியும், துணைத் தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் அர்ச்சனா கல்பாத்தி, செயலாளர்களாக ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் ஆகியோரும் பொருளாளராக சந்திர பிரகாஷ் ஜெயினும் போட்டியிடவிருக்கின்றனர்.
புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இணைச்செயலாளர் பதவிக்கு சவுந்தர் போட்டியிடுகிறார்.
இப்போது செயலாளராக இருக்கும் மன்னன் தலைமையில் ஓர் அணி உருவாகியிருக்கிறது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு மன்னனும் செயலாளர்களாக கமீலாநாசர் மற்றும் தேனப்பன், துணைத்தலைவர்களாக மைக்கேல்ராயப்பன், விடியல்ராஜு ஆகியோர் போட்டியிடவிருக்கிறார்கள்.
இந்த அணியில் பொருளாளராக லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் போட்டியிடுகிறார். இணைச்செயலாளர் பதவிக்கு சி.மணிகண்டன் போட்டியிடுகிறார்.
இரண்டு அணிகளிலும் செயற்குழு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தயார் செய்வதில் குழப்பம் நீடிக்கிறது.
கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் தயாரிப்பாளர் சங்கம்!
தயாரிப்பாளர்கள் சங்கத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கார்ப்பரேட் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன என்கிற குரல்கள் அழுத்தமாக எழும்ப தொடங்கியுள்ளன.
தமிழ் சினிமாவில் அதிக முதலீடு செய்து வரும் லைகா, ஏஜிஎஸ் நிறுவனங்களில் இருந்து துணை தலைவர்கள் பொறுப்புக்கு இருவர் போட்டியிடுகின்றனர். வழக்கமாக சங்க தேர்தலில் வாக்காளர்களுக்கு அன்பளிப்புகள் பொருட்களாக, வங்கி கணக்கு மூலம் பணப்பரிமாற்றங்கள் நடைபெறும்.
சுமார் 3 கோடி ரூபாய் வரை இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் மூலம் செலவு செய்யப்படும் என்கிறார் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.
மேலும் அவர், “தேர்தல்களில் இவர்கள் கூறும் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவோ, அமுல்படுத்தவோ முடியாது கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் தயாரிப்பவர்கள், மருத்துவ காப்பீடு, தேர்தல் காலங்களில் கிடைக்கும் முறைகேடான பணப் பயன்களை எதிர்பார்த்து கையேந்தும் நிலையில் இருக்கிறார்கள்.
பிற மாநிலங்களில் எப்படி?
பிற மாநிலங்களில் தயாரிப்பாளர்கள் இப்படி கையேந்தும் அவலநிலையில் இல்லை. காரணம் அங்கெல்லாம் படத்தயாரிப்பு, வியாபாரங்களில் ஒரு ஒழுங்கும், நேர்மையும் இருக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் கறாராக இருப்பதுடன், கடுமை காட்டி வருகின்றன.
தயாரிப்பாளர்கள் முதலீட்டை பாதுகாக்கவும், லாபம் இல்லை என்றாலும் நஷ்டமடையாமல் இருக்க தயாரிப்பாளர்கள், நடிகர் சங்கங்கள் ஒத்துழைப்பு தருகின்றனர்.
அப்படிப்பட்ட எந்தவொரு சாதகமான, ஆக்கபூர்வமான செயல் திட்டங்களை கடந்த கால் நூற்றாண்டுகளாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மேற்கொண்டதில்லை. தேர்தல் என்பது இங்கு ஒரு சடங்காக மாறிவருகிறது” என்றார்.
சில தயாரிப்பாளர்கள் கூறுகையில், “எப்போதோ ஒரு படம் எடுத்து விட்டு தயாரிப்பு தொழிலை கைவிட்டு விவசாயம், வேறு தொழில் செய்து வசதியாக இருப்பவர்கள் கூட தேர்தல் கால பணப் பயன்கள், தயாரிப்பாளர்கள் சங்க மருத்துவ காப்பீட்டுக்காக வரிசைகட்டி நிற்பதால் உண்மையில் படம் தயாரிப்பவர்கள் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்கி தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்கள்.
இந்தநிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மட்டுமே வலிமையானது, ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்றது என்பதை சங்க உறுப்பினர்கள் மத்தியில் அழுத்தமாக பதிய வைக்கவும், தங்களது வெற்றியை உறுதிப்படுத்தவும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்பில் இருவரை தங்கள் அணியில் வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர்.
லைகா காட்டும் ஆசை!
அத்துடன் இல்லாது சங்க நல நிதிக்காக லைகா நிறுவனத்தின் சார்பில் நேற்று மாலை ஐம்பது லட்ச ரூபாய்க்கான காசோலையை லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா தற்போதைய சங்க நிர்வாகிகளிடம் வழங்கியிருக்கிறார்.
இதன்மூலம் நாங்கள் இடம்பெற்றுள்ள, அல்லது ஆதரிக்கும் அணிக்கு வாக்களித்தால் ஏராளமான பயன்கள் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் என்பதை லைகா நிறுவனம் சொல்லாமல் சொல்லியிருக்கிறது” என்கின்றனர்.
இதற்கிடையில் நிர்வாகிகளுக்கான தேர்வை போட்டி இன்றி, பேச்சுவார்த்தை மூலம் ஒருமனதாக தேர்வு செய்ய மூத்த தயாரிப்பாளர்கள் சிலர் மேற்கொண்டுள்ளனர்.
அப்படி ஒரு முடிவு ஏற்பட்டுவிட்டால் தேர்தல் நேரத்தில் கிடைக்ககூடிய பணப் பயன்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் சுமுகமான முடிவு ஏற்படாமல் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் என்றாலே அது எங்கே நடந்தாலும் இப்படித்தானா?
–இராமானுஜம்
விண்ணில் அதிசயம் : வைரலாகும் அமிதாப் பச்சன் வீடியோ!
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!